அறியாமை அகற்றிடும் ஆவரைகுளம் பள்ளி

நெல்லுக்கு வேலி தந்த திருநெல்வேலி மாவட்டத்தின் தென்முனையில் தங்க நாற்கர சாலையின் அருகே அமைந்த கிராமம் ஆவரைகுளம். பழங்காலத்திலேயே ‘ஆசையா பட்டினம்’ என்று அயா வைகுண்டப் பரம்பொருளால் அருளாசி வழங்கப்பட்டு இன்றும் பசுமையுடன் காட்சி தரும் ஆவரைகுளத்தில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் தோன்றியவர் அயா பாலையா மார்த்தாண்டம். ஒரு சமுதாயத்தின் ஆணிவேரான பெண்கள்  வாழ்வில் ஒளி வீசினால் அறியாமை இருள் நீங்கி வறுமை அகலும். அதற்குரிய ஒரே ஆயுதம் கல்வி. அக்கல்வியை ஒரு ஆண் கற்றால் அவனுக்கு மட்டுமே நன்மை. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பத்திற்கே நன்மை” என்ற சீரிய தொலைநோக்கு சிந்தனையோடு, 1937ம் வருடம் பெண்கல்விக்கென ஒரு பாடசாலையை மார்த்தாண்டம் ஹிந்து துவக்கப்பள்ளி” என்ற பெயரோடு துவங்கினார்.  எங்கும் பள்ளிகள் இல்லாததால் மக்கள் மனதில் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு  இப்பள்ளியை நாடி வந்தனர்.

1957-58ம் கல்வியாண்டில் தனது கடின உழைப்பால்,  ‘மார்த்தாண்டம் ஹிந்து நடுநிலைப்பள்ளி’ ஆக்கினார். காலச்சக்கரத்தின் சுழலோட்டத்தில், அயா அமரரானவுடன், பள்ளிகள் அவரது இளவல் கணேசன்  ‘தந்தை சோல் மிக்க மந்திரமில்லை’ என்ற சோல்லுக்கேற்ப, அவரது பாதையிலிருந்து சிறிதும் வழுவாமல், 1981-82ம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியினை, ‘பாலையா மார்த்தாண்டம் நினைவு உயர்நிலைப்பள்ளி’யாக உயர்த்தினார்.

1989-90ம் கல்வியாண்டில், தனது உயர்நிலைப் பள்ளியினை ஆவரைகுளம்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், ‘பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப்பள்ளி’ எனத் தரம் உயர்த்தி, தற்போது 1,200 மாணாக்கர்கள், 50 பணியாளர்களுடன் இருபாலர் பள்ளியாக  இயங்கி வருகிறது.

அதன் பின், 2014-15ம் கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் துவக்கப்பட்ட மெட்ரிக் பள்ளி தற்போது,  700 மாணாக்கர்கள், 60 பணியாளர்களுடன் ‘பாலையா மார்த்தாண்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி’யாக சீரிய பாதையில் தனது பயணத்தினை தொடர்கிறது. பெண்களின் சுய வேலைவாப்பினை ஊக்குவிக்கும் வகையில்,  2017ம் வருடம்  ‘பாரதப் பிரதமர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்’ ஆரம்பித்து, அதில் மகளிருக்கான சுய வேலைவாப்புத் தையல் பயிற்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அப்பயிற்சி மையத்தில், தற்போது 5 பணியாளர்கள், 60 மாணவ மகளிரோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பயிற்சி முடித்த மகளிருக்கு மத்திய அரசின் ‘முத்ரா கடன் திட்டம்’ மூலம் கடன் உதவியும் பெற்றுத் தரப்பட்டு வருகிறது.

பல கலைகளை அனுபவமிக்க ஆசிரியர்களால் தரமுடன் வழங்குவதால், வாழையடி வாழையா வளர்ந்து வரும் கலைக்கூடம் தரணியில் சாதனைகள் படைத்து நூற்றாண்டுகளை நெருங்கி நம்மவர் மனதில் பாலையா மார்த்தாண்டம் பள்ளிகள் நீங்கா இடம் பெற்று நிற்கின்றன.