நோன்புக்கு முன்பு (கண்ணனின் அருளுக்காக ஏங்கிய நிலையில்), “நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,”என்ற வகையில் பெண்டிர் நோன்பு நோற்றபிறகு(அதாவது அவனைக் கிட்டிய பிறகு)அவனிடத்தில் பெறும் பேறுகளைச் சொல்கிறார்கள்…
கோவிந்தனைப் பாடிப் பயனைடந்து நோன்பு நோற்கும் பெண்கள் பெறும் பரிசுகள் அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை, தோடு, மாட்டல், என்று ஆபரணங்கள், ஆடைகள் அணிந்து அதன் பின்னே முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடைய அமுத அன்னத்தைக்கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம் என்கிறார்கள். ஆண்டாள் நாச்சியார் பாடியதற்கிணங்க ஸ்ரீ ராமனுஜர், திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசலும், வெண்ணையும் சமர்பித்தார். தான் பாடியதை செயல் படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து “வாரும் என் அண்ணலே” என்றார். ராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும் அவர் ஆண்டாளுக்கு அண்ணனார். இதனால் இன்றும் “கூடாரைவெல்லுஞ்சீர்க்கோவிந்தா” என்ற பாசுர நாள் அன்று அக்கார அடிசல் செய்வது வழக்கமாக உள்ளது.