“நீங்க எவ்வளவு தமிழ் படிச்சாலும் அன்பு என்றால் உங்களுக்கு தெரியாது” ஏனென்றால் தமிழுக்கு அன்பைப் பற்றிச் சொல்லத் தெரியாது.
“அப்ப என்ன செய்யணும்?”
“பைபிள் படிக்கணும்” – அதுவும் ஆங்கிலத்தில் படிக்கணும் அப்பத்தான் அன்பைப் பற்றி அறிந்துகொள்ள இயலும்.
இது சட்டசபையில் ஒரு அமைச்சரின் அறியாமை மிகுந்த ஆணவப் பேச்சு!
இதை நேரடியாக கேட்டுக்கொண்டிருந்த, தமிழைத் தாங்கள் மட்டுமே காப்பாற்றிக் கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சியில் இருந்து, தமிழ்த்தாய் வாழ்த்திற்கு தனித்தீர்மானம் கொண்டு வந்த கட்சி வரை கள்ள மௌனம் காத்தனர். காரணம்? அங்கதான் ட்விஸ்ட்டு….
அமைச்சர் சொன்னாரு “I am a born christian” – அதாவது அவர் ஒரு பிறவிக் கிறித்துவராம்! பைபிள் தான் அன்புன்னா என்னவென்று சொல்லிக் கொடுத்ததாம்!
இப்ப ஒண்ணொண்ணா வருவோம்.
“Born Christian” என்று சொல்வதற்கு சரியான லாஜிக் இல்லை. “Born in Christian Family” என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏனென்றால் ஒருவன் ஞானஸ்நானம் (சமஸ்கிருதச் சொல்) அதாவது அறிவுக்குளிப்பு செய்த பின்னர் தான் கிறித்தவனாகிறான். எனவே “பார்ன் கிறிஸ்டியன்” என்பது சரியா? என்று பாப்பையா தான் சொல்ல வேண்டும்!
அப்புறம் இதை சபாநாயகரைப் பார்த்து சொல்கிறார். அப்படி என்றால் சபாநாயகரை இடையில் மதம் மாறியவர் என்று சொல்கிறாரா? தெரியவில்லை. கர்த்தருக்கே மெழுகுவர்த்தி வெளிச்சம்!
அப்புறம் பைபிள் போதித்த அன்பின் விளைவைப் பார்ப்போமா?
மற்ற வழிபாட்டு முறையினர் மீது, சிலுவைப் போர்களை நடத்தி கோடிக்கணக்கான மக்கள் இறந்தது. முதல் இரண்டு உலகப்போர்களுக்கு காரணமாகி, கோடிக்கணக்கானவர்களை காவு வாங்கியது. ஆப்ரிக்காவில் இயற்கை வழிபாட்டை அழித்து, எதிர்த்தோர்களை கொன்று குவித்தது. கென்யா தலைவர் ஜோமோட்டோ கூறினார் “எங்கள் கையில் ஆட்சியும், அவர்கள் கையில் பைபிளும் இருந்தது, பைபிளை எங்கள் கையில் கொடுத்து விட்டு ஆட்சியை அவர்கள் எடுத்துக் கொண்டனர்” என்று.
ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரை கொன்று குவித்தது இவர்களின் அன்பு! அமெரிக்காவில் “நேட்டிவ் இண்டியன்ஸ்” எனப்படும் செவ்விந்திய இனத்தை ஒட்டு மொத்தமாக அழித்து அன்பை நிலைநாட்டியது இவர்களின் அன்பு!.
உலக யுத்தத்தின் போது, வங்காள மக்களின் உணவைப் பறித்து முப்பது லட்சம் மக்கள் சாவதற்கு காரணமாக இருந்து, “இவ்வளவு பேர் இறந்தால் என்ன! அவர்கள் எலிகளைப் போல் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவார்கள்” என்று ஆணவமாகப் பேசியது இவர்களின் அன்பு!
வீரன் அழகுமுத்துக்கோனை பீரங்கி வாயிலில் கட்டி பிளக்கச் செய்தது இவர்களின் அன்பு! காளையார் கோயில் கோபுரத்தின் முன்பு பீரங்கியை நிறுத்தி, மருது சகோதரர்கள் சரணடையவில்லையெனில், கோபுரத்தை தகர்ப்போம் என்று கூறியது இவர்களின் அன்பு!
இவ்வாறு வகைவகையான அன்புகளை வகைப்படுத்திக் கொண்டே போகலாம்… இவையெல்லாம் எண்ணற்ற அன்பு…
அப்புறம் தமிழை எவ்வளவு படிச்சாலும் அன்பு உனக்கு வராது. நாம் தான் தமிழையே படிக்கவில்லையே, படித்து இருந்தால் இடித்துரைத்திருக்க முடியும்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்”
“அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”
“அன்பின் வழியது உயிர்நிலை”
“என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்”
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”
“வேறுவேறு உருவம் வேறு வேறு இயற்கை
நூறு நூறு ஆயிரம் இயல்பினராகி”
“ஜீவகாருண்யம்” சொன்ன சன்மார்க்க வள்ளலார், பொதுவுடைமை புண்ணாக்கு எல்லாம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
“ஆர்க்கும் இடுமின் அவரிவர் எண்ணன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே” என்று சொன்ன மூலன்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்றெல்லாம் தமிழ் கூறியது என்னவாயிற்று?
தமிழ், தமிழ் என தவ்விக் குதிப்பவர்கள் எங்கு போனார்கள்? ஏன் மௌனம்?
பதில் ரொம்ப சிம்பிள் “கிறித்தவ ஓட்டு வங்கி”
ஓட்டு வங்கிக்காக மொழியென்ன, தம் இனத்தையே காவு கொடுப்பார்கள்!
வழக்கம்போல் தமிழினம் ரீல்ஸ் பார்த்து குதூகலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் இருந்தால் என்ன செத்தால் என்ன, இப்போது தமிழையே ஆங்கிலத்தில் தான் தட்டச்சு செய்கிறார்கள்….
ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஒருவன் மதம் மாறினால் “நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று” எல்லாவற்றையும் இழப்பான் என்று சுவாமி விவேகானந்தர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை….
கட்டுரையாளர்: செந்தில்