டிசம்பர் – 4 இந்திய கடற்படை தினம்

இந்தியக் கடற்படை  என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கப்பல் பிரிவு. 2013-2014 காலகட்டத்தில் இதில் ஏறத்தாழ இலட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனர், இவர்களில் பாதுகாப்பு படையை சேராதவர்கள் 43,000, அதிகாரிகள் 8,700, கடற்படையினர் 50,000, 2008, நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து “சாகர் ப்ரஹரி பல்” என்ற அமைப்பை உருவாக்கி அதில் 1,000 வீரர்களும், 80 விரைவு தாக்குதல் கலன்களும் இருக்கும் என இந்திய அரசு நாடாளுமன்றத்தில் யூலை 2009 தெரிவித்தது. இந்தியக் கடற்படை 2014, மார்ச் மாத காலத்தில் 184 கலன்களை கொண்டிருந்தது. இதில் ஐ.என்.எஸ் விராட், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியனவும் 17 நீர்மூழ்கிக்கப்பல்களும் அடங்கும்.

நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளன. நீல நிறக் கடற்படை என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தனது சக்திகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.

மார்கோஸ்இந்திய கடற்படையின் அசகாயசூரர்கள்:

இந்திய ராணுவத்தில் பல்வேறு சிறப்பு படைபிரிவுகள் உள்ளன அதிலும் என்.எஸ்.ஜி, எஸ்.பி.ஜி, பாராக மாண்டோஸ் என சில விஷேஷ பிரிவுகள் உள்ளன. அதில் முதன்மையானது இந்திய கடற்படையின் மார்கோஸ் இது இந்திய கடற்படையில் உள்ள உயரடுக்கு சிறப்புபடை. இதில் உள்ள ஒவ்வொரு வீரரும் பயங்கரவாத எதிர்ப்பு, நீர்வழி, நிலவழி, வான்வழி தாக்குதல்கள், நாசவேலைக்கு எதிரான நடவடிக்கை என அனைத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். 1985 ஆம் ஆண்டு இந்திய மரைன் சிறப்புபடை (IMSF) உருவாக்கபட்டது. இது பிறகு மரைன் கமாண்டோ படை எனவும் தற்போது மேலும் தரம் உயர்த்தபட்டு மார்கோஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இவர்களின் தாரக மந்திரம் பயம் இல்லாத வெகுசிலர் என பொருள்படும் “தி பியூதி பியர்லெஸ்” என்பதாகும்.

உலகின் மிகவும் கடினமான ராணுவ பயிற்சியை கொண்ட இதில் ஒரு வீரர் நிபுணத்துவம் பெற இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்.தேர்வு செய்யும் பயிற்சியிலேயே 80 சதவிகிதம் பேர் இதில் தோல்வி அடைவார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள், அதன்பிறகு பயிற்சி இன்னும் கடுமையாகும். நரகத்தின் வாரம் எனப்படும் பயிற்சியில் ஐந்து வாரம் தினமும் அதிகபட்சமாக 4 மணிநேர தூக்கம் மட்டுமே, இரவில் நிற்காமல் சுமார் 60 கிலோ உள்ள முழு ஆயுத சுமையுடன் 20 கிலோமீட்டர்  நடை, வெடிமருந்து பயிற்சி, 25 கிலோ சுமையுடன் இடுப்பு அளவு சகதியில் 800 மீட்டர் நடை என கடுமையான உடற்பயிற்சி, தூக்கமின்மை, உடற்சோர்வு, பசி போன்றவைகளை தாங்கிய அவ்வளவு களைப்பிலும் சக வீரரின் அருகில் இருக்கும் இலக்கை குறி தவறாமல் சுடுவது, வெடிமருந்து கையாளுதல் போன்ற பல்வேறு திறன் பயிற்சிகள் என உண்மையில் இது நரகம்தான்.என்ன இதற்கே உங்களுக்கு தலை சுற்றுகிறதா ஆனால் இவர்களின் பயிற்சிக்கு இது முடிவல்ல உண்மையில் இது வெறும் ஆரம்பப்புள்ளிதான்!!!

இதற்குமேல் தான் இதில் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு உண்மையான பயிற்சி மும்பையில் உள்ள ஐ.எஸ்.எஸ்அபிமன்யுவில் தொடங்கும். இங்கும் கடும் பயிற்சியை இதை வெற்றிகரமாக முடித்த பிறகு ஆக்ராவில் நம் தேசத்தின் புகழ்பெற்ற படைபிரிவான பாராட்ரூப்பர் கமாண்டோக்களிடம் பயிற்சிக்கு செல்வார்கள். பிறகு கொச்சியில் டைவிங் பயிற்சி, மிசோரமில் காடுகளில் போர் பயிற்சி என வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான பயிற்சிகள் இருக்கும். கண்காணிப்பு, ரகசியநடவடிக்கை, யுத்தம், பணயக் கைதி மீட்பு, பனி சூழ் பகுதிகளில் போர்,பாலைவன பயிற்சி, கடல்சார் போர், காடுகளில் பயிற்சி, வழக்கத்திற்கு மாறான போர், மாண்டரின், அரபி போன்ற பன்மொழி பயிற்சி, எதிரிகள் கப்பல்அழிப்பு, ஏவுகணை இயக்கம் என நீளும் இந்த கடின பயிற்சியில் முடிவாக இவர்களின் பெருமைமிகு பயிற்சியான அபாயத்தை கண்ட 0.27 வினாடிகளில் எதிர்தாக்குதல் நடவடிக்கை எடுப்பது, பின்னோக்கி ஓடிக்கொண்டே குறிதவறாமல் சுடுவது போன்றவற்றில் தேர்ச்சிபெறுவர். இந்த வகையான போர்த்திறன் உலகில் வேறு எந்த படைக்கும் இல்லை எனலாம்.

ஒருமுறை இந்தோ அமெரிக்க கூட்டு பயிற்சியில் உலகின் மிக சிறந்த சிறப்பு படையாக கருதப்படும் அமெரிக்க நேவி சீல் வீரர்கள்கூட இதில் ஒரே முறையில் தோற்றனர் அவர்கள் மார்கோஸின் பயிற்சி மிக கடினமாக உள்ளது என தெரிவித்திருந்தனர். ஆனால் நம் வீரர்களோ இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததுடன் இதனை பலமுறை செய்யமுடியும் என நிரூபித்தனர். இது நம் மார்கோஸ் படைவீரர்களின் பயிற்சி, திறமைக்கு எடுத்துகாட்டாகும். இவர்கள் தங்களின் அடையாளத்தை எங்கும் வெளிகாட்டமாட்டார்கள். இவர்களும் பாராட்ரூப்பர்ஸ் போலவே மெருன் எனப்படும் அடர் சிகப்பு தொப்பியையே அணிவார்கள்.

தங்களை வெளிகாட்டிக் கொள்ளாமல் தங்கள் உயிரை தந்து நம் தேசத்தை காக்க அல்லும் பகலும் பாடுபடும் நமது இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை என்றும் போற்றுவோம்.

பெட்டிசெய்தி: 

பாராட்ரூப்பர்ஸ்: 1988களில் மாலத்தீவில் நடந்த அரசியல் நெருக்கடியின்போது அந்த நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க விரைந்து நடவடிக்கை எடுத்து சதி திட்டங்களை முறியடித்து சட்டம் ஒழுங்கை மீட்டனர். இந்த பாராட்ரூப்பர்ஸ் வீரர்கள் சிலரை தங்கள் நாட்டு ராணுவ படைக்கு பயிற்சி தர அமெரிக்கா கேட்டு கொண்டது மேலும் அவர்களுக்கு நிரந்தர அமெரிக்க குடியுரிமை, ராணுவத்தில் உயர்பதவிகளை வழங்கவும் முன்வந்தது, ஆனால் நம் வீரர்கள் ஒருவரும் இதற்கு முன்வரவில்லை, எங்களின் சேவை பாரத நாட்டிற்கு மட்டுமே என திட்டவட்டமாக சொல்லி தங்களது நாட்டுபற்றையும், அர்ப்பணிப்பு உணர்வையும் வெளிப்படுத்தினர்.