தாய்மொழியே அறிவுலகின் மொழி

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக் கொள்வதும் வெவ்வேறு மொழிகளில் நல்ல பரிச்சயம் இருப்பதும் தனி மனித முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சென்று பணிபுரியவும் தொழில் தொடங்கவும் பலமொழித் திறன் பெற்றிருப்பது நல்ல பலன் தரும் என்பதில் நிச்சயமாக மாற்றுக் கருத்து இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்றுக் கொள்வது ஆரோக்கியமான விஷயமே. எப்படிப் பார்த்தாலும் மொழி ஒரு தகவல் பரிமாற்றக் கருவி என்பதைத் தாண்டி முக்கியத்துவம் வாந்ததல்ல. இதனை அறிவுலகம் நன்றாகவே அறியும்.

ஆனால், நடைமுறையில் மொழி குறித்த புரிதலில் மிக மிக ஆபத்தான போக்கு காணப்படுகிறது. பிற மொழிகளின் மீதான காதல், முக்கியமாக ஆங்கிலம் மீதான அக்கறை தவறாக அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கப்படுகிறது. அறிவின் அளவுகோலாக ஆங்கிலம் வைக்கப்படும்போது தான் ஆபத்து தொடங்குகிறது.

மொழி மனப்பான்மை

ஆங்கிலேயர் நம்மீது புகுத்திச் சென்ற தாழ்வு மனப்பான்மைகளில் இதுவும் ஒன்று. மேலும் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஆங்கிலம் பற்றிய மதிப்புகளும் தவறானவை. ஆங்கிலம் வந்ததால் தான் இந்தியா ஒன்றிணைந்தது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்ள முடிந்தது” என்று ஒரு தவறான வாதம் முன் வைக்கப்படுகிறது. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ‘காலடி’யில் பிறந்த ஆதி சங்கரர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மடங்களை நிறுவியிருக்கிறார். அவருக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருந்திருக்கவில்லை.

இன்றைக்கு இந்தியாவின் ஆன்மிக கலையான யோகா உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த யோகக் கலைக்கு மொழி தடையாக இருக்கவில்லை.

நவீன உலகில், ஊடகங்களில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இதுவும் தவறான கருத்து. நம்முடைய கைபேசியிலும் அதன் செயலியிலும் அவரவர் தாமொழியை பயன்படுத்திக்கொள்ள தடையேதும் இல்லை. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அனைத்து தொழில் நுட்பங்களிலும் அவரவர் தாமொழியையே பயன்படுத்துகின்றனர்.

பணக்கார மொழியா?

பணக்காரர்களின் மொழியாக ஆங்கிலம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. உலகில் 91.5 சதவீதம் மக்களுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. இவர்கள் எல்லாம் ஏழைகள் இல்லை, பெரும் பணக்காரர்கள். உலகின் முதல் இருபது பணக்கார வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொண்டால் அவற்றில் 16 நாடுகளில் அவரவர் தாமொழியிலேயே தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. 4 நாடுகள் மட்டுமே ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றன.

அதுபோலவே ஏழை நாடுகளில் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில்லை. பல வளர்ந்த நாடுகள் உயர் கல்வியை தா மொழியிலேயே வழங்குகின்றன.

ஜப்பான் நாட்டு மிகப்பெரிய நூலகங்களில் கூட ஆங்கில நூல்களை அரிதாகத்தான் பார்க்க முடியும். எதுவும் புதிதாக வெளிவந்த தொழில்நுட்பம் சம்பந்தமான ஆங்கில நூல்களை மட்டுமே பார்க்க முடியும். சில வருடங்களில் அந்த நூல்களையும் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்துவிடுகிறார்கள்.

எகிப்து நாட்டிலும் அரபு நாடுகளிலும் அவரவர் தாமொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பல இந்திய நூல்கள் அரபு, சீனா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஒரு நிறுவனம் தன்னுடைய வியாபாரத்தில் வெற்றி அடைய முடியுமா என்றால் அதுவும் இல்லை. ஆசியாவில் பெரிய அளவில் உள்ள 1,000 பன்னாட்டு நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் அவைகளில் கிட்டத்தட்ட 800 நிறுவனங்கள் ஜப்பான், கொரியா, தைவான் நாடுகளை சேர்ந்தவை. இந்த நாடுகளின் தாமொழியாக ஆங்கிலம் இல்லை. தொடர்பு மொழியும் ஆங்கிலம் இல்லை.

அந்தஸ்து

ஆங்கிலத்தில் பேசினால் அந்தஸ்து உயரும் என்ற அவநம்பிக்கை நம் நாட்டில் மட்டுமே உள்ளது. ஜப்பானில் ஆங்கிலத்தை யாரும் மதிப்பதே இல்லை. இந்தியாவில்தான் ஆங்கிலத்தில் பேசுவது அந்தஸ்தாக கருதப்படுகிறது. தகவல் பரிமாற்ற செயல்பாடுகள் ஆங்கிலத்தில் இருக்கும்போது முழுமையாக புரிந்து கொள்ளுதல் என்பது தடைபடுகிறது. நாம்தான் நம் மொழியை தாழ்வாக கருதுகிறோம். நம் கலாச்சாரத்தை தாழ்வாக  கருதுகிறோம்.

சீனாவின் தலைநகரில் மிகப்பெரிய நட்சத்திர உணவகங்களில் கூட அவரவர் தாமொழியிலேயே உரையாடுகிறார்கள் என்று ஒரு செதிக் குறிப்பு சோல்கிறது. ஆனால் நம் முகநூல் பக்கங்களில் ஃபீலிங் தேங்கிஃபுல், ஃபீலிங் லவ்டு” என்றெல்லாம் பதிவுகள் போட்டு பெருமை கொள்வது பரிதாபத்துக்கு உரியதாகவே தோன்றுகிறது. ஆங்கில செதித்தாள்களை வாங்குவதும் படிப்பதும் கூட கௌரவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் வெளியாகும் நாளிதழ்களில் மாநில மொழி செதித்தாள்களே அதிகம் விற்பனையாகின்றன.

ஒரு தனி நபர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும், வரவேற்புக்குரியதே!

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடிய பாரதி தன் தாமொழியான தமிழில் தான் சாதித்தார்.

அது அந்நிய மொழிகளுக்கு எதிரான போராட்டம் அல்ல. மாறாக தாமொழியின் மகத்துவம் பற்றிய கருத்து. ஒருவர் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். தவறில்லை. அது தேவையும் கூட. ஆனால் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் தாமொழியே தலை சிறந்தது.

எனவே எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அறிவு வளர்ப்பதும் தகவல் பரிமாற்றமும் அவரவர் தாமொழியில் இருக்கும் போதுதான் முழுமையான வளர்ச்சி ஏற்படும்.