ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதை துணிச்சலான, வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்று பாஜக வரவேற்றுள்ளது.
ஜனசங்கம் உருவான காலத்தில் இருந்தே 370ஆவது பிரிவை ரத்து செய்வது பாஜகவின் முக்கிய சித்தாந்தமாக இருந்தது. ஜம்மு-காஷ்மீர், லடாக் பிராந்திய அமைதி, வளர்ச்சி, அபிவிருத்திக்காக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். துணிச்சலான இந்நடவடிக்கை, தேச ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறினார்.
வரலாற்றுப் பிழை இன்று சரிசெய்யப்பட்டுள்ளது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 368ஆவது பிரிவின்கீழ் உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் 35ஏ சட்டப் பிரிவு மறைமுகமாக சேர்க்கப்பட்டது. அது நீக்கப்பட வேண்டியது அவசியம். மத்திய அரசின் முடிவால், ஜம்மு-காஷ்மீர் மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இதனால் அப்பகுதிக்கு அதிக முதலீடு, அதிக தொழில்துறை, அதிக தனியார் கல்வி நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருவாய் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவுகளில், துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு இது. நமது ஒன்றுபட்ட இந்தியா, சிறப்பான இந்தியாவுக்கு வணக்கத்தை செலுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. தங்களது துயரத்தை தணித்ததற்காக பிரதமருக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டுள்ளனர் என்றார்.
ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பாஜகவினர் இனிப்புகளை வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.