** குடும்ப நீதிமன்றங்கள் 1980-களின் இறுதியில் செயல்படத் தொடங்கின. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைக் காவல் (Child custody) தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்ததால், இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும், பல குடும்ப நீதிமன்றங்களை அரசு உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏன்? கூட்டுக் குடும்ப முறை சிதைந்து தனிக்குடும்பங்கள் பெருகுவதால் இந்த நிலை.
** முன்பெல்லாம் விவாகரத்து என்பது 1990-களில் மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. பெருநகரங்களில் உள்ள குடும்ப நீதிமன்றங்களில் கூட, மிகக் குறைந்த அளவிலான வழக்குகளே பதிவாகின. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் 1990 முதல் 2010-களுக்குள் விவாகரத்து பதிவுகள் 30% க்கும் மேல் உயர்ந்தன. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கடந்த 20 ஆண்டுகளில் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
** தற்போது விவாகரத்து கோருபவர்களில் 24 முதல் 34 வயதுக்குட்பட்ட இளந்தம்பதியினரே 35% முதல் 50% வரை இருக்கிறார்கள். திருமணம் முடிந்த 1 முதல் 4 ஆண்டுகளுக்குள்ளேயே பிரியும் போக்கு கடந்த காலங்களை விட இப்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
முக்கியமான பிரச்சினை இளைய தலைமுறையினர், நவீன வாழ்வியல் என்ற கோட்பாட்டிற்கு உள்ளே புகுந்து கொண்டு, ஹிந்து வாழ்வியல் கோட்பாடுகளை உள்வாங்காமல் விமர்சனம் செய்கிறார்கள். இதன் காரணமாக ஏற்படுவது குடும்பச் சிதைவு. தனிக் குடும்பத்தின் அங்கத்தினர்கள், குறிப்பாக இளைஞர்கள், பொருள் தேடும் அவசரத்தில் ஆன்மீகம் தவழும் கூட்டுக் குடும்ப வாழ்வு தரும் மன அமைதியை பறிகொடுத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
தனிக் குடும்பத்தில் குறிப்பாக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் போது, குழந்தைகள் பெரும்பாலும் தனிமையிலேயே வளர்கிறார்கள். தாத்தா – பாட்டி சொல்லி கற்றுக் கொண்ட நல்ல கதைகள், அதன் வாயிலாக அறநெறிகள் இன்றைய குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. வீட்டில் உடன் பிறப்புகள் இல்லாமலோ அல்லது மற்ற உறவினர்கள் இல்லாமலோ வளரும்போது, பொம்மை / உணவு பகிர்தலில் அல்லது கவனம் பகிர்ந்து கொள்வதில் (Sharing and Caring) சிந்தனை செல்லாததால், குழந்தைகள் அதிக நேரத்தைத் தனிமையில் அல்லது மொபைல், தொலைக்காட்சி போன்ற திரைகளுக்கு (Screen time) முன்னால் கழிக்க நேரிடுகிறது. இது அவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும். வீட்டுக்குள் சுயநலம் தலைதூக்குகிறது. தனி மனிதனின் சுயநலப் போக்கு காரணமாக, குடும்பத்தில் நன்னெறிகள், ஒழுக்கக் கோட்பாடுகளை கடைபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது, அல்லது முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.
தனிக்குடும்பத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதில் ஏற்படும் சிக்கல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கூட்டுக் குடும்பத்தில் இருப்பது போல விட்டுக்கொடுத்துப் போகும் சூழல் வீட்டில் இல்லாததால், தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை எதிர்கொள்ளும்போது வளரும் தலைமுறையினர் மனதில், எளிதில் சீறுவது அல்லது விரக்தி அடைவது போன்ற விகாரங்கள் உருவாகலாம். இது பிற்காலத்தில் அவர்கள் சமுதாயத்தோடு ஒத்துப்போவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தனிக்குடும்பக் கலாச்சாரத்தின் நேரடி விளைவு, முதியவர்கள் தனியே விடப்படுவது; அவர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் தார்மீக ஆதரவின்றி தவிப்பதும், இதனால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், சமுதாயத்தின் ஒரு பெரிய பலவீனம். வீட்டிலோ முதியவர்களின் அனுபவ அறிவும், அவர்கள் சொல்லும் கதைகளும் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்காமல் போவதால், பாரம்பரிய விழுமியங்கள் சிதைகின்றன. ஒரு அவசரம் என்றாலோ, நோய்வாய்ப்படும் போதோ தனிக்குடும்பங்களுக்கு உடனடியாக உதவ ஆட்கள் இருப்பதில்லை. கூட்டுக் குடும்பங்களில் கணவன், மனைவி இடையே பிரச்சினை வரும்போது, பெரியவர்கள் தலையிட்டுச் சமரசம் செய்து வைப்பார்கள். ஆனால், தனிக்குடும்பத்தில் ஈகோ (Ego) பிரச்சினைகளைத் தீர்க்க ஆள் இல்லாததால், சிறிய மனஸ்தாபங்கள் கூட விவாகரத்து வரை சென்று விடுகின்றன. தம்பதிகள் தங்களுக்குள் முழுமையான புரிதலின்றி வாழ்வதே இந்தப் போக்கிற்கு மூலகாரணம்.
குடும்பம் என்பது சமுதாயத்தின் மிகச்சிறிய அலகு (Unit). அதில் ஏற்படும் விரிசல்களும், அழுத்தங்களும் ஒட்டுமொத்த சமுதாயக் கடலிலும் அலைகளை உண்டாக்குகின்றன. தனிக்குடும்பமாக வாழ்ந்தாலும், சுற்றத்தோடும் சமுதாயத்தோடும் ஆரோக்கியமான தொடர்பைப் பேணிக்காப்பது இந்த விளைவுகளைக் குறைக்க உதவும்.
தீர்வு
நம் குடும்பத்துக்குள் பரஸ்பர மரியாதை, வெளிப்படையான உரையாடல், பொறுப்புகளை அனைவரும் பகிர்ந்து கொள்வது, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது, மூத்தவர்களின் அனுபவத்தை மதிப்பது மட்டுமல்லால், அவர்களின் அறிவுரைகளையும் கடைபிடிப்பது, விட்டுக் கொடுத்து வாழ்வது இவை குடும்பச் சிதைவு சவாலை எதிர்கொள்ள உதவும். அண்டை அயலாரும் ‘நாம் இதுபோல அல்லவா வாழணும்!’ என்று ஏங்கும் சூழல் ஏற்படும்.
கட்டுரையாளர்: ஈரோடு சரவணன்