‘உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் கீழ், பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களை திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நியமித்து, மூத்த அர்ச்சகரின் கீழ் பயிற்சியளிக்கக் கூடாது’ என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சுதந்திர பரிபாலன ஸ்தலஸ்தர்கள் சபா தலைவர் வீரபாகு மூர்த்தி, இணைச் செயலர் ஹரிஹர சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு: தமிழக அரசின், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் மூலம் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களை, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூத்த அர்ச்சகர்களின் கீழ் பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்க, அறநிலையத்துறை சார்பில், ஆக., 28ல் அரசாணை வெளியானது.
இது, சட்டவிரோதமானது.
இடைக்கால தடை
ஏற்கனவே ஆகமங்களை பயின்ற திரிசுதந்திரர்கள் உள்ளனர். எனவே, புதிதாக அர்ச்சகர்கள் நியமனம் தேவையற்றது. அரசின் ஓராண்டு பயிற்சி மூலம், வேதத்தை முழுமையாக கற்க முடியாது. வேதங்களை முழுமையாக கற்க, ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாகும். மூத்த அர்ச்சகரின் கீழ் ஓராண்டுக்கு பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் நபர்களுக்கு, கோவில் நிதியிலிருந்து மாதம், 8,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல. அறநிலையத் துறையின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
அந்த மனுக்களை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
தமிழக அரசு தரப்பில், ‘இது பணியாளர் நியமனம் சம்பந்தப்பட்ட வழக்கு. இதை எதிர்த்து சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர முடியாது’ என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஆகம கோவில்களில் பயிற்சி பெற இவர்களுக்கு தகுதியில்லை என்பதில் மட்டுமே மனுதாரர் தரப்பு ஆட்சேபிக்கிறது. பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றத்தில் தனியார் ஆகம பயிற்சி மையங்கள் கூட கோவிலுக்குள் பயிற்சி நடத்தவில்லை. மூத்த அர்ச்சகரின் கீழ் கோவிலுக்குள் பயிற்சி அளிப்பது ஆகமங்களுக்கு எதிரானது. கோவில்கள் கடவுள்களின் இருப்பிடங்கள். கடவுள்களை வழிபட பக்தர்கள், கோவில்களுக்குச் செல்கின்றனர். கோவில்களை பயிற்சி மையங்களாகவோ, ஆய்வுக் கூடங்களாகவோ கருத முடியாது. ஓராண்டு அர்ச்சகர் படிப்பை முடித்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் எந்த ஆகமத்தின் கீழ் பயிற்சி பெற்றனர் என அறநிலையத்துறை தரப்பில் குறிப்பிடவில்லை. அர்ச்சகர் பயிற்சி வகுப்பின் முதல் நாளிலிருந்து குறிப்பிட்ட ஆகமத்தில் பயிற்சி பெற வேண்டும். ஒரு ஆகமத்திலிருந்து மற்றொரு ஆகமத்திற்கு மாற முடியாது. எந்த ஆகமத்தின் கீழ் பயிற்சி பெற்றனர் என்பதை குறிப்பிடாமல், மூத்த அர்ச்சகரின் கீழ் பயிற்சி பெற, கோவிலில் பணியமர்த்துவது அறநிலையத்துறையின், 2007ம் ஆண்டைய அரசாணைக்கு எதிரானது. வழக்கு பைசல்
பயிற்சி என்ற போர்வையில் பணி நியமன உத்தரவுகளை ஆகம விதிகளுக்கு புறம்பாக அறநிலையத்துறை வழங்கியுள்ளது. இது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. இவ்விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அறநிலையத்துறையின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுப்படி செயல்பட இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
அதுவரை அரசாணைப்படி எவ்வித பயிற்சியும் அறநிலையத்துறை அளிக்கக் கூடாது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.