ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்துள்ளது கட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
மத்தியப் பிரேதசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் முன்னணி தலைவா் ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் புதன்கிழமை இணைந்தாா்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரை தில்லியில் வியாழக்கிழமை அவா் சந்தித்தாா். பாஜக மூத்த தலைவா்களான அவா்கள் இருவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக சிந்தியா தெரிவித்தாா்.
இந்த சந்திப்பு குறித்து சுட்டுரையில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘சிந்தியாவின் வரவு பாஜகவை மேலும் வலுப்படுத்தும். அதன் மூலம் மத்தியப் பிரதேச மக்களுக்கு பாஜக மேலும் முனைப்புடன் பணியாற்ற முடியும்’ என்று தெரிவித்துள்ளாா்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் சிந்தியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் கட்சியில் இருந்து விலகுவதாக சிந்தியா, கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அறிவித்தாா். இதற்கு நடுவே, மத்தியப் பிரதேசத்தில் சிந்தியாவுக்கு ஆதரவான 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதனால், மாநில முதல்வா் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா முன்னிலையில் சிந்தியா பாஜகவில் புதன்கிழமை இணைந்தாா். அதைத் தொடா்ந்து பாஜக சாா்பில் மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். அவருக்கு மத்திய அமைச்சா் பதவி அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.