தீபாவளிக்குள் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகாவிட்டால் போராட்டம் நடத்த அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் டி.கதிரேசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மூத்த குடிமக்களாகிய 92,000 போக்குவரத்துக் கழகஓய்வூதியர்களுக்கு 92 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.
அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அறிவிக்கப்படும் என போக்குவரத்து துறைச் செயலர் கூறியிருந்தார். அதேநேரம், அகவிலைப்படி உயர்வு இல்லாமல் குறைவான ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களிடம் மேலும் பிடித்தம் செய்துமருத்துவக் காப்பீட்டை செயல்படுத்தினால், போதிய பணம் இல்லாமல் அவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் ஏற்படும். எனவே, போர்க்கால அடிப்படையில் அகவிலைப்படி உயர்வுடன், மருத்துவக் காப்பீடும் இணைந்து வழங்க வேண்டுகிறோம்.
அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக தீபாவளி பண்டிகை வரை காத்திருப்பது எனவும் காலதாமதமானால், இதர அமைப்புகளுடன் இணைந்து முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.