தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க.,வும், காங்கிரசும் பாடுபடவில்லை” என பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் ‛ என் மண்: என் மக்கள்’ பாத யாத்திரை நிகழ்ச்சி நிறைவு விழா மற்றும் பா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டம் பல்லடத்தில் நடந்தது. பல்லடம் மாதப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், திறந்த வேனில் வந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.
மேடையில் மோடிக்கு எல்.முருகன், தோடர் பழங்குடியினர் தயாரித்த துண்டு ஒன்றை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து மோடிக்கு, ஜல்லிக்கட்டு காளை சிலை பரிசாக அண்ணாமலை வழங்கினார். தொடர்ந்து கூட்டணி கட்சியினர் மஞ்சள் மாலை அணிவித்தனர். இந்த கூட்டத்தில் மோடி வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை துவக்கினார். அவர் பேசியதாவது: இன்றைக்கு பல்லடத்தில் உங்கள் மத்தியில் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கொங்கு பகுதி, இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கிறது. ஜவுளித்துறை வளர்ச்சியில் இந்த பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு தொழில்துறை வளர்ச்சி பெற்று வருகிறது. காற்றாலை மின்சாரத்தில் முக்கிய பங்கு உள்ளது. தொழில்முனைவோருக்கும் உறுதுணையாக உள்ளது. பொருளாதாரத்தில் கொங்கு பகுதி மிகப்பெரிய பங்காற்றி வருகிறது.
உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பது போல் உளளது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை தமிழகத்திற்கு உள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய மையமாக மாறியுள்ளது.
டில்லியில் ஏசி அறையில் அமர்ந்துள்ளவர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சி செய்கின்றனர். அரசை விமர்சனம் செய்கின்றனர். 2024 தமிழகத்தில் அனைவராலும் பேசப்படும் கட்சி பா.ஜ., மட்டும் தான்.
‛என் மண்; எண் மக்கள்’ யாத்திரைக்கு வரலாற்றில் பெரிய வரவேற்பை தந்துள்ளீர்கள். இதற்கு நீங்களே சாட்சி. இந்த யாத்திரைக்கு அதன் பெயராலும் பெருமை கிடைத்து உள்ளது. இந்த யாத்திரையின் பெயர், இந்த மண்ணிற்கும், கட்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பை அளித்து உள்ளது. இந்த யாத்திரை தமிழகத்தை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது. யாத்திரையை சிறப்பாக நடத்திய அண்ணாமலைக்கு வாழ்த்துகள் நாடே முதன்மை என்பது பாஜ.,வின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் பாஜ., பாடுபட்டு வருகிறது. தொண்டர்களும் தேசமே பிரதானம் என உழைக்க வேண்டும்.
என்னை பொறுத்த வரை தமிழ் மொழி, கலாசாரம் மிக சிறப்பானதாக உள்ளது. காசி தமிழ் சங்கமம், செங்கோல் வாயிலாக தமிழுக்கு மரியாதை செலுத்தி உள்ளேன். புனிதமான செங்கோலை நாட்டின் மிக உயிரிய பார்லிமென்டில் இடம்பெறச் செய்துள்ளோம்.
1991ல் நான் ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து துவங்கினேன். அந்த பகுதி மண்ணை நெற்றியில் பூசி யாத்திரையை துவக்கினேன். தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போதும் தமிழகத்தை பா.ஜ., தனது இதயத்தில் வைத்து உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க.,வும், காங்கிரசும் பாடுபடவில்லை இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தமாகா தலைவர் வாசன், புதிய நீதி கட்சியின் ஏசி சண்முகம், ஐஜேகே பாரிவேந்தர், ஜான் பாண்டியன், தேவநாதன், தமிழருவி மணியன், செல்ல முத்து உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.