சும்மாவா  வந்தது… சுதந்திரம்

உலகில் ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற நாடு ஒன்று கூட இல்லை. எண்ணற்ற புரட்சி வீரர்களின் ரத்ததாபிஷேகத்தால் பூத்தெழுந்த புது மலர்தான் இந்திய சுதந்திரம். நமது நாட்டின் விடுதலைக்காக தூக்குமேடை ஏறிய புரட்சியாளர்கள் ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தோடு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். வரலாற்றில் இடம் பெற்ற, பெறாத எண்ணற்ற புரட்சியாளர்களில் ஒரு சிலர்…

செல்வத்தின் கவர்ச்சியோ, தாயின் பாசமோ கூட தாய் நாட்டுப் பணியில் யாருக்கும் தடைகளாக முடியாது. செல்வச் சீமான்களான ஜாகீர்தார் குடும்பத்தைச் சேர்ந்த ரோஷன் சிங், தாய் நாட்டை நேசித்த ‘மன்னிக்க முடியாத மாபெரும் குற்ற’த்திற்காக தூக்கிலிடப்பட்டான்; தொன்மையான தேசியக் கீர்த்தி மீண்டும் அதற்கு ஏற்படவேண்டும் என்று துடித்ததற்காக அவனுக்கு மரண தண்டனை! ‘வந்தே மாதர’ மந்திரத்தை முழக்கியவாறே அவன் மடிந்தான்.

ராம் பிரஸாத்தின் தாயோ சாவை எதிர்நோக்கிச் சிறையிலிருந்த தன் மகனிடம் பெருமையோடு, இன்று நான் மிகவும் பாக்கியம் செய்தவளாகி விட்டேன். தன் உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் ‘தாயின் விடுதலை’க்காகவே பாடுபட்ட மகனைப் பெற்றவள் என்பதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?” என்று சொன்னாள்.

ராம் பிரஸாத் பிஸ்மில் என்ற மாபெரும் விடுதலைப் புரட்சியாளரின் அபிமானத்துக்குரிய சீடர் அஷ்பக்குல்லாகான். காகோரி ரயில் கொள்ளை நடத்திய சந்திரசேகர ஆஜாத் கோஷ்டியில் இவரும் இருந்தார். சம்மட்டியால் ஒரே அடி கொடுத்து பிரிட்டிஷ் அரசின் கஜானாப் பெட்டியை உடைத்த இவர் வஜ்ரம் போன்ற தேகபலம் வாய்க்கப் பெற்றவர். அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருமுறை மரண தண்டனை விதிக்கப்படும் பேறுபெற்றவர் இவர். இவரை இறுதி முறையாக சந்திக்க அழுத கண்களுடன் வந்த தமது உறவினர்களிடம், தாய் நாட்டுக்காக தன் உறவினன் ஒருவன் உயிர்ப்பலியானான் என்று நிறையப்பேர் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ள முடிகிறதே என்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் அந்த தீரர்! அநேகமாக நம் நாட்டுக்காக உயிர் துறந்த முதல் முஸ்லிம் அவர்தான்.

யாராவது தேசபக்தி என்கிற சமாசாரத்தை பேச்சிலோ, செயலிலோ, எழுத்திலோ சிறிது வெளிப்படுத்தினாலும் போதும். கிங்ஸ்போர்டு என்ற மாஜிஸ்டிரேட்டுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும்; மகா கொடூரமான தண்டனைகளை விதித்து விடுவார். இவரைத் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று எண்ணி புரட்சி இயக்கத்து இளைஞர்கள் குதிராம் போஸ் மற்றும் பிரப்புல்ல சாக்கி ஆகியோர் எறிந்த வெடி குண்டுகள் குறிதவறி, இரு ஆங்கிலேய சீமாட்டிகளின் உயிர்களை பலி கொண்டன. பிரபுல்ல சாக்கி அங்கேயே தன்னை மாய்த்துக் கொண்டான். தப்பி ஓடிய குதிராம் போஸ் சில தினங்களுக்குப் பின் ஒரு ரயில் நிலையத்தில் பிடிபட்டான். பிடிபட்ட போதும், பின்னர் தூக்குமேதை ஏறும்போதும் அவர் ‘வந்தே மாதர’ முழக்கமிட்டான். பலரும் முன்னரே மொட்டு மாதாவின் பாதங்களைச் சென்றடைந்தது. நாள் 1908 ஆகஸ்டு 8.

குதிராம், பிரபுல்லா இருவரின் தியாகமும் தீரமும் உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் உணர்ச்சிப் பேரலைகளை எழுப்பினர. லண்டனிலும் இந்த அலையடித்தது. கொடுங்கோலன் கர்ஸான் வைலியை லண்டன் மாநகரில் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றான் இளைஞன் மதன்லால் திங்ரா. இது 1909ல் அவன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. திங்ரா கூறினான்: அன்னைக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை அகற்றுவதும் அவள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைப்பதும் கொலையா? என்னிடம் பணமும் இல்லை; அறிவாற்றலும் இல்லை. எனது குருதியைத் தான் நான் அன்னைக்காக அளிக்க முடியும்; அளிக்கிறேன். அன்னையின் பணிக்காகவே மீண்டும் நான் பிறப்பெடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே வேண்டுதல்.”

‘வந்தே மாதர’த்தை முழக்கியவாறு அவன் தூக்குமேடையேறினான்.

கிளர்ந்தெழும் சுதந்திர உணர்வு பிரிட்டிஷ் ராணுவத்தின் கெடுபிடிக் கோட்டையிலும் தொளையிட்டுக் கொண்டு ஊடுருவியது 1943 ஏப்ரல் 18 அன்று ராணுவத்தில் கலகத்தைத் தூண்ட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒரு இளைஞர் கோஷ்டி கைது செய்யப்பட்டது. அவர்களை பெங்களூரில் ஒரு சர்ச்சிலே ஒப்புக்காக விசாரிக்கப்பட்டார்கள்; மரண தண்டனை விதிக்கப்பட்டார்கள். ஆனால் மைசூர் சமஸ்தான அரசு அவர்களுடைய தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர்களை விசாரித்தது ஒரு பிரிட்டிஷ் ராணுவ ‘நீதிமன்றம்’. எனவே அவர்கள் சென்னைக்குக் கொண்டுபோகப் பட்டார்கள். அங்கே 17 தினங்களுக்கு முன்புதான் மலேயா சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டிருந்தார்கள்; அதே மண்ணில் இந்த ராணுவ இளைஞர்களும் உயிர்பலியாயினர்.

 

 

************************************************************************************************************************************************

நாகபுரி, நீல் ஸிடி ஹைஸ் கூலில் ஒரு முறை பள்ளியைப் பார்வையிட ஆங்கிலேய இன்ஸ்பெக்டர், தலைமையாசிரியருடன் வகுப்பறைகளை சுற்றி வந்தார். முதலில் மெட்ரிக் வகுப்பில் நுழைந்தார்கள். வகுப்பறை, மாணவர்கள் எழுப்பிய ‘வந்தே மாதர’ முழக்கத்தால் கிடுகிடுத்தது. திடுக்கிட்டார் இன்ஸ்பெக்டர். அடுத்த வகுப்பறையில் நுழைந்தார். அங்கும் அவருக்கு இதே கதி! என்னவெல்லாமோ சொல்லி மிரட்டிப் பார்த்தார். யாரும் ‘குற்றவாளி’யைக் காட்டிக் கொடுக்கவில்லை! இறுதியில் இரண்டு வகுப்புக்களின் எல்லா மாணவர்களையும் ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்தார். அதன்பின் இரண்டு மாதங்கள் பேச்சுவார்த்தைகள்; கடைசியில் மாணவர்கள் அனைவரும் பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் – அவர்களுடைய தலைவனைத் தவிர! அந்தத் தலைவன்தான் கேசவன். (கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தோற்றுவித்தவர்)

(‘ராஷ்ட்ரத்ரஷ்டா ஹெட்கேவார்’ நூலிலிருந்து)

************************************************************************************************************************************************

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இரண்டாவது தலைவர் ஸ்ரீகுருஜிக்கு, ஒருவர் தாம் இயற்றிய ‘வந்தே மாதரம்’ பற்றிய நூலை அனுப்பியிருந்தார். அதில் வந்தே மாதர கீதத்தின் வரியொன்றில் காணப்பட்ட பாட பேதத்தைச் சுட்டிக்காட்டி ஸ்ரீகுருஜி அந்த அன்பருக்குக் கடிதம் எழுதினார். அதில் உங்கள் புஸ்தகத்தில் ‘த்ரிம்சத கோடி’ (வந்தே மாதர கீதத்தில் ஒரு வரி) என்று காணப்படுகிறது. மூல கீதத்தில் ‘ஸப்த கோடி’ என்று இருந்ததாக எனக்கு ஞாபகம். பின்னர் இந்த கீதம் நாடு முழுவதும் பரவியபோது வங்காளத்தின் ஸப்த (ஏழு) கோடிக்கு பதிலாக பாரதம் முழுவதுமான த்ரிம்சத (மூவேழு) கோடி என்று சொல்வது உசிதமாகத் தோன்றியது. ஆனால் இந்த எண்ணிக்கையும் முழுமையானதல்ல. மக்களின் எண்ணிக்கை மாறிக் கொண்டேயும் இருக்கும். எனவே, நாம் ‘கோடி கோடி கண்ட கலகல நிநாத கராலே; கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே’ என்றவாறு பாடலானோம். நமது நிகழ்ச்சிகளில் இந்த கீதம் பாடப்படும் போதெல்லாம் இது மாதிரித்தான் பாடப்படுகிறது”

(‘ஸ்ரீ குருஜி ஸமக்ர தர்சன்’ ஏழாவது தொகுதியிலிருந்து)

************************************************************************************************************************************************