“சர்வமத மகாசபையில் கலந்து கொள்வதற்காக ஒருவரை அனுப்புகிறேன். அமெரிக்காவின் மெத்தப் படித்த பேராசிரியர்கள் அனைவரையும் சேர்த்தாலும் இவரது அறிவிற்கு ஈடாகாது!”
— பேராசிரியர் ஹென்றி ரைட்,
அறிமுகக் கடிதத்தில்.
சுமார் இரண்டு மாதங்கள்! ஏறத்தாழ 13,000 கிலோமீட்டர் தொலைவு! அறிமுகம் இல்லாத ஒரு புதிய நாட்டை நோக்கி, ஆதரவோ, பொருளாதார வசதியோ இன்றி, ஒரு இளம் துறவி மேற்கொண்ட பயணம்! இன்று நினைத்துப் பார்த்தாலும் அந்தப் பயணத்தின் துணிச்சல் நம்மை வியக்கச் செய்கிறது.
எதற்காக இந்தக் கூட்டம்?
1893 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற World’s Columbian Exposition என்ற உலகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக உலக சமயங்களின் பாராளுமன்றம் ( World’s Parliament of Religions ) நடைபெற்றது. செப்டம்பர் 11 முதல் 27 வரை நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், உலகின் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒரே மேடையில் கூடினர்.
வெவ்வேறு சமயங்களின் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதும், அவற்றுக்கிடையே புரிதலை ஏற்படுத்துவதும், இதன் வெளிப்படையான நோக்கங்களாக இருந்தன. ஆனால் அக்காலத்தின் சமயச் சூழலைப் பார்க்கும்போது, கிறிஸ்தவத்தின் உலகளாவிய மேன்மையை நிலைநாட்ட வேண்டும் என்பதும், கிறிஸ்தவத்தின் செல்வாக்கை வலுப்படுத்த வேண்டும் என்பதும், தான் இதன் பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது என நம்ப முடிகிறது. ஆனால், இறைவனின் திட்டத்தை யார் அறிய முடியும்?
சர்வமத மகாசபைக்கான ஏற்பாடுகள்
இந்த மகாசபைக்கான ஏற்பாடுகள், பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. உலகின் பல பகுதிகளிலும் உள்ள சமயத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களுடன் தொடர்புக் கொள்ளப்பட்டு, அழைப்புகள் அனுப்பப்பட்டன. ஆயிரக்கணக்கான கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் பரிமாறப்பட்டன. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆலோசகர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அந்தப் பெரும் ஏற்பாட்டின் விளைவாக, உலகின் பல்வேறு சமய மரபுகளுக்கும் ஒரே மேடை உருவானது. ஆனால் அந்த மேடையில், இந்தியாவின் குரல் எப்படி ஒலிக்கப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பயணம்
சர்வமத மகாசபையில் பங்கேற்பதற்காக சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட பயணம் தனித்துவமானது. பொருளாதாரத் தடைகள், அறிமுகமின்மை, பயணச் சிரமங்கள் என பல இன்னல்களை அவர் எதிர்கொண்டார். இருந்தாலும், இந்தியாவின் ஆன்மிகச் செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் அவர் முன்னேறினார்.
செப்டம்பர் 11 – வரலாறு தொடங்கிய நாள்
1893 செப்டம்பர் 11. சிகாகோவின் கொலம்பஸ் ஹால் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அங்கு கூடியிருந்தனர். இடம் கிடைக்காத பலர் அரங்கிற்கு வெளியிலும் காத்திருந்தனர். அந்தப் பெருங்கூட்டத்தின் மத்தியில், இந்தியத் துறவியின் காவி ஆடை தனித்துவமாகத் திகழ்ந்தது.
பல பிரதிநிதிகள் உரையாற்றிய பின்னரும், சுவாமி விவேகானந்தர் எழுந்து பேசத் தயங்கினார். இறுதியில், தகுந்த தருணம் வந்தபோது அவர் எழுந்தார். ஒரு கணம் கலைமகளை மனதில் நினைத்து, மேடையை நோக்கி நின்றார்.
அவரது வாயிலிருந்து வெளிவந்த முதல் வார்த்தைகள்:
“அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!”
அவ்வளவுதான்.
அந்த அழைப்புக்குக் கிடைத்த வரவேற்பு வரலாற்றில் அழியாததாக மாறியது. பேரரங்கம் முழுவதும் கரவொலி எழுந்தது. நீண்ட நேரம் அந்தக் கைதட்டல் தொடர்ந்ததால், சுவாமிஜியால் உடனடியாகத் தனது உரையைத் தொடர முடியவில்லை.
“Ladies and Gentlemen” என்ற முறையான அழைப்புக்குப் பதிலாக, “சகோதரிகளே, சகோதரர்களே” என்று உலக மக்களை அழைத்தார். மனிதகுலம் ஒரே குடும்பம் என்ற வேதாந்தப் பார்வை, அந்த ஒரு வாக்கியத்திலேயே வெளிப்பட்டது.
அவர் உலகிற்கு கூறிய செய்தி
தொடர்ந்து பேசிய சுவாமிஜி, உலகின் மிகப் பழமையான துறவியர் பரம்பரையின் சார்பிலும், அனைத்து மதங்களின் தாயாகத் திகழும் ஹிந்து மதத்தின் சார்பிலும், இந்திய மக்களின் சார்பிலும் நன்றி தெரிவித்தார்.
ஹிந்து மதத்தின் சிறப்பாக பிற மதங்களை வெறுக்காமல் மதிப்பதும், அவற்றை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மையும் இருப்பதாக அவர் எடுத்துரைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு இந்தியா அடைக்கலம் அளித்த வரலாற்றையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
அவரது உரையின் உச்சமாக, மதவெறி, பிரிவினைவாதம் மற்றும் மனிதர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தும் தீவிரப் போக்குகளுக்கு எதிராக, குரல் கொடுத்தார். பல்வேறு பாதைகள் ஒரே இறுதி உண்மையை நோக்கிச் செல்ல முடியும் என்ற உயர்ந்த வேதாந்தப் பார்வையை உலகிற்கு எடுத்துரைத்தார்.
அந்த வெற்றியின் உண்மையான காரணம்
சுவாமிஜிக்கு கிடைத்த வரவேற்பு வெறும் புதுமையான உடை, இந்தியத் தோற்றம் அல்லது புதிய பேச்சாளர் என்ற காரணங்களால் ஏற்பட்டதல்ல. அவருடைய உரையில் இருந்த ஆன்மிக ஆற்றல், உண்மைத்தன்மை, அறிவின் ஆழம் மற்றும் மனிதகுலத்தின் மீதான அன்பு ஆகியவையே மக்களை ஈர்த்தன.
உரை முடிந்ததும், அவரை நெருங்கிப் பார்க்கவும், அவரது ஆடையைத் தொடவும் மக்கள் ஆர்வத்துடன் முன்வந்தனர். பத்திரிகைகளும் அவருடைய பேச்சைப் பெரிதும் பாராட்டின. சர்வமத மகாசபையில் அவர் நிகழ்த்திய உரைகள் உலகின் கவனத்தை இந்தியாவின் ஆன்மிக மரபின் மீது திருப்பின. சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் பெற்ற வெற்றி ஒரு தனி மனிதரின் வெற்றி அல்ல. அது இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தின் வெற்றி; வேதாந்தத்தின் வெற்றி; சமய நல்லிணக்கத்தின் வெற்றி; மனித சகோதரத்துவத்தின் வெற்றி.
கட்டுரையாளர் : எஸ். நரேந்திரன்