திருப்பள்ளியெழுச்சி – 5

 பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவு இலன் என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்
சீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

விளக்கம்:
இந்த மண், விண், நீர், காற்று, நெருப்பு என அனைத்திலும் இறைவன்
நிறைந்துள்ளான். பஞ்சபூதங்களிலும் நிறைந்துள்ளான். இவ்வளவு ஏன் ??
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரிடத்திலும் உறைந்துள்ளான். அவனுக்குத்
தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை என்பது போல் போவதும் இல்லை
வருவதும் இல்லை. நிரந்தரமானவன் அவன். . குறைவற்றவன் அவன். ,
பரிபூரணமானவன் அவன். .
எப்போதோ யாரோ ஒருவர் உம்மைக் கண்டிருக்கிறார். கண்டு மெய்ஞானத்தை
உணர்ந்து அதைப் பாடலில் வடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உம் அடியார்கள்
அனைவரும் உன் மேல் கீதங்களைப் பாடியும் ஆடியும் வருகின்றனர். எங்கும்
நிறைந்துள்ள உன்னை வெளியில் மட்டும் காணமுடியும் என்று அவர்கள்
நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். பாடி ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இதைத்
தவிர உன்னைக் கண்டு அநுபவித்தவர்களின் உணர்வைக் கேட்டு அறியோம்.

உள்ளும் புறமும் ஒன்றாக ஒரே நினைப்பாக உன்னைத் தியானித்தால் அன்றோ
நாங்கள் உன்னை உள்ளே கண்டு உணர முடியும்??
குளிர்ந்த செழிப்பான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறைக்கே நீ மன்னன்
அல்லவோ, எம் தலைவா நீ எங்களால் சிந்தித்து உணர்தலுக்கும் அரியவன்
அன்றோ? உம்மைச் சிந்தித்து உணர்வது அன்றோ எம் தொழில்! எம் தலைவனே !
எங்கள் முன்னே நீ வந்து எங்கள் அளப்பரிய துன்பங்களை எல்லாம் அகற்றி
எம்மை ஆட்கொண்டு அருள் பாலிப்பாய் எங்கள் உள்ளமாகிய பள்ளி அறையில்
நாங்கள் காணும் வகையில் பள்ளி கொண்டு எமக்கு அருள்வாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *