திம்மக்கா விடை பெற்றார்

“எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. என் கணவர் பிக்கல சிக்கையா வேலைக்கு சென்று விட்ட பிறகு நான் தனியாக இருக்கும் நேரத்தில் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தேன். அவற்றை என் பிள்ளைகளாக சீராட்டி வந்தேன். ஊர் மக்கள் என்னை ஆலமரத்துப் பாட்டி (சால மரத அஜ்ஜி) என்று அழைக்க ஆரம்பித்தார்கள்”.

இது பெங்களூரில் நவம்பர் 14 அன்று 114 வயதில் சிவனடி சேர்ந்த திம்மக்கா முன்பு ஒரு முறை தெரிவித்த தகவல். கர்நாடகாவின் குப்பி தாலுகாவில் 1911 ல் பிறந்த இவர் பிறந்த நாள் வழக்கமாக ஜூன் 30 அன்று மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் போராளி என்று நாடு நெடுக புகழ்பெற்ற திம்மக்காவின் எளிமையும் குழந்தைத்தனமான சுபாவமும் தொண்டுள்ளமும் சிவ பக்தியும் எவரையும் கவரும். இவர் மாநில அரசின் சுற்றுச்சூழல் வனப்பகுதி தூதுவராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

மாநில நெடுஞ்சாலை நெடுக ஹுளிக்கல் முதல் குட்டூர் வரை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு இவர் வளர்த்து வந்த 385 ஆல மரங்கள் தழைத்திருந்தாலும் தாயை இழந்த தனயர்கள் போல தலை கவிழ்ந்து நிற்கின்றன.

சொந்தத் துயரை ஒதுக்கி ஊருக்காக நிழல் மரம் வளர்க்கும் தொண்டில் தன் வாழ்க்கையை சமர்ப்பித்த அந்த தாயைப் போல இந்த ‘பிள்ளை’களும் அன்னையை இழந்த நிலையிலும் ஊராருக்கு நிழல் தந்து வருகின்றன