தமிழகமும் தசரத மைந்தனும்

ஜகம் புகழும் ராமனைத் தமிழகம் மட்டும் சொந்தம் கொண்டாடாமல் விட்டு விடுமா என்ன?

இராம காதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில் ரீங்காரமிட்டு, அவர்கள் தம் ஊர்களின் பெயர்களில்- இறை வடிவங்களில்- இறை நாமங்களில்- இயற்கை வடிவங்களில் அவர்கள் கண்டும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். அவை நாள்தோறும் இன்றளவும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. வால்மீகி தவம் செய்கையில் அவர் மீது புற்று உருவாகியதனால் ‘வால்மீகி’ என்று பெயர் பெற்றார். அப்படி அவர் தவம் புரிந்த- அவருக்கு இறைவன் காட்சியளித்த தலமே வான்மிகியூர் என்று வழங்கப்பெற்று, தற்போது
திருவான்மியூர் என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் முக்கியப் பகுதியான கோயம்பேட்டின் சிவன் கோவில், சென்னை- காளஹஸ்தி வழியில் உள்ள சிறுவம்பேடு கிராமத்தில் உள்ள சிவன் கோவில் ஆகியவை ராமனின் புதல்வர்கள் குசலவர்கள் வழிபட்டவை என்று சொல்லப்படுகின்றன. போளூர் – ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) வழியில் உள்ள கேட்டவரம் பாளையம் என்ற ஊரில் ஆண்டு தோறும் நிகழும் ராம நவமி உற்சவம் மிகவும் புகழ் பெயர் பெற்றது.

காஞ்சி பெரியவர் இந்த ஊர் – உற்சவத்தைப் பற்றி பல முறை மிகவும் சிலாகித்துப் பேசியுள்ளார். அதைப் போல பிரபல தமிழ் பெண் எழுத்தாளர் அநுத்தமாவும் தன்னுடைய பல கதைகளில் எழுதியுள்ளார். கும்பகோணத்தில்   உள்ள ராமசாமி கோவில் நாயக்க மன்னர்கள் காலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு இயற்கை வண்ண ராமாயணக் காட்சிகளும், தஞ்சை அருகில் உள்ள வடுவூர் வடிவழகுடைய ராம விக்கிரஹம் என்று சொல்லிக் கொண்டே
போகலாம்.

சேலம் நகரிலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் காணும் தாரமங்கலம் என்ற ஊரின் பெயர்க்காரணங்களுள் ஒன்று வாலியின் மனைவி தாரையுடன் தொடர்புள்ளதாகக் கூறப் படுகிறது. அந்த பதிவிரதை அவ்வூரில் உள்ள சிவகாம சுந்தரி உடனுறை கைலாசநாதரை வழிபட்டாளாம். அதற்கேற்ப, அங்குள்ள வாலி – சுக்ரீவன் போரிடும் காட்சியும் – ராமன் ஏழு ஆச்சா மாறன்களை  ஒரே அம்பாள் துளைக்கும் சிற்பங்களும் புகழ் பெற்றவை. சேலத்திலிருந்து இன்னொரு திசையில் ராசீபுரம் செல்கையில் பொய் மான் கரடு என்று ஒரு சிறு குன்று அமைந்துள்ள கிராமம் உண்டு. இங்குள்ள குன்றின் பாறையின் மீது மாலை நேரத்தில் மரத்தின் நிழல் ஒரு மானைப் போல தோன்றும். அதனை இராமாயண மாரீசன் வேடம் பூண்ட மாய மானை நினைவுபடுத்துவதாகக் கூறுவர். (பொய் மான் கரடு என்ற பெயரில் அமரர் கல்கி ஒரு குறுநாவல் படைத்திருக்கிறார்.) ராமேஸ்வரம் , திருப்புல்லாணி பற்றியெல்லாம் விளக்க வேண்டுமா? நாடு முழுவதிலிருந்தும் ஹிந்து மக்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க ஏங்கும் தலங்கள் அன்றோ?

தென் கோடியில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் தெரிசனம்கோப்பு என்ற ஊரின் அருகில் ஒரு நீண்ட பாறை பூதாகாரமான தலையும், மார்பும், வயிறும், கால்களும் இருப்பது போலத் தோன்றும். இராமாவதார காலத்தில் அரக்கியான தாடகை வாழ்ந்துவந்த மலையே தாடகைமலை என்று கூறப்படுகிறது. மருந்துவாழ் மலை (மருத்துவா மலை) அதே கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாகர்கோவிலிலிருந்து   கன்னியாகுமரி  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடக்கு கிழக்கு திசையில் அமைந்துள்ளது. அனுமன் லட்சுமணனின் மூர்ச்சையைத் தெளிவிக்க சஞ்சீவி மலையைக் கொண்டு செல்கையில் அதன் ஒரு பகுதி விழுந்து இந்த மலையானது என்று நம்பப் படுகிறது. அரிய வகை மூலிகை வளம் நிறைந்தது. இதன் உயர்ந்த முகடு
1800 அடி உயரமுள்ள மலையாகும். தமிழகத்தில் வடக்கு- தெற்கு-மேற்கு என்று எங்கு சென்றாலும் தசரத மைந்தன் – தினமணி குல திலகன் நம்முடன் துணை வருகிறான். அருள் பாலிக்கிறான்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி, & எம்.ஆர். ஜம்புநாதன்