மகாராஷ்டிராவில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) உறுப்பினரான நாஸ் கோலன்தாஸ் என்பவர், ஒரு மைனர் சிறுமியை ஏமாற்றி, முஸ்லிம் மதத்துக்கு மாற்றி, உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார். இந்த குற்றச்சாட்டின் பேரில், மகாராஷ்டிரா காவல்துறை நாஸ் கோலன்தாசை கைது செய்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் கூற்றுப்படி, பீகாரில் உள்ள ஒரு மைனர் பெண்ணுடன் சமூக ஊடகங்களில் நட்பாகப் பழகிய அவரை பணத்துடன் வீட்டை விட்டு ஓடிவரத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த சிறுமி, போஜ்பூர் மாவட்டத்தில் மளிகைக் கடை வைத்திருக்கும் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மார்ச் 17 அன்று, அவர் ஒரு கோயிலுக்கு அருகில் தனது நண்பர்களைச் சந்திக்க வெளியே செல்வதாக தனது தந்தையிடம் கூறினார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அவர் சுமார் பத்து நாட்களுக்கு முன்பு மும்ப்ராவுக்கு வந்தார். சிறுமி, மும்ப்ரா பகுதியை அடைந்த பிறகு, நாஸ் கோலன்தாஸ், சிறுமியை தனது வீட்டில் அடைத்து வைத்திருந்தார், அங்கு அவர் சிறுமியை முஸ்லிம் மதத்துக்கு மாற்றியுள்ளார். அதன்பிறகு, அவர் தனது பெயரை மாற்றி, தனது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார். இதற்கிடையே, சிறுமி வீடு திரும்பாததை அடுத்து, அவரது பெற்றோர் பீகார் காவல்துறையை அணுகினர். அதன் அடிப்படையில், பீகார் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏ.டி.எஸ்) இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது. அவர்கள் தானே நகர காவல்துறையை அணுகி அவர்களின் உதவியை நாடினர். இதற்காக ஒரு தனிப்படையை உருவாக்கி பீகார் காவல்துறையினருடன் சேர்ந்து மும்ப்ராவில் உள்ள ஷிப்லி நகரில் உள்ள நாஸின் வீட்டை தானே காவல்துறையினர் கண்காணித்து அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர். நாஸ் கோலன்தாசை பீகார் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.