சுரேந்திரநாத் பானர்ஜி, `ராஷ்டிர குரு’ என அழைக்கப்பட்ட, ஒரு தேசிய தலைவர். தேச விடுதலைப் போராட்டத்தில் ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைக்க இந்திய தேசிய சங்கத்தை நிறுவினார். இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவன உறுப்பினரும் ஆவார். வங்காளத்தில் உள்ள கல்கத்தாவில், 1848ம் ஆண்டு, நவம்பர் 10ம் தேதி துர்கா சரண் பானர்ஜிக்கு மகனாக பிறந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு,
ஐ.சி.எஸ் படிப்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்று, 1869ல் பட்டம் பெற்றார். ஆனால் அவரது வயதை தவறாகக் குறிப்பிட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கருத்தரித்த தேதியிலிருந்து வயதைக் கணக்கிடும் ஹிந்து கால கணித வழக்கப்படி தனது வயதைக் கணக்கிட்டதாக நீதிமன்றங்களில் வாதிட்டு, 1871ல், மீண்டும் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, சில்ஹெட்டில் உதவி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1871ல், தனது இறுதித் தேர்வுகளை எழுதி, ஆகஸ்ட் 1871ல், பாரதம் திரும்பினார். நீதித்துறையில் பானர்ஜி செய்த சிறிய தவறுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். 1882ல், ரிப்பன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிய போது மாணவர்களுக்கு தேசிய உணர்ைவ ஊட்டினார். ஆனந்தமோகன் போஸுடன் இணைந்து ஜூலை 26, 1876 அன்று இந்திய தேசிய சங்கத்தை நிறுவினார். அது நமது நாட்டின் நலனுக்கான தளமாகவும்,
ஐ.சி.எஸ் தேர்வுகளில் பங்கேற்கும் பாரதிய மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை சரிசெய்ய அந்த அமைப்பைப் பயன்படுத்தினார்.
1879ம் ஆண்டில், ‘தி பெங்காலி’ என்ற பத்திரிக்கையை வாங்கி, 40 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். 1883ம் ஆண்டில், பானர்ஜி தனது பத்திரிகையில் நீதிமன்ற அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். 1885ம் ஆண்டில், பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட பிறகு, பானர்ஜி தனது அமைப்பை 1886ம் ஆண்டில், காங்கிரசுடன் இணைத்தார். 1895ல் புனேவிலும், 1902ல் அகமதாபாத்திலும் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1905-ல், வங்காள பிரிவினையை தீவிரமாக எதிர்த்து பானர்ஜி நாடு முழுவதும் போராட்டங்கள் மூலம் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டினார். இதனால் 1912-ல், வங்காளப் பிரிவினையைத் திரும்பப் பெறப்பட்டது. 1906-ல், திலகர் தலைமையிலான “தீவிரவாதிகள்” அணி – -காங்கிரஸை விட்டு வெளியேறிய பிறகு, ஆங்கிலேயர்களுடன் நல்லுறவையும், பேச்சுவார்த்தையையும் ஆதரித்த மிதவாத காங்கிரஸின் தலைவர்களில் ஒருவராக பானர்ஜி இருந்தார். 1909ம் ஆண்டின் -`மின்டோ மோர்லி’ சீர்திருத்தங்களை ஆதரித்தார். சுரேந்திரநாத் பானர்ஜி, மாண்டேகு-செல்ம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை ஏற்று அதற்கு ஆதரவாக இருந்ததால், காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
வங்காள அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதன் காரணமாக தேசியவாதிகள், பொதுமக்களின் பெரும் கோபத்தினால், 1923ல் வங்காள சட்டமன்றத் தேர்தலில் ஸ்வராஜ்ய கட்சியின் வேட்பாளரிடம் தோற்றார். அதே ஆண்டில், அவருக்கு `நைட்’ பட்டம் வழங்கப்பட்டது. 1921 முதல் 1924 வரை, உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1923ம் ஆண்டு தேர்தலில் தோல்வியின் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை முற்றுப் பெற்றது. 1925 ஆகஸ்ட் 6 அன்று, பராக்பூரில் காலமானார்.