”தாய்மொழியில் பேசுவதை பெருமையாக, கவுரவமாக கருத வேண்டும்” என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று சென்றார்.அங்கு பல ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சிகள் வாயிலாக வெளிகொணரப்பட்ட, தமிழர்களின் வரலாற்றை மறுஆக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர கண்காட்சியை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது :மனிதகுலம் விரிவான பயனைப் பெறுவதற்காக, தமிழ்ப் படைப்புகளை, இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும்.பல்வேறு மொழிகளை பேசும் நமது மக்கள் அனைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உள்ளூர் மொழிகளில் தகவல் தெரிவிப்பதற்கு, மேலும் பல தொழில்நுட்பக் கருவிகளை, நாம் கொண்டிருக்க வேண்டும்.தாய் மொழியில் பேசுவதை, எழுதுவதை, தகவல் அனுப்புவதை, கவுரமாகவும், பெருமையாகவும் கருத வேண்டும்.
ஆரம்ப நிலை ஆதாரங்களை பயன்படுத்தி, அறிவின் புதிய சொத்துக்களை வெளிக்கொண்டுவர ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அந்த வகையில், செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம், மிக முக்கியமான பங்கினைக் கொண்டுள்ளது. அழகிய தமிழ் மொழியைப் பாதுகாத்து, பராமரித்து மேம்படுத்துவதன் வழியாக, நாட்டுக்கு இந்நிறுவனமும், அதன் ஆராய்ச்சியாளர்களும், மகத்தான சேவை செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.