தமிழகத்தில் வந்தே மாதரம் உருவாக்கிய சுதந்திர எழுச்சி

நவம்பர் 7, 2025, பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் இயற்றப்பட்ட அமர கீதமான “வந்தே மாதரம்” பாடல் உருவாகி, 150 ஆண்டுகள் நிறைவடைந்த நாளாகும். இந்தப் பாடல் பாரதத்தின் தேசிய உணர்வை எழுப்பிய மாபெரும் படைப்பாகும்; அதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. இப்பாடல் முதன்முதலில் 1875 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருந்தாலும், பின்னர் 1896 ஆம் ஆண்டில், “இந்திய தேசியக் காங்கிரஸ்” மாநாட்டில், தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் உயிர்ப்புப் பெற்றது.

பாரதியாரும் “வந்தே மாதரம்” பாடலும்
1907ஆம் ஆண்டிலேயே “வந்தே மாதரம்” பாடல், தமிழ் மொழிக்கு பாரதியாரால் மொழி பெயர்க்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்திற்கும், தேசிய ஒற்றுமைக்கும் அடையாளமாகக் கண்டார். 1909ல் வெளியான “ஜன்மபூமி” என்ற நூலின் முன்னுரையில், வந்தே மாதரம் பாடலின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய உணர்வின் சின்னம்
தேச பக்தியையும், ஒற்றுமையையும் தூண்டுவதற்காக “வந்தே மாதரம்” என்ற எழுச்சியுடன் கூடிய சக்தி வாய்ந்த கவிதையைத் தாமே இயற்றினார். சாதி–மத வேறுபாடுகளைக் கலைந்து, பாரத மாதாவின் பிள்ளைகளாக ஒன்றிணைந்து, சுதந்திரத்திற்காகப் போராடுமாறு மக்களை அழைத்தார்.

சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும், “இந்தியா” மற்றும் “விஜயா” போன்ற பத்திரிகைகளின் வெளியீட்டாளராகவும் இருந்த பாரதியார், தேசிய உணர்வுகளைப் பரப்பவும், விடுதலைப் போராட்டத்தின் தீயை பரப்பினார். “விஜயா” பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் கூட, “வந்தே மாதரம்” முழக்கத்துடன் பாரத மாதாவின் ஓவியம் இடம் பெற்றிருந்தது.

தமிழ்நாட்டில் ஒலித்த “வந்தே மாதரம்” முழக்கம்
1908 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டு மக்கள், தேசபக்தித் தீயால் ஊக்கமடைந்து, தெருக்களில் ஆங்கிலேய அதிகாரிகளைச் சூழ்ந்து, அவர்களிடம் “வந்தே மாதரம்” என சொல்லுமாறு வற்புறுத்தினர்.
அதே ஆண்டில், துறைமுக நகரமான தூத்துக்குடியில் உள்ள கொரல் மில் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம், தொழிலாளர்கள் வரலாற்றில் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட, பிரிட்டிஷ் சுரண்டலுக்கு எதிரான மக்கள் எழுச்சிகளில் ஒன்றாகப் பதிவானது.
1908 மார்ச் 7 ஆம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில், ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளர்கள் தெருக்களில் “வந்தே மாதரம்!” என முழங்கியபடி ஊர்வலமாகச் சென்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வந்தே” மற்றும் “மாதரம்” —
முடி திருத்துனரின் தேசபக்தி
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரங்கன் என்ற முடி திருத்துனர், வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் தேசபக்தியால் ஆழமாகத் தூண்டப்பட்டு, தன் மகனுக்கு “வந்தே” என்றும் மகளுக்கு “மாதரம்” என்றும் பெயர் வைத்தார்.
அவரது வீட்டிற்கு யாரேனும் விருந்தினராக வந்தால், அவர்களைத் தனது குழந்தைகளை அழைக்கச் சொல்லி, அவர்கள் வாயிலாக “வந்தே மாதரம்” என்ற புனித சொற்களை உரைக்கச் செய்தார். தன் குழந்தைகளுக்கு “வந்தே” மற்றும் “மாதரம்” என்று பெயர் வைத்த ரங்கன், தனது அன்றாட வாழ்க்கையிலும் தேசபக்தியின் தைரியத்தை வெளிப்படுத்தினார்.
அவர், ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் ரங்கசுவாமி அய்யங்காருக்குச் சவரம் செய்ய மறுத்தார். வ.உ. சிதம்பரம்பிள்ளை மற்றும் சுப்பிரமணிய சிவா தலைமையில், தூத்துக்குடியில் எழுந்த சுதேசி இயக்கத்தை அடக்க, ஆங்கிலேய கலெக்டர் ஒரு படை பிரிவை வரவழைக்க உத்தரவிட்டபோது, அதற்கு ஆதரவு அளித்தவராக அவர் அறியப்பட்டார்.
தன் தொழில்முறையில், ரங்கன் செய்த இந்த சிறிய மறுப்பே, “வந்தே மாதரம்” எழுப்பிய தேசபக்தியின் பேரலை, தமிழ்நாட்டெங்கும் எவ்வாறு பரவியிருந்தது என்பதை வெளிப்படுத்தியது.
ரங்கசுவாமி அய்யங்காருக்கு முகத்தின் பாதி பகுதி மட்டுமே சவரமாயிருந்த நிலையில் ரங்கன் அவருக்குச் சவரம் செய்ய மறுத்தார். இச்செயல், ஆங்கிலேய ஆட்சிக்கும் அதனுடன் ஒத்துழைத்தவர்களுக்கும் எதிரான மௌனப் போராட்டத்தின் சின்னமாக மாறியது.

“வந்தே மாதரம்” — சுதந்திரக் கப்பலின் கொடியில்
“வந்தே மாதரம்” என்ற தேசிய முழக்கம், தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத் தலைவரான வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு ஆழமாக ஊக்கமளித்தது. அவருடன் சுப்பிரமணிய சிவா மற்றும் சுப்பிரமணிய பாரதி போன்ற தலைவர்களும், கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் இயக்கப் பிரச்சாரங்களில் “வந்தே மாதரம்” முழக்கத்தைப் பெரிதும் பயன்படுத்தினர்.
அந்த தேசிய உணர்வின் பேரில், வ.உ.சி. அவர்கள் தூத்துக்குடியில் “சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை” நிறுவினார். அது ஆங்கிலேய வாணிப ஆதிக்கத்திற்கு கடும் சவாலாக இருந்தது. அந்தக் கம்பெனியின் கப்பல், “வந்தே மாதரம்” என்று பொறிக்கப்பட்ட கொடியை ஏந்தி, கடலிலும் அதே முழக்கம் சுதந்திரத்தின் குரலாக எதிரொலித்தது.

வ.உ. சிதம்பரம்பிள்ளை — “வந்தே மாதரம்” பிள்ளை
“வந்தே மாதரம்” என்ற உயிர்ப்பூட்டும் மந்திரத்தை, தென்னிந்திய மக்களிடையே பரப்பிய முன்னோடியாக இருந்ததற்காக, வ.உ. சிதம்பரம்பிள்ளை அன்போடு “வந்தே மாதரம் பிள்ளை” என அழைக்கப்பட்டார். “வந்தே மாதரம்” என்ற முழக்கத்தையும், அதன் தேசபக்தி உணர்வையும் சுதேசி இயக்கத்தின் இதயமாக ஆக்கி, தமிழ்நாட்டெங்கும் அவர் ஒரு தேசிய எழுச்சியை ஏற்படுத்தினார்.
1908ஆம் ஆண்டு, அவர் “வந்தே மாதரம்” முழக்கத்தைக் கொண்ட தேசியப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதற்காக தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இது, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பெரும் போராட்டங்களையும், தன்னிச்சையான மக்கள் எழுச்சியையும் உருவாக்கியது; அதுவே பின்னர் “வந்தே மாதரம் இயக்கம்” எனப் புகழ்பெற்றது.

“வந்தே மாதரம்” முழக்கத்துடன் உயிர்தந்த வீரன் — திருப்பூர் குமரன்
1932 ஜனவரி 11 அன்று, திருப்பூரில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்ட ஊர்வலத்தின் போது, குமரன் தடைசெய்யப்பட்டிருந்த, தேசியக் கொடியை தன் கைகளில் ஏந்தியிருந்தார். போராட்டம் தீவிரமடைந்ததும், ஆங்கிலேய போலீசார் கடுமையானத் தடியடி செய்தனர். குமரன் பல முறை தாக்கப்பட்டு, தலையில் மரணத்திற்குக் காரணமான அடியையும் பெற்றார். உயிர் இழந்த போதிலும், தேசியக் கொடியை உயரமாக ஏந்திக்கொண்டிருந்தார்.
இறுதியில், “வந்தே மாதரம்” என முழங்கியபடி தரையில் விழுந்தார்; அந்த நேரத்திலும், அவரது கைகளில் கொடி இன்னும் இறுக்கமாகப் பிடித்திருந்தது. அவரது இந்த வீர மரணம், அவருக்குக் “கொடி காத்த குமரன்” என்ற பெயரை அளித்தது.

“வந்தே மாதரம்” — வீர ரணங்களில் ஒலித்த முழக்கம்
“வந்தே மாதரம்” என்ற தேசிய முழக்கம், தமிழ்நாட்டில் தங்கியிருந்த ஆங்கிலேய படையில் பணியாற்றிய வீரர்களையும்கூடத் தூண்டிய சக்தியாக இருந்தது.
நான்காம் மதராஸ் கடற்கரை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருபத்து நான்கு இளம் வீரர்கள், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு, மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் மதராஸ் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
ஆனால் அந்த இறுதி தருணத்திலும், அவர்களின் உதடுகளில் “வந்தே மாதரம்” முழக்கம் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த முழக்கம் சிறையின் சுவர்களைத் தாண்டி, தேசத்தின் இதயத்தில் ஒலித்தது.

“வந்தே மாதரம்” முழக்கத்துடன் உயிர்தந்த வீரன் — வஞ்சிநாதன்
“வந்தே மாதரம்” என்ற தேசிய முழக்கம், நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களின் தேசபக்தி உறுதியை தீவிரப்படுத்தியது. 1910 ஆம் ஆண்டு, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஒருமித்த இளைஞர்களை இயக்குவதற்காக “பாரத மாதா சங்கம்” எனும் ரகசிய அமைப்பை நிறுவினார். குறுகிய காலத்திலேயே, 20,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான இயக்கமாக அது வளர்ந்தது. அந்த அமைப்பின் வீரர்களில் ஒருவர் வாஞ்சிநாதன் அய்யர்.
1911 ஜூன் 17 அன்று, மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆங்கிலேயர் கலெக்டர் ராபர்ட் ஆஷை சுட்டுக் கொன்று, பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் தீப்பொறியாக மாறினார், வாஞ்சிநாதன். சுட்டபின் சில நொடிகளில், உயிர் துறக்கும் முன், அவர் “வந்தே மாதரம்” என முழங்கினார். அந்த முழக்கம், அவரின் உயிருடன் இணைந்த இறுதி சுவாசமாக இருந்தது.
வ.உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மற்றும் நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் சேர்ந்து, தென்னிந்தியாவின் முதன்மைப் புரட்சியாளர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர், வாஞ்சிநாதன்.

கட்டுரையாளர்: ராமகிருஷ்ண பிரசாத்

வடதமிழக இணைச் செயலாளர், ஆர்.எஸ்.எஸ்

தமிழில்: திவ்யா இரா. கு., முனைவர் பட்ட ஆய்வாளர்