நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கு நிகராக, புழல் சிறையை உல்லாசபுரியாக்கி, சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த பயங்கரவாதிகள், மீண்டும் அட்டூழியம் செய்து வருவது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில், மூன்று சிறைகள் உள்ளன. அதில், தண்டனை கைதிகளை அடைக்கும் சிறையில், உயர் பாதுகாப்பு பிரிவு உள்ளது. அங்கு தான், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, பயங்கரவாதிகள், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ராஜ வாழ்க்கைஇவர்கள், ‘ஸ்டார்’ ஓட்டலுக்கு நிகராக, அறைகளை மாற்றி, ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர். அதை, ஸ்மார்ட் போனில், ‘செல்பி’ எடுத்து, ‘வாட்ஸ் ஆப்’பில், வெளியில் உள்ள கூட்டாளிகளுக்கும் அனுப்பினர்.மேலும், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர், முகமது ரிகாஸ், ‘வாட்ஸ் ஆப்’ அழைப்பில், தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கையில் உள்ள, கடத்தல்காரர்களுடன் பேசினார்.
இதுபற்றி, 2018ல், மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து, அவர்களின் உத்தரவுப்படி, சிறைத்துறை விஜிலென்ஸ் போலீசார், ரகசிய சோதனை நடத்தினர். அப்போது, ஸ்மார்ட் போன் உட்பட, ஏழு மொபைல் போன்கள் சிக்கின.கண்துடைப்புஅவற்றிலிருந்த, மெமரி கார்டுகள் வாயிலாக தான், கைதிகளின் உல்லாச வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சோதனை கண்துடைப்பு என்ற, குற்றச்சாட்டு எழுந்தது.
பின், சர்ச்சைக்குரிய, கைதிகள் ஐந்து பேர், வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் மீண்டும் அட்டூழியம் செய்யத் துவங்கி உள்ளனர். இரு தினங்களுக்கு முன், போலீஸ் பக்ருதீன் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே, டப்பா ஒன்று புதைக்கப்பட்டு இருந்தது. அதில், ஸ்மார்ட் போன், சார்ஜர், பேட்டரி, ஹெட்போன் ஆகியவை இருந்தன. அவற்றை, சிறை அதிகாரிகள் தோண்டி எடுத்துள்ளனர்.