ஒரு வழக்கு
நடிகர் சல்மான் கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதி மன்றம். வழங்கிய தீர்ப்பு பற்றிய விவாதத்தை ஒரு தொலைக்காட்சி நடத்தியதில் கலந்து கொண்ட மத அறிஞர் என கூறப்படுபவர், உதிர்த்த வார்த்தைகள் கடுமையான விமர்சனத்திற்குரியது. ‘இஸ்லாமியர் என்ற காரணத்தினால் தண்டனை வழங்கப்பட்டது. 2014க்கு பின்னால் அப்பாவி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். என்கவுண்டர் என்ற பெயரில் முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்’ என பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார்.
1998-ல் ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் ஒரு சினிமா படப்பிடிப்பின் போது, இரவில் வனப்பகுதியில் அரிய வகை மான்கள் உலாவிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மான்களை சல்மான் கான் வேட்டையாடினார் என்பது தான் குற்றச்சாட்டும், வழக்கும். 20 வருடங்களாக நடந்த வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவுடன், முல்லாக்களும், மௌலிகளும், கூச்சல் போடுகிறார்கள். சரியான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் ஐவர் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்கள். 2002-ல் வேகமாக கார் ஓட்டி, ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றவர் சல்மான். அப்பொழுதும் முஸ்லிம் என்ற காரணத்தை காட்டி தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்தார்கள் இதே முல்லாக்களும், மௌல்விகளும்.
தீர்ப்பு வெளியானவுடன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காவாஸா அஸிப், தனது டுவிட்டரில், நடிகரின் மதத்தின் காரணமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, ஏன் என்றால் சிறுபான்மையினத்தவர் என குறிப்பிட்டுள்ளார். நம்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் யாருக்கு ஐடியா கொடுக்கிறார்கள் பாருங்கள்!
‘Black Bug’ என்றும் ‘அரிய வகை மான்’ என்றும் ஊடகங்கள் குறிப்பிட்ட, சல்மான் கொன்ற, மான்களின் பெயர் ‘நீல் காய்’ (கரும் பசு). பல மாநிலங்களில் வைஷ்ணோய் மக்கள் நீல் காயை தெய்வமாகப் போற்றுபவர்கள்; அதை துன்புறுத்துகிறவனை விரட்டியடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்!
ஒரு புத்தகம்
கேரளத்திலிருந்து வெளி வந்துள்ள ஒரு புத்தகம் இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்களால் அயோத்தி பிரச்சினை பற்றி எரிகிறது என சாடுகிறது. நூல் முதியவர் கே.கே. முகமது என்பவர் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர். இவர் அயோத்தி அகழ்வாராய்ச்சி செய்த போது, பி.பி.லால் தலைமையில் பணியாற்றியவர்.
நடுநிலைவாதிகளான சில முஸ்லிம்கள், அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, ராமர் கோயில் கட்ட அனுமதிக்கலாம் என்றும், மசூதியை வேறு இடத்தில் கட்டிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள். இந்த கருத்தை பல்வேறு முஸ்லிம் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகி வந்த சமயத்தில் இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் திசை திருப்பினார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார் முகமது. எஸ். கோபால், திருமதி ரோமிலா தாப்பர், பிப்பின் சந்திரா என்ற மூன்று பேரும், ராமாயண காலத்தைப் பற்றிய கேள்வியை எழுப்பினார்கள். 19-ம் நூறாண்டுக்கு முன் கோவில் இடிக்கப்பட்டதற்குறிய ஆதாரங்கள் கிடையாது என செய்தியை பரப்பினார்கள். இது மட்டுமில்லாமல், அயோத்தியில் உள்ள ஆலயம் புத்த மற்றும் ஜெயின் ஆலயம் என்றார்கள். தங்களின் கருத்துக்கு ஆதரவாக போராசிரியர் ஆர்.எஸ். சர்மா, அக்தர் அலி, டி.என்.ஜா, இர்பன் ஹபீப், சூரஜ் பான் ஆகியோரின் துணையோடு கருத்துக்களை வெளியிட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மேலே குறிப்பிட்ட இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களில் சூரஜ் பான் மட்டுமே அகழ்வாராய்சி பயிற்சியாளர். ஆர்.எஸ். சர்மாவின் குழுவினர் பாபரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவினருடன் பல முறை விவாதம் செய்தார்கள். விஷமம் பரப்ப கூட்டம் நடத்த முன்நின்று ஏற்பாடுகளை செய்தவர் இர்பன் ஹபீப். இவர்தான் இன்டியன் கவுன்சில் பார் ஹிஸ்டாரிக்கல் ரிசர்ச் அமைப்பின் தலைவர். இவர் முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனையாளர்.
தனது புத்தகத்தில் அயோத்தி பிரச்சினையை விஸ்வரூம் எடுக்க வைத்தவர்கள் மூன்று பேர்கள், ஒன்று இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள், இரண்டாவது பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, மூன்றாவது ஜவஹர்லால் நேரு பல்கலைகழக இடதுசாரி பேராசிரியர்கள் என குறிப்பிட்டுள்ளார் முகமது.
ஒரு உளறல்
அரசின் எல்லா நிலைகளிலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஊடுருவியுள்ளார்கள், அமைச்சர்களுக்கு சிறப்பு பணி அதிகாரி என்ற ஒரு பதவியை உருவாக்கி, அதில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நியமனம் செய்யப்பட்டு, இவர்களின் கட்டளைப்படியே அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல். இவர்கள் நாட்டின் அமைப்புகளை கொச்சைப்படுத்துவதாகவும், இவர்களின் சொல்படிதான் அமைச்சர்கள் கேட்கிறார்கள் எனவும் புலம்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தகுதியும், திறமையும் இருந்தால் அரசு வரக் கூடாதா என்ன? பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு ஐ.எஃப்.எஸ். அதிகாரி மந்திரியாகலாம் என்றால், தேசப்பற்று கொண்ட ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அரசு பதவிக்கு வருவதில் என்ன தவறு? சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் ஜால்ரா அடித்தவர்கள் அரசு பதவிகளில் வலம் வரலாம் என்றால், தேசியவாதிகளான ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவசியம் வரணும்.
ராகுல் காந்திக்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த வேண்டும். பொற்கோவில் ராணுவத் தாக்குதலுக்கு பின், சீக்கிய குழுக்களால் இந்திரா காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றது. ‘ரா’ அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழு பிரதமரின் அன்றாட நடவடிக்கைகள் அல்லது பாதுகாப்புக் குறித்து கிடைத்த தகவல்களை விவாதிப்பது வழக்கம். அரசில் எந்தப் பொறுப்பையும் வகிக்காத ராஜீவ், இந்திராவின் பாதுகாப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அவரது விருப்பத்தின் பேரில் அவருக்கு நெருக்கமான ஆலோசகர்களில் இருவர் தங்களது யோசனைகளைத் தெரிவிக்கவும், அந்தக் கலந்துரையாடல்கள் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ராஜீவிடம் தெரிவிக்கவும் அச்சந்திப்புகளில் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு அரசில் எந்த பொறுப்பும் கிடையாது. முக்கியமான தகவல்கள் பரிமாறப்படும் இந்த மிக ரகசியச் சந்திப்புகளில் கலந்து கொள்ள உரிமை கிடையாது. என்றாலும், இந்திரா காந்தியை திருப்திப்படுத்த அவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். (ஆதாரம் பி.ராமன் எழுதிய ‘நிழல் வீரர்கள்’ பக்கம் 124) இதுபோல காங்கிரஸ் கட்சி அரசு நிறுவனத்தை அசிங்கப்படுத்திய சம்பவங்கள் ஏராளம்.
அதெல்லாம் அப்பட்டமான அதிகார மீறல் என்பதை புரிந்து கொண்டாரா, ராகுல்? இம் மாதிரியான சம்பவங்கள் இந்த அரசில் ஏதேனும் நடந்திருந்தால் கூறி விமர்சனம் செய்யலாம். அப்படி செய்ய ராகுல் காந்திக்கு விஷய ஞானம் உண்டா என்பது தெரியவில்லை. 2015-ல் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, வழக்கு இறுமாப்பாக பேசிய ராகுல் காந்தி. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நான் ஆர்.எஸ்.எஸ். பற்றி குறிப்பிடவில்லை, சில தனிப்பட்டவர்களைப் பற்றி கூறினேன் என மண்ணைக் கவ்விய வரலாற்றை மறக்க முடியுமா?