டிரோன்களை பயன்படுத்தும் பாகிஸ்தான்

சமீபத்தில் பாரதத்தில் ஜம்மு விமானப்படை தளத்தில் இரண்டு சிறிய டிரோன் தாக்குதல்கள் நடைபெற்றன. இது பாகிஸ்தானின் சதி என கண்டறியப்பட்டுள்ள சூழலில், அந்த டிரோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என தற்போது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் ஆர்வம்:

பாகிஸ்தான் கடந்த 2 – 3 மாதங்களாக டிரோன் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. சீனா மற்றும் துருக்கி நாடுகள், பாகிஸ்தானுக்கு டிரோன்களை வழங்கி வருகின்றனர். இது குறித்த நீண்ட விவாதம் கடந்த ஏப்ரல் 15ல் பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி மற்றும் சீன டி.ஜே.ஐ நிறுவனத் தலைவர் டா ஜியாங் இடையே நடைபெற்றது.

உற்பத்தி:

பாகிஸ்தான் அரசு பெருமளவில் டிரோன்களை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை இந்த விவாதத்தில் முன்வைத்தது. மேலும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் துருக்க டிரோன் உற்பத்தியாளரான பேரக்தரின் தொழிற்சாலைக்கு சென்று இரண்டு வகையான டிரோன்களை பார்வையிட்டு அதனை பாகிஸ்தானில் கூட்டாக உற்பத்தி செய்வது குறித்து பேசியுள்ளனர். இந்தவகை டிரோன்கள், 22,5000 அடி உயரத்தில் 24 மணி நேரம் பறக்கக்கூடியது என்பதுடன் 150 கி.மீ தூரத்தில் உள்ள பொருட்களையும் துல்லியமாக படமெடுக்கக் கூடியது.

சீன டிரோன்கள்:

கடந்த மே 22 முதல் ஜூலை 6க்குள் பாகிஸ்தானின் முப்படை அதிகாரிகள் குழு சீனாவில் உள்ள வான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு விஜயம் செய்தது. இந்த குழு மேம்பட்ட உயர் முதல் நடுத்தர உயர விமான பாதுகாப்பு அமைப்பு (HIMADS) பற்றி ஆய்வு செய்தது. பாலகோட் போன்ற தாக்குதல் நடைபெற்றால் சீனாவின் ஹிமாட்ஸ் டிரோன்கள் தங்களை பாதுகாக்கும் என பாகிஸ்தான் நம்புகிறது.

சோதனை:

சமீபத்தில் யு.ஏ.வி எஸ் 250லிருந்து ஏவுகணையை வீசி பாகிஸ்தான் சோதனை செய்தது. இதன் நோக்கம், பாகிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள பாரத எல்லை பிராந்தியங்களை உளவு பார்ப்பது, தாக்குதல் நடத்துவது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

பாகிஸ்தானின் சொந்த டிரோன்:

பாகிஸ்தான் விமானப்படை மற்றும் தேசிய பொறியியல் மற்றும் அறிவியல் ஆணையம் (நெஸ்காம்) உருவாக்கிய புராக் டிரோனில் இருந்து புர்க் லேசர் வழிகாட்டும் ஏவுகணையை சோதிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முதன்முதலில் கடந்த மார்ச் 2015ல் கைபர் பிராந்தியத்தில் தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதாக உலக நாடுகளால் நம்பப்படுகிறது.

தற்காப்பு:

மற்ற நாடுகளின் டிரோன்களின் இயக்கத்தை கண்காணிப்பது, தடுப்பது, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக ஜெர்மனியில் இருந்து ‘ஆர்டோஸ் சிஸ்டம்ஸ்’ வாங்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

பாரத அரசும் நமது ராணுவமும் இந்த விஷயங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் உள்ளது. எனவே, சரியான சமயத்தில், தேவையான நடவடிக்கைகளை எடுத்து தன்னை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பாரதம் நன்கு அறியும். தேவைப்பட்டால் எதிர் நடவடிக்கை எடுத்து எந்த சவாலையும் முறியடிக்கும் வல்லமை பாரத்த்திற்கு உண்டு. இது ஏற்கனவே பலமுறை உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

மதிமுகன்