தேர்தல்

ஜனநாயகம் என்றாலே நம் மனக்கண் முன் வருவது வோட்டுப் பெட்டியும் – தற்போது வோட்டுப் பதிவு இயந்திரம்- நீண்ட ‘கியூ’ வரிசையில் மக்கள் நிற்பதும், கை விரல் மையும்! ஆனால் ஜனநாயகம் என்பதின் ஒரு வடிவம்தான் இது. இது ஒன்று மட்டுமே ஜனநாயகம் ஆகிவிடாது. தற்போதைய நவீன  பார்லிமெண்டரி டெமாகிரசி என்பதன் வடிவம் இது!

ஜனநாயகம் என்றால் ‘கருத்து அறிதல்’. “நீ என்ன நினைக்கிறாய்?”- என்று மிக எளிய மனிதன் முதல் மிக முக்கிய சமூக அந்தஸ்து பெற்றவர் வரை சகலரிடமும் கேட்கப்படும் கேள்வி – “உன் கருத்து என்ன?”. இதை நாம் குடும்பங்களில் கூட மிக சாதாரணமாகக் காண முடியும். “என்கிட்ட ஒருவார்த்தை கேட்டு இருக்கலாமே?” – என்ற குரல் நமது குடும்பங்களில் அடிக்கடி எழுவது உண்டு! ஆக எனது கருத்தும் கேட்கப்பட வேண்டும்- நான் என்ன நினைக்கிறேன் என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்பது மனிதர்களின் இயற்கையான ஆசை.

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் “ஜனநாயகம்” என்பது மிக மிக சமீப நூற்றாண்டுகளில் எழுந்த மறுமலர்ச்சி. நமது பாரத தேசம் கல்வி, கலை -சிற்ப- தத்துவ நுட்பங்களில் மிகச் சிறந்து விளங்கிய பொற்காலம் அது, சில நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட அந்த ஐரோப்பிய தேசங்கள் வேட்டைச் சமுதாயக் குழுக்களாக இருந்தன! பிறகு அவை மெல்ல மெல்ல “அரசு” களாகப் பரிணமித்தன. – அதுவும் மிக இறுக்கமாக வாட்டிகன் எனப்படும் நகரில் இருந்து ஆணை பிறந்து, கத்தோலிக்க திருச்சபையின் பிடியில் இருந்த அரசுகள்! அவை தங்களைக் கத்தோலிக்க சபையின் பிடியில் இருந்து  விடுவித்துக் கொண்டு “நாடாளுமன்றம்” என்ற அமைப்பை மாக்னகார்ட்டா  என்ற மஹா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்கிலாந்தில் உருவாக்கியதில் இருந்துதான் அவர்களுக்கு “ஜனநாயகம்” தொடங்குகிறது.  ஆனால் நமது பாரத மண்ணில் மக்கள் கருத்தை அறிதல் என்பது குடவோலைச் சீட்டு இருந்த காலத்தில் இருந்து வந்துள்ளதை நாம் அறிவோம். அது மட்டுமல்ல – ஆட்சி முறை என்பது மன்னர் ஆட்சியாக இருந்தாலும், மக்கள் கருத்தை அறிதல் என்ற பண்பாடு மன்னர்குல வழக்கமாகவே இருந்து உள்ளது! மாறுவேடம் பூண்டு இரவு நேரங்களில் “நகர் உலா” வருவது மன்னர்களின் வழக்கம்! உரிய அமைச்சரையும் உடன் அழைத்துக் கொண்டு ராஜ்யத்தின் பல பகுதிகளில் – தாம் மன்னர், அமைச்சர் என்று காட்டிக் கொள்ளாமல்- ராஜ்யவலம் வந்து மக்களின் நிறை குறைகளை மன்னர்கள் கேட்டறிந்த வரலாறு உண்டு! சில சமயம் மன்னருக்கே தெரியாத அரண்மனை ரகசியங்கள் சாதாரண வழிப்போக்கன் வாயிலாக மாறுவேடம் பூண்ட மன்னன் முன்பு வெளிப்பட்ட கதைகளும் உண்டு!

இப்போது நாம் கடைப் பிடிக்கும் ஜனநாயகத்தில்  குறைகள் உண்டா? இதைப் பற்றிய விமர்சனங்கள் உண்டா?நிறையவே உண்டு. உதாரணமாக ஒரு தொகுதியில் ஒரு லட்சம் வோட்டு பதிவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 5௧,000 வோட்டு பெற்றவன்  வெல்கிறான் 49000 வோட்டு பெற்றவன் தோற்கிறான். அப்படித் தோற்றவனின் கட்சியானது  இப்படியே மிகக் குறுகிய வோட்டு வித்தியாசத்தில் சுமார் 100 தொகுதிகளை இழக்கிறது என்றால், அதற்கு வாக்களித்தவர்களின் குரல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படுகிறது! இப்படி ஒரு விமர்சனம்! இதுபோக ஓட்டுப் பெட்டி வைத்து வாக்குச் சீட்டு இருந்த காலத்தில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை இவை எல்லாம் இல்லாமல் இருந்த காலத்தில் – கள்ள ஓட்டுகள், ஓட்டுப் பெட்டியையே தூக்கிச் செல்லுதல் போன்றவை ஆங்காங்கு சில இடங்களில் நடை பெற்றாலும் கூட அவை நமது ஜனநாயகத்தின் கரும்புள்ளிகளாகக் காட்சி அளித்தன. இப்போது கம்ப்யூட்டர் விஞ்ஞானத் தொழில் நுட்பத்தின் காரணமாக அவை பெருமளவு தவிர்க்கப் பட்டுள்ளன.

ஆனால் இப்படி சில விமர்சன அம்சங்கள் இருந்தாலும் நமது ஜனநாயகம் மகத்தானது. 5 வருடங்களுக்கு ஒருமுறை – அல்லது ஒரு அரசு மெஜாரிட்டி இழந்து எப்போது நிற்கிறதோ அப்போதெல்லாம் – மக்களை அணுகுகிறாள் பாரத அன்னை. “எனதருமை மக்களே, இந்த மண்ணை யார் ஆள வேண்டும் என்று நினைக்
கிறீர்கள்? உங்கள் கருத்து  என்ன?”- என்று அந்தத் தாய் தனது கோடிக்கணக்கான மக்களைக் கேட்கிறாள்! சலிக்காமல் கேட்கிறாள்! முகச் சுளிப்பு சிறிதும் இன்றி செவியூன்றிக் கேட்கிறாள்! “உனது கருத்தைச் சொல்”!

ஆனால் இந்த வரம் உலகின் பல பகுதி மக்களுக்கு இல்லை! ஆட்சி மாற்றம் என்றாலே ரத்தக் களறி! அல்லது ஆட்சி தொடர்தல் என்றாலும் முழுமையான அடக்குமுறை! உலகின் சின்னச் சின்ன தேசங்கள்! நமது பரந்த பாரத மண்ணின் நான்கு மாவட்டங்களை சேர்த்தால் அதன் அளவு கூட ஈடாகாத தேசங்கள்! உதாரணம் ருவாண்டா என்ற சின்னஞ்சிறு ஆப்பிரிக்க தேசம்! அதன் மொத்த ஜனத் தொகையே அப்போது 10 லட்சத்தை தொட்டிருக்குமா என்பது சந்தேகம்! அதில் 1990களின் இறுதியில் ஒரு இனமே அழிக்கப்பட்டு அதிகாரப் பகிர்வு நடந்த வரலாறு உண்டு! இது ஒரு சிறு உதாரணம். இன்னும் எண்ணற்ற தேசங்கள் – குறிப்பாக ஆப்பிரிக்க தேசங்கள்- இன்ன பிற ஐரோப்பிய தேசங்கள் தேசப் பிரிவினை, இன மோதல், அதிகாரப் பசி… -இப்படிச் சின்னா பின்னம் ஆகித்தான் ஆட்சி மாற்றங்களை அல்லது ஆட்சி தொடர்தல்களை சந்திக்கின்றன.

போஸ்னியா, சிரியா, செக், ஸ்லோ வேகியா, உகாண்டா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான்… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ரத்தக் களரிகளின் நெடிய வரலாறு உலக வரைபடத்தில் தேசங்களாக உருவெடுத்து இருக்கின்றன.

ஆனால் நமது பாரத மண், சுதந்திரத்தின் போது 1947ல் சரியான அரசியல் தலைமை இல்லாததால் ஒரு நீங்காத வடுவாக பாகிஸ்தான் என்ற பிரிவினைக்கு – பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் படேல் போன்றவர்கள் புறக்கணிக்கப் பட்டதாலும்- காஷ்மீர் சிக்கல் உருவெடுத்ததாலும் -இன்றளவும் தொடரும் சிக்கல்களுக்கு ஆளானது உண்மைதான். ஆனால் பிரிட்டிஷ் பிடியில் இருந்து விடுபட்ட பாரதம் தனது ஜனநாயகத்தை இன்று வரை கட்டிக் காத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. பிரிவினை சூழ்ச்சியில் நம்மோடு சேர்ந்து பிறந்த பாகிஸ்தான் இன்றுவரை ஒரு முழுமையான ஜனநாயகமாக மலர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதும் வரலாறு!

செலவு செய்து நமது பாரத தேசம் மக்களிடம் கேட்கும் ஒரே கேள்வி:- “நீங்கள் யாரை ஆட்சியாளராக ஏற்க விரும்புகிறீர்கள்…?” உலகின் பல லட்சம் மக்களிடம் சர்வாதிகார ராணுவ அரசுகளால் கேட்கப்படாத கேள்வி! கோடீஸ்வரனோ, ஏழையோ, பாமரனோ, படித்தவனோ, அதிகார வலிமை பெற்றவனோ, நிர்க்கதியாக நிற்பவனோ…- எவராயினும் சமமாக மதித்து கேட்கப்படும் கேள்வி:- “உனக்கு யார் ஆட்சியாளராக வேண்டும்?”

எனவே அந்தக் கேள்வியின் மகத்துவத்தை அறிவோம். ரத்தம் சிந்தலும், அகதிகளாக ஓட்டமும் கட்டிடங்களின் மீது குண்டு மழைப் பொழிவும் … எதுவும் இல்லாமல் மிக நாகரீகமான முறையில் ஒரு ஆட்சி தொடர வேண்டுமா அல்லது ஏதேனும் மாற்றம் வேண்டுமா- என்பதை மிக வெளிப்படையாகக் கேட்கும் நமது பாரத மண்ணின் ஜனநாயகத்தை மதிப்போம்.

எனவே ஓட்டளிப்போம்! நமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்! பாரத அன்னை நமக்கு மரபு வழியாக அளித்துள்ள பொக்கிஷமான “கருத்து அறிதல்” என்ற மரபுக்கு வலிமை ஊட்டுவோம்!