தனது வாரிசுகள் சிறையில் இருந்தபோதும், சங்கப்பணியை செய்த வேணுகோபாலன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, வேணுகோபாலன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

பாபு – லட்சுமிபாய் தம்பதியினருக்கு மகனாக 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார், வேணுகோபாலன் ஜி. தனது பள்ளிப் படிப்பை அகரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்த பின்பு, டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றார்.

அதன் பின்னர் சென்னை பெரம்பூரில் உள்ள புகழ்பெற்ற பி & சி மில்லில் பணிபுரிந்தார். அவரது குடும்பம் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்ததாக இருந்தாலும், தேசிய சிந்தனையிலும், நாட்டுப்பற்றிலும் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது.

1939 ஆம் ஆண்டு தமிழகத்தில் சங்கத்தை ஆரம்பிக்க வந்த தாதாராவ் பரமார்த் ஜி, சென்னை ராயப்பேட்டையில் ஷாகா ஆரம்பித்தார். பின்னர் பி & சி மில்லில் சங்கப்பணி செய்தார். மில் ஊழியர்கள் பெரும்பான்மையானோருக்கு சங்க அறிமுகம் செய்த தாதாராவ் பரமார்த் ஜியால் ஈர்க்கப்பட்டு சங்கத்திற்கு வந்தார் வேணுகோபாலன் ஜி.

சங்கக் கொள்கையில் திளைத்து, தனது தேசப்பணியை தொடர்ந்தார். 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்திஜியின் படுகொலைக்கு பின்னர், வீண்பழியுடன் சங்கம் தடை செய்யப்பட்ட போது, அதனை எதிர்த்துப் போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளிகள் மூலம் மதமாற்றம் நடப்பதைக் கண்டு அதிர்ந்து போன வேணுகோபாலன் ஜி, தனது பி&சி மில் வேலையை ராஜினாமா செய்து விட்டு, 1947 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் “பாரதமாதா” பள்ளிக்கூடத்தை தோற்றுவித்தார். சென்னையில் நடந்த பல சங்க நிகழ்ச்சிகளுக்கு அந்தப் பள்ளியே தூணாக இருந்தது என்றால், அது மிகையல்ல.

அந்தப் பள்ளிக்கும், வேணுகோபாலன் ஜி வீட்டிற்கும் சங்கத்தின் மூத்த முன்னோடிகளான பரமபூஜனீய குருஜி, தத்தோபந்த் தெங்கடி ஜி, தத்தாஜி டிடோல்கர், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ஜி, சிவராம் ஜி, பாஸ்கர் ராவ் ஜி, கோவிந்தன் ஜி, ஹரி பகவான் ஜி, உத்தமராஜ் ஜி, சூரி ஜி, இராம கோபாலன் ஜி, சுப்பாராவ் ஜி, அண்ணாமலை ஜி, சண்முகநாதன் ஜி போன்ற பல சங்க அதிகாரிகள் வருகை புரிந்துள்ளனர்.

சங்கப் பயிற்சி முகாம் போன்ற பல முகாம்கள், வர்காக்கள் அந்தப் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளது. ஒருமுறை வேணுகோபாலன் ஜியிடம் குருஜி அவர்கள், இந்தப் பள்ளிக்கு “பாரதமாதா பள்ளிக்கூடம்” என எப்படி இந்தப் பெயரை தேர்ந்து எடுத்தீர்கள்? என ஆச்சரியமாக கேட்டதாக, அவரது மகன் பாரதமாதா மோகன்ஜி நமக்கு தெரிவித்தார். பள்ளியின் சீருடை சங்க கணவேஷ் (சீருடை) போலவே இருக்கும்.

1975 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட போது, பாரத தேசமே கொந்தளித்தது. அதனை எதிர்த்துப் போராடிய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகினர். அந்த நேரத்தில், தமிழகத்தில் சங்கத்தின் முன்னெடுப்பில் பல போராட்டங்கள் நடந்தேறின.

சங்க கார்யகர்த்தர்கள் பலர் கைதாகி சிறை வாசத்தை அனுபவித்தனர். அவர்களைத் தொடர்ந்து சந்தித்து, உடல் நலனில் அக்கறைக் கொண்டு விசாரித்து வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டார், வேணுகோபாலன் ஜி. அவரது இரண்டு மகன்களான சுந்தரவதனன் ஜி, மோகன் ஜி மற்றும் மகள் பரமேஸ்வரியும், தங்களது இளம் வயதிலேயே சிறையில் இருந்தனர்.

ஒரே நேரத்தில் தனது மூன்று வாரிசுகளும் சிறையில் அவதிப்பட்டு இருந்தபோதும் வேணுகோபாலன் ஜி சங்கம் சொன்ன பணியுடன், எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்திலும் தீவிரமாக இருந்தார்.

தேசியவாதிகள் பலர் பாரதமாதா பள்ளியில் தங்கி இருந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதால், பாரதமாதா பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிப் பேருந்து தாக்குதலுக்கு உள்ளாகின. கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கினர். பள்ளியில் சோதனையும் நடத்தப்பட்டது. எனினும் மனஉறுதியுடன் தேசப் பணியைத் தொடர்ந்தார்.

அந்த நேரத்தில் சென்னையில் பெரம்பூர், பட்டாளம் பகுதிகளை மையமாக வைத்து வடசென்னையில் சங்க வேலைகள் நடந்தன. அதற்கு பக்க பலமாக இருந்தார். கைது செய்யப்பட்ட சங்க கார்யகர்த்தர்களை வெளியில் கொண்டு வர ஜாமீன் கேட்டனர். அதற்கு தனது சொத்துப் பத்திரங்களை வழங்கி, அவர்களை வெளியில் கொண்டு வந்தார்.

சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டை முன்னிட்டு, கன்னியாகுமரியில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் எழுப்பியதில், முக்கியப் பங்கு வகித்தார். அதற்காக பலரையும் சந்தித்து நன்கொடை பெற்றார். ஜனசங்கத்தை தமிழகத்தில் தோற்றுவித்ததிலும் முக்கியப் பங்கு வகித்தார். அதன் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டார்.

ஜனசங்கத்தின் முக்கியப் பிரமுகர்களான அடல் பிகாரி வாஜ்பாய் ஜி, ஜனா கிருஷ்ணமூர்த்தி ஜி, அத்வானி ஜி, முரளி மனோகர் ஜோஷி ஜி போன்ற பல ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் அன்பைப் பெற்றார். அவர்கள் சென்னைக்கு எப்போது வந்தாலும், வேணுகோபாலன் ஜியை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.

ராதாபாய் அம்மாளை திருமணம் செய்தார். அவர்களுக்கு சுந்தரவதனன், மோகன், முரளிதரன் என்ற மூன்று மகனும், துர்கா தேவி, சுசிலா தேவி, பரமேஸ்வரி என்ற மூன்று மகள்களும் இருந்தனர்.

இதில் பரமேஸ்வரி அம்மாள் சமிதி முகாம் முடித்துள்ளார். மோகன்ஜி மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும், சுந்தரவதனன் ஜி மற்றும் முரளிதரன் ஜி இரண்டாம் ஆண்டு சங்கப் முகாமை முடித்து உள்ளார்கள்.

1978 ஆம் ஆண்டு முதல் 1988 வரை என பத்து ஆண்டுகள் சங்கத்தின் பிரச்சாரக்காக (முழுநேர ஊழியர்) இருந்துள்ளார் மோகன் ஜி. அவரது மகனும் சங்கப் பயிற்சி முகாமை முடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ல் இறைவனடி சேர்ந்தார், வேணுகோபாலன் ஜி. அந்த நேரத்தில் அவரது மகன் சுந்தரவதனன் ஜி, எமர்ஜென்சிக்கு எதிராக போராடியதால் சிறையில் இருந்தார்.

அவரை தந்தையின் மரணத்திற்குகூட வெளியே வரவிடாமல், கடைசியாக ஒருமுறை தனது தந்தையை பார்க்ககூட அனுமதிக்காமல், துயரத்தைத் தந்தனர் அன்றைய ஆட்சியாளர்கள்.

தனது சொந்த நலனை விட, சங்க வேலைக்கு அதிக நேரம் கொடுத்து செய்ததுடன், தனது மூன்று வாரிசுகள் ஓரே நேரத்தில் சிறையில் இருந்து துன்பம் அனுபவித்த போதும், சங்கப் பணியை மகிழ்ச்சியாக செய்து, தனது வாரிசுகளையும் சங்கப் பணியில் ஈடுபடுத்தி, வடசென்னையில் சங்கத்தை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்த வேணுகோபாலன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.