தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி அமையவுள்ளதை ஒட்டி, தஞ்சை பெரிய கோயில் அருகில் தொல்லியல் துறை அனுமதி பெறாமல், வணிக வளாகம் கட்டுவதற்காக முப்பது அடிக்கு தோண்டப்பட்டு வருகிறது. தொல்லியல்துறை விதிகளின்படி கோயிலை சுற்றி 7 கிலோ மீட்டருக்கு புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறக் கூடாது என்று விதி இருந்தும் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு தோண்டப்பட்ட போது ஒரு பழங்கால சுவர் தென்பட்டதாகவும், இது சோழர் காலத்தைச் சேர்ந்த நூற்றாண்டுகள் பழமையான கட்டிட அமைப்பு என்பதால் அங்கு பணிகளைத் தொடரக் கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 50 மீட்டர் நீளம் செல்லும் இந்தச் சுவர் தரைமட்டத்தில் இருந்து 10 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சோழர் கால அகழியின் வெளிச்சுவராக இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.