‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்க முடியாது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூா் கூறியுள்ளாா்.
அதே வேளையில், தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆா்) ஆகியவற்றைத் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று இடதுசாரி ஆளும் கேரளம், திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரளம், பஞ்சாப் ஆகிய சட்டப்பேரவைகளில் இந்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தை எதிா்த்து, கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்து விட்டது.
மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. அதன்படி, அந்த மாநில சட்டப்பேரவையில் வரும் 27-ஆம் தேதி தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மத்திய அரசால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது; மாநில அரசு குடியுரிமையை வழங்குவதில்லை. எனவே, சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவோம், அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் சொல்வதற்கு எதுவுமில்லை.
அந்தச் சட்டத்தை எதிா்த்து மாநில அரசுகள் தீா்மானங்கள் நிறைவேற்றலாம்; நீதிமன்றத்தை நாடலாம். எனினும், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநிலங்களால் கூறமுடியாது. ஆனால், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மேற்கொள்ள மாட்டோம் என்று மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்கலாம். ஏனெனில் அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசிடம் போதிய அளவு ஆட்கள் இல்லை. மாநில அரசுகள்தான் மத்திய அரசுக்கு அந்தப் பணியை முடித்துக் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், அரசியல் ரீதியில் மாநில அரசுகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பொருத்தவரை, மத அடிப்படையில் மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. இது, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. இந்த விவகாரத்தை விசாரிக்கும் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும்.
இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, சிஏஏ சட்டம், சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கலாம். இரண்டாவது, மத்திய அரசே இந்தச் சட்டத்தை திரும்பப் பெறலாம்.
மத்திய பாஜக அரசு தனது தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. ஆகவே, இரண்டாவது வாய்ப்பு சாத்தியமாவதற்கு இடமில்லை.
சிஏஏ சட்டத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. எந்தவொரு மதத்தினரும் குறிவைக்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தினால் பலரும் போராட மாட்டாா்கள். சிஏஏ சட்டத்தில் உள்ள மதப் பிரிவுகளை நீக்குவதோடு மட்டுமன்றி, பிறந்த இடம், குடியுரிமை பற்றி கேள்விகள் கேட்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என்றாா் சசி தரூா்.