பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2025- ஏப்ரல் 22 அன்று, ஒரு கிராமத்திற்குள் புகுந்து, சுற்றுலா பயணிகளின் மதத்தைக் கேட்டு, 26 பேர்களை சுட்டு கொன்றார்கள். இதற்கு பதிலடியாக, மே மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை பாரதம் தொடங்கியது. இந்த தாக்குதலின் போது, பாகிஸ்தானுக்கு, சீனா நேரடியாக களத்தில் தொழில்நுட்ப ஆதரவை வழங்கியதை முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளதாக சீன அரசின் ஆதரவு பெற்ற `செளத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு இதுவரை இடது,வலது கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ் கட்சியும் கண்டன கணைகளை வீசவில்லை. சீனாவின் நம்பிக்கை துரோகத்திற்கு எதிராக குரல் கொடுக்க கூட தயக்கம் காட்டும் இடது,வலது கம்யூனிஸ்ட்கள் வெளி வந்த செய்திக்கு வாய்மூடி மௌனகுருவாக காட்சியளிக்கிறார்கள். இந்த செயல் நாட்டிற்கு துரோகம் இழைத்த செயலாக கருத வேண்டியுள்ளது.
சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான CCTV வியாழக்கிழமை ஒளிபரப்பிய ஒரு நேர்காணலில், சீன விமானத் தொழில் கழகத்தின் (AVIC) பொறியாளர்கள், பாகிஸ்தானிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில் தங்களின் நேரடி ஈடுபாடு குறித்து விவரித்துள்ளனர். பாரதம் − -பாகிஸ்தான் மோதலில் சீனப் பணியாளர்களின் பங்கு குறித்து பெய்ஜிங் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட முதல் நிகழ்வு இதுவாகும். AVIC-இன் செங்டு விமான வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளரான ஜாங் ஹெங், மோதலின் போது பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கியவர்களில் ஒருவர் என அந்த அறிக்கை தெரிவித்தது
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) கூற்றுப்படி, 2015 முதல் சீனா, பாகிஸ்தானுக்கு 8.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. 2020 மற்றும் 2024-க்கு இடையில், சீனா உலகின் நான்காவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராகத் தரவரிசைப்படுத்தப்பட்டது. இந்த ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 63 சதவீத ஆயுதங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றது, இது இஸ்லாமாபாத்தை சீனாவின் மிகப்பெரிய ஆயுத வாடிக்கையாளராக ஆக்கியது. இது பற்றி ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி, ஜெனரல் ராகுல் ஆர் சிங், கடந்த ஜூலை 2025ல், பாகிஸ்தானுடனான சமீபத்திய எல்லை தாண்டிய பதற்றம் குறித்த ஒரு விரிவான விளக்கத்தை அளித்தார். அதில், எங்களுக்கு ஒரு எல்லையும் இரண்டு எதிரிகளும், உண்மையில் மூன்று எதிரிகளும் இருந்தனர். பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. சீனா சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கி வந்தது. பாகிஸ்தானிடம் உள்ள 81 சதவீத ராணுவ தளவாடங்கள் சீனாவினுடையவை என்றார்.
சீனாவின் ஆதரவானது, பாகிஸ்தானில் பெய்ஜிங் கொண்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கையுடன் தொடர்புடையது. 1963ல், பாரதத்துடனான எல்லை மோதல்களுக்குப் பிறகு, பெய்ஜிங் − இஸ்லாமாபாத்தின் விடாமுயற்சியின் காரணமாக உறவுகளை வளர்த்தது. பாரதம், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதை சீனா தடுக்கவில்லை. மார்ச் 1963-ல், சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK), கில்கிட் மற்றும் பால்டிஸ்தானின் சில பகுதிகளைப் பெற்றதுடன், அகில், சிம்ஷால், ருக்ஸாம் மற்றும் ஷக்ஸ்காம் ஆகிய பகுதிகளில் பெரும் நிலப்பரப்புகளைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. மேலும், அக்சாய் சின்னில் 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வார்த்து கொடுத்தது. இவ்வளவு பெரிய நிலப்பரப்பு இருப்பதால், தற்போதைய பாரதம் – பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில், சீனாவின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுடனான தனது தொடர்பை மேலும் வலுப்படுத்த, சின்யாங்கில் உள்ள காஷ்காரலிருந்து இஸ்லாமாபாத் வரை எல்லா பருவ காலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலையையும் சீனா அமைத்துள்ளது. இந்த வழிதடத்தின் மூலமாக எவ்வித இடையூறு இல்லாமல், சுமார் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பபட்டுள்ளன.
பிரதமர் நேரு செய்த மிகப்பெரிய தவறின் காரணமாக, ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நடந்து கொண்டது. ஐ.நாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளை, `சர்வதேச பயங்கரவாதிகள்’ என அறிவிக்க பாரதம் எடுத்த முயற்சிகளுக்கு சீனா பலமுறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. 2019-ல், அரசியல் ஷரத்து 370 நீக்கிய போது, அதை எதிர்த்து சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நாவில் குரல் கொடுத்தது. காஷ்மீர் மக்களுக்கு “சுயநிர்ணய உரிமை” (Self-determination) வழங்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சீனா பகிரங்கமாக ஆதரித்தது. 1965 மற்றும் 1971 போர்களின் போது சீனா, பாகிஸ்தானுக்குத் தார்மீக மற்றும் ராணுவ ரீதியான ஆதரவை வழங்கியது. 1962ல், பாரதம் − -சீனப் போருக்குப் பிறகு, சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு பலப்பட்டது.
பாரதத்தில் மாவேயிசத்தை வலுப்படுத்த மாவோயிஸ்ட்களுக்கு ஆயுதம், நிதி, கொரில்லாப் போர் பயிற்சி போன்றவைகளை அளித்த நாடு சீனா. பாரதத்தில் குழப்பத்தையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கவும் எல்லா வழிகளிலும், சீனா உதவி செய்வது தனது நயவஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.