தினமும் மூன்று முறை சுத்தம் செய்யப்படும் ஒடிசா கிராமம்

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடியின கிராமம் பாபோஜோலா. சுமார் 70 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், தூய்மை என்பது வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் பிரச்சாரம் அல்ல. அது இங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி.
ஒரு நாளில் மூன்று முறை பெருக்கப்படுகின்றன. சாலையில் குப்பை வீசக்கூடாது, பிளாஸ்டிக்கிற்கு அனுமதி இல்லை, கழிவுகள் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகின்றன. பொது இடத்தில் குப்பையை வீசுபவர்களுக்கு அபராதம் உண்டு. உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்ல, வெளியிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனிதரின் எண்ணமாகத்தான் தொடங்கியது. உள்ளூர் பள்ளி ஆசிரியரான மதுசூதன் மராண்டி, தன்னுடைய கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
மக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவை உருவாக்கினர். கிராமத்தின் தூய்மையைப் பராமரிப்பதுடன், அதைத் தொடர்ந்து செயல்படுத்தத் தேவையான அமைப்புகளையும் அந்தக் குழு கவனித்தது. பின்னர், அந்த முயற்சி அனைவருடைய பொறுப்பாக மாறியது.
குப்பைத் தொட்டிகள், சிசிடிவி கேமராக்கள், சோலார் பேனல்கள் போன்றவற்றை அமைப்பதற்காக கிராம மக்களே நிதி திரட்டினர்.
ஒரு காலத்தில் ‘தூய்மை இயக்கம்’ என்று தொடங்கிய செயல்கள், இன்று பாபோஜோலாவில் சாதாரண நடைமுறைகளாகி விட்டன. புகைபிடிக்கக் கூடாது, பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, புகையிலை மென்று பயன்படுத்தக்கூடாது. கிராமத்தில் குப்பை வீசும் சுற்றுலாப் பயணிகளுக்குக்கூட அபராதம் விதிக்கப்படுகிறது.
பாபோஜோலாவின் தூய்மை நடைமுறையின் முக்கியமான அம்சம் – தினமும் மூன்று முறை தெருக்கள் பெருக்கப்படுகின்றன, ஏதாவது சிறப்பு நாளில் மட்டும் நடப்பதில்லை. காலை, மீண்டும் பகலில், பின்னர் மாலையில் என தொடர்ந்து பராமரிப்பது அன்றாடப் பழக்கமாகிவிட்டது. சிறிய செயல்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. அதுதான் இங்கே பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
பாபோஜோலாவின் அழகு தெருக்களின் தூய்மையோடு நின்றுவிடவில்லை. வீடுகளின் சுவர்களில் மலர்கள், இலைகள், விலங்குகள் மற்றும் பாரம்பரிய வடிவங்கள் வரையப்பட்டுள்ளன.
உள்ளூரில் ‘பிட் பொடாவ்’ (Bhit Potaw) என்று அழைக்கப்படும் இந்தச் சுவர் ஓவியங்களை கிராமப் பெண்களே உருவாக்குகின்றனர். ஆற்றங்கரைக் களிமண், கற்கள், மரப்பட்டைகள், மலர்கள் போன்ற சுற்றுப்புறத்தில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களிலிருந்தே வண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. பாபோஜோலாவின் இயற்கையுடனான உறவு அதன் தெருக்களில் மட்டுமல்ல, அதன் வீட்டு சுவர்களிலும் தெரிகிறது.
தூய்மை என்பது இங்கே ஒரு பிரச்சாரமல்ல, அது ஒரு பழக்கம். அந்தப் பழக்கம் இப்போது ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. பாபோஜோலாவின் கதை, பெரிய மாற்றங்கள் எப்போதும் பெரிய அறிவிப்புகளில்தான் தொடங்க வேண்டும் என்பதில்லை என்பதைச் சொல்கிறது.
ஒருவரின் சிறிய எண்ணம், ஒரு கிராமத்தின் பெரிய மாற்றத்துக்கு விதையாகியது.

கட்டுரையாளர்: அன்னபூரணி ராஜேஷ்