தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்- மத்திய அரசு 

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதற்காக பிரதமர்  நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் 75 மருத்துவக்  கல்லூரிகளை ரூ. 24,375 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில் தமிழகத்தில் திருப்பூர் ,நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல்  விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க தமிழகம் சார்பில் கோரப்பட்டது. இதற்காக கடந்த மாதம் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து நாடு முழுவதும் அமைய உள்ள 31 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தில் 6 கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தக் கல்லூரிகள் தலா ரூ, 325 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளன. தமிழகத்தில் தற்போது 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3500 க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. புதிதாக அமைய உள்ள கல்லூரிகளில் 450 இடங்கள் கிடைக்க  உள்ளன. இதன் மூலம் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்.

 தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர் ராமநாதபுரம் திண்டுக்கல் நாமக்கல் திருப்பூர் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய அரசு அனுமதியும் நிதி உதவியும் வழங்கியதற்கு  பிரதமர் நரேந்திர மோடிக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  நன்றி  தெரிவித்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று நிகழ்வு. இதற்காக ரூ. 1,950 கோடி மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கி அதில் ரூ. 1,170 கோடி வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *