”சித்த மருத்துவம் வாயிலாக, ‘டெங்கு’ காய்ச்சலை கட்டுப்படுத்தி, தமிழகம் சாதனை புரிந்துள்ளது,” என, மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் எஸ்சோ நாயக் தெரிவித்தார்.
‘சித்த மருத்துவத்தின் தந்தை’ என போற்றப்படும், அகத்தியர் பிறந்த, மார்கழி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திரத்தன்று, சித்த மருத்துவ தினம், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தாக்கம்மூன்றாவது சித்த மருத்துவ தின கொண்டாட்டம், சென்னை, ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், விழா மலரை வெளியிட்ட, தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசியதாவது:தெலுங்கானா கவர்னராக பதவியேற்ற காலகட்டத்தில், அங்கு, டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக இருந்தது.
உடனே, தமிழக அரசின் மருத்துவ திட்டங்களை கேட்டறிந்து, தெலுங்கானாவில் நிலவேம்பு கஷாயத்தை, அனைவருக்கும் கொடுக்க நடவடிக்கை எடுத்தேன். இதன் வாயிலாக, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, தமிழக அரசை, நான் பாராட்டுகிறேன். தமிழகத்தில், ஜெயலலிதா செயல்படுத்திய, குழந்தைகளுக்கான, ‘அம்மா சஞ்சீவி பெட்டகம்’ திட்டம், தெலுங்கானாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் தெலுங்கானா இடையே பாலமாக, நான் செயல்படுவேன்.இவ்வாறு, அவர் பேசினார்.
மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் எஸ்சோ நாயக் பேசியதாவது:சித்த மருத்துவத்தில் அறிவியல் உள்ளது. கோவாவில், அடுத்த மாதம், ஆராய்ச்சி மையம் நிறுவ இருக்கிறோம். இந்த ஆராய்ச்சி மையம், சித்த மருத்துவ படிப்புகளை வழங்கவும், ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் செயல்படும். சித்த மருத்துவத்தின் வாயிலாக, தமிழக அரசு, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி, சாதனை படைத்துள்ளது. அம்மா சஞ்சீவி மருத்துவ பெட்டகத்தை, தமிழக அரசு இலவசமாக வழங்கி வருவதன் வாயிலாக, குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
யோகா மையம்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ”சித்த மருத்துவத்தில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. ”செங்கல்பட்டு மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில், யோகா மையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சித்த மருத்துவம், தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்.
அதற்கு, அரசு எப்போதும் துணை நிற்கும்,” என்றார்.நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் அமைச்சக கூடுதல் செயலர் பிரமோத்குமார் பதக், தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.