ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேறிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா உடனடியாக அமலுக்கு வந்தது.
பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ‘இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது’ என, பரவலாக விமர்சிக்கப்படுகிறது. மேலும் இதை எதிர்த்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த மசோதா கடந்த சில நாட்களுக்கு முன் லோக்சபாவில் நிறைவேறியது. தொடர்ந்து ராஜ்யசபாவிலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்தார். பின்னர் நடந்த ஒட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக, 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகின.
இந்நிலையில் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.