கடந்த 15th ஜனவரி அன்று திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி திருக்கோவில் கோபுரம், கோவிலின் உட்பகுதி மற்றும் ஏன் கோவில் வளாகம் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்த காட்சியைக் காண கண் கோடி வேண்டும். கோடி சூர்யப்ரகாசம் நுழைந்தது போன்ற கண்களை பறிக்கும் ஒளிக்காட்சியில் பக்தர்கள் திளைத்து விட்டனர்.
லக்ஷ தீபம் என்னும் பிரகாசமான பெரும்பெயரை சுமந்து கொண்டு பக்தர்களை அருள் ஒளி வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்தது இந்த நிகழ்வு. முரஜபம் என்னும் நீண்ட நெடும் பயணமான 56 நாட்கள் நான்கு வேதங்களின் வேள்விதனின் இறுதி நாளைக்குறிக்கும் வண்ணம் நூறு ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு தக தக என மின்னி விழாவை நிறைவு செய்த நிகழ்வு இது. மகர சங்கராந்தி அன்று பக்தர்களுக்கு கிடைக்கும் தரிசனம் வைகுண்ட ப்ரியதர்சனத்திற்கு ஒப்பாகக் கருதப்படுகிறது.
உலகத்தில் பணக்கார கோவில்களில் ஒன்றான அருள்மிகு பத்மநாபஸ்வாமி திருக்கோவிலில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி முரஜபம் என்கின்ற தவ வேள்வி துவங்கியது. அன்றிலிருந்து 56 நாட்கள் காலகட்டத்தை ஏழு ஏழு நாட்கள் என்கின்ற சீரான முறையில் எட்டு சுற்றுக்கள் ( ரௌண்டுகள்) என்று கொண்டு எல்லா வேதங்களின் மந்திரங்கள் தினசரி ஓதப்பட்டு வந்தது. நாடு முழுவதிலுமிருந்து வேத விற்பன்னர்கள் இக்கோவிலில் கடந்த பல வாரங்க ளாக நான்கு வேதங்களை ஓதி பக்தர்களை வேத ஒலி தன்னில் மிதக்க விட்டனர். இந்த ஜெப நிகழ்வுகளின் இறுதி நாளில் தான் லக்ஷதீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஸ்ரீமன் நாராயணர் சீவேலியாகப் பிரகாரத்தில் பிரவேசித்தார். இத்தகைய பிரவேசம் முரசீவேலி என்று தொன்று தொட்டு அழைக்கப்பட்டு வருகிறது.
கர்தவீரஅர்ஜுன என்னும் மன்னன் காலத்திலிருந்தே இத்தகைய முரஜெபம் கொnடாடப்பட்டு வருகிறது. தனது குடிமக்களின் நலன் வேண்டி அத்ரி புத்ர தத்தாத்ரேயரை வழிகாட்டுமாறு வேண்ட, அவர் வழிகாட்டுதலின் படி, நர்மதை நதிக்கரையில் மஹிஷ்மதி என்கின்ற இடத்துக்குச் சென்று பத்ரதீபம் அல்லது முரஜெபம் என்கின்ற ஜெபவேள்வியை நடத்தினான்.
ஆறு வருடங்களுக்கு ஒருமுறை இந்த முரஜப வேள்வி இக்கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இவ்வளவு பெரிய திருவிழா பாரதத் திருநாட்டின் தென்மேற்கு கோடி மாநிலத்தில் இக்கோவிலில்தான் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
108 திவ்யக்ஷேத்ரங்களில் ஒன்றான இத்திருக்கோவில் . சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. அனந்த பத்மநாபஸ்வாமி திருக்கோவில் பற்றிய குறிப்புக்கள் ஸ்ரீமத் பாகவதத்தில்(Canto 10, Chapter 79) வரையப்பட்டுள்ளன. இத்திருக்கோவிலின் ஸ்ரீபத்மதீர்த்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் சகோதரரான ஸ்ரீ பலராமர் நீராடி ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமியை தரிசித்தித்துச் சென்றதாகவும் குறிப்புக்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமி மீது பத்து பாசுரங்கள் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்திருக்கோவிலின் பழமை பற்றி நாம் அறியலாம்