ஸ்ரீ கோபாலகிருஷ்ண ராஜு கடந்த இருபது வருடங்களாக பட்டயக் கணக்காளராக தொழில் புரிந்து வருகிறார். இவர் பட்டய கணக்காளர்களின் தென் வட்டார ஆலோசனை குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் பொதுமேடைகள், கல்லூரி அமைப்புகள் மூலம் உரையாற்றுபவர். ரோட்டரி, ப்ரீமேசன்ஸ் அமைப்புகளின் உறுப்பினர். ஊடகங்களில் பொருளாதாரம் குறித்த விவாதங்களில் கலந்து கொள்பவர். இவருடன் விஜயபாரதம் சார்பாக எம்.ஆர். ஜம்புநாதன், விஸ்வநாதன் ஆகியோர் கண்ட நேர்காணல்.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) இதன் பின்னணியை சிறிது விளக்கவேண்டுகிறோம்.
அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின்போது 2002ம் ஆண்டு டாக்டர் விஜய் கேல்கர் என்ற பொருளாதார மேதையின் தலைமையில் நிபுணர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டது.அந்தக் குழுவுக்கு இடப்பட்ட பணி நேர்முக, மறைமுக வரி நிர்வாகம் சம்பந்தமான பிரச்சினைகளை அலசி தேவையான தீர்வுகளை கண்டறிந்து அதன்படி அறிக்கை தருவதே. கேல்கர் குழு தங்கள் பணியினை செம்மையாக நிறைவேற்றி 2004ம் ஆண்டில் அறிக்கையினை சமர்ப்பித்தார்கள். அந்த குழு தெரிவித்த மறைமுக வரி சம்பந்தமான பரிந்துரைகளில் மகுடம் போன்றதே சரக்கு மற்றும் சேவை வரி (GST).
ஜி எஸ் டியினை கேல்கர் குழு வலியுறுத்த காரணம் என்ன?
அடிப்படையான காரணங்கள் என்னுடைய பார்வையில் இரண்டு.
1) இதுவரை மறைமுக வரிகள் பலப்பல மத்திய சரக்கு வரி, மாநில சரக்கு வரி, சுங்க மற்றும் கலால்வரி, மத்திய கூட்டப்பட்ட கேளிக்கைவரி (entertainment tax) என்று மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டும் இதனால் செலவும் கால வீணடிப்பும் நிகழ்ந்து வந்தன. இதையெல்லாம் ஒருநாடு ஒரு சந்தை ஒரே வகைப்பட்ட வரிமுறை என்பது தேவை. வட்டிக்கு வட்டி என்பது போல் வரி மேல் வரி என்ற நிலை நிலவிவந்தது. இந்த ஆண்டு ஜூலை 1க்கு முன்னால் எப்படி இருந்தது? ரூ 100 மதிப்புள்ள பொருள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தமிழகம் ரூ 12 வரி விதிக்கிறது என்று எடுத்துக்கொண்டால் அந்த பொருள் மத்திய பிரதேசத்திலோ ஒடிசாவிலோ விற்பனையாகும் போது அந்த மாநிலம் ரூ 112 க்கு மேல் 6% அல்லது 8% வரி விதிக்கிறது. இந்த நடைமுறையில் ஒரு நுகர்வோர் மேல் சுமை கூடுகிறது. இப்பொழுது இந்த நிலை மாறுகிறது. வரிகுறைகிறது.
தமிழ்நாட்டில் இதனை பலரும் எதிர்க்கும்போது நீங்கள் ஆதரிப்பது வியப்பளிக்கிறதே?
ஒரு சாமானியனாக இரண்டு சிறப்பான காரணங்களுக்காக ஜிஎஸ்டியை வரவேற்கிறேன். ஒன்று, வெளிப்படைத்தன்மை (Transparency). இரண்டு, சட்டத்தை கடைப்பிடித்தலும் நடைமுறைப்படுத்துவதும் எளிதாக்கப்படுவதும் (Simplyfying legal complaiance).
வெளிப்படைத் தன்மை எவ்வாறு மேம்படும்?
தொழில் அதிபர்களும் வணிக நிறுவனர்களும் தங்களுடைய வர்த்தக நிதி மற்றும் வரி தகவல்களை கணினி – மின்னணு மூலமாகவே அரசுடன் பரிமாறிக்கொள்ள போகிறார்கள். E Way Bill (மின்னணு கணக்கு பதிவேடு) காரணமாக தாம் நடத்தும் வாணிபத்தின் வரி என்ன என்பதை தெரிந்து கொண்டு விரல் அசைவில் செலுத்தி விடமுடியும். இதனால் வரி அலுவலரைத் தெரிந்து வைத்திருந்து தனியாக கவனித்தால் வரி அளவு ஒன்று இல்லையென்றால் வேறு ஒரு தொகை என்ற பிரச்சினை இல்லை. வரி அலுவலர் ஏதோ கடவுள் போலவும் வணிகர்கள் தங்களை அடிமைகள் போலவும் நினைத்து நடுங்கவும் வேண்டியதில்லை.
சட்டங்களை நடைமுறைப்படுத்தலும் கடைப்பிடித்தலும் எளிதாகும் என்கிறீர்களே, சிறிது விளக்குவீர்களா?
சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் அவற்றை உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பதிலும் உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் நாம் (பாரத நாட்டினர்) மிகவும் பின் தங்கியிருக்கிறோம். இந்த நிலை நாணயமான குடிமகனாக என்னை மிகவும் வருத்தமடைய வைக்கிறது.
அந்தப் போக்கிற்கு வணிகர்கள் சாதாரணமாக சொல்லும் காரணம் – வேறுபடும் சட்டவிதிகள், வரி அமைப்புகள், நடைமுறைகள், கணக்குகளை பராமரிக்க மேலாளர்கள் சம்பளம், ஆடிட்டர்களுக்கு கொடுக்கப்படும் கட்டணங்கள், வணிக வரித்துறை என்று செலவு கூடிக்கொண்டே போகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வரி நிர்வாகத்துறை அலுவலர்களை மீண்டும் மீண்டும் சென்று சந்தித்து அவர்களைக் குஷிப்படுத்த வேண்டும். இதனால் நேரமும் பொருளும் வீண். இவற்றில் ஓரளவு உண்மை இருக்கிறது.
ஜிஎஸ்டியில் அப்படி இல்லையே? மின்னணு மூலம் வரி கட்டுவதும் தணிக்கை செய்யப்படுவதும் வரித்துறை அலுவலர்கள் எழுப்பும் வினாக்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவே விடையளிக்க வசதி உள்ளதும் வணிகர்களுக்கு பெரும் பயன் அளிக்கும்.
வணிகர்கள் ஜிஎஸ்டியை புரிந்துகொள்ள எவ்வாறு அணுகவேண்டும்?
என்னுடைய வாடிக்கையாளர்களான உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மற்றும் நான் கலந்து கொள்ளும் கூட்டங்கள் மூலமாகவும் எல்லோரிடமும் சொல்லும் வழிமுறை ஒன்றுதான். எடுத்த எடுப்பில் ஜிஎஸ்டியை புரிந்து கொள்கிறேன் என்று இறங்கினால் நேரம் வீணாகும்; குழப்பம் தான் மிஞ்சும். அவற்றையெல்லாம் சட்டத்துறை வல்லுனர்களுக்கும் பட்டயக் கணக்காளர்களுக்கும் விட்டு விடுங்கள். சிறிது மாற்றி கீழ்க்கண்ட வகையில் அணுகுங்கள், ஜிஎஸ்டி எளிதாகும்.
- முதலில் உங்கள் தொழிலை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். கொள்முதல், உற்பத்தி, நிர்வாகம், விற்பனை கடனை வசூலித்தல் என்ற தங்கள் செயல்முறையினை (Process) நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
- தங்களுடைய வியாபாரக் கணக்கு முறையை இரண்டாவதாக தெரிந்துகொள்ள வேண்டும். இந்த கணக்கின் போக்கில் எங்கெங்கு வரி கட்டுவதும் வரி வசூலிப்பதும் நிகழ வேண்டும், அதன் நடைமுறை என்ன என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டும்.
- இப்பொழுது உங்களுக்கு தேவையான அம்சங்களை மட்டும் GST கூட்டத்தில் தேடுங்கள்.
- இறுதியாக, தங்கள் தொழிலுக்கு தேவையான கணினி மற்றும் தொழில் நுட்ப விவரங்களை ஒரு உபயோகிப்பாளர் (User) என்ற முறையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சுருக்கமாக ஒன்று. ஜிஎஸ்டி ஒன்றும் விண்வெளி விஞ்ஞானமில்லை.
வணிகர்கள் ஜிஎஸ்டியை விளங்கிக்கொள்ள அரசு என்ன செய்திருக்கிறது?
வணிகர்களுக்கு எளிதில் விளக்கும் விதமாக பல தொழில் அமைப்பினர் மூலம் அரசு அதிகாரிகளைக் கொண்டு விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் செய்தித்தாள்கள், இணையதளங்கள் மூலமாகவும் விளக்குகிறது. கீழ்க்காணும் நான்கு இணைய தளங்களையும் நான் பரிந்துரைக்கிறேன்.
- www.gst.gov.in (e – filing)
- www.clec.gov.in (information)
- www.gsm.org (information)
- www.gstcouncil.gov.in (representation)
இதனைத் தவிர கேள்விகளைத் தொடுக்க askgol என்ற ட்விட்டர் ஹேண்டிலையும் பயன்படுத்தலாம்.
வரிவிகிதம் குறைந்துள்ளது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உணவு விடுதிகள் விலை ஏற்றி விட்டன. சினிமா கட்டணம் ஏறிவிட்டதே?
என்னப் பொறுத்தவரை பெரும்பாலும் விலை ஏறுவதற்கு எந்தவிதமான நியாயமுமில்லை. கோல்கெட் போன்ற நிறுவனங்களும், TV, மிக்ஸி, மின்விசிறி தயாரிப்பாளர்களும் விலையைக் குறைத்துள்ளார்களே?
மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு அநியாய லாபம் ஈட்டநினைக்கும் வணிகர்களும் தான் இதற்கு காரணம்.
ஒரு சாமானிய நுகர்வோனாக நான் என்ன செய்யவேண்டும்?
முதலில் நீங்கள் விழிப்புணர்வு கொள்ளுங்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று நினைக்கும் பேச்சாளர்கள் எவ்வளவு பிரபலஸ்தர்களாக இருந்தாலும் அவர்கள் பேச்சில் உண்மை இல்லையென்றால் ஒதுக்கித் தள்ளுங்கள். ஆதாரமில்லாத முகநூல் மற்றும் வாட்ஸ் அப் செய்திகளை பகிராதீர்கள். உங்களால் முடிந்தால் திட்டவட்டமாக மறுத்து பதிவிடுங்கள்.
அநியாய லாபம் ஈட்ட முனையும் வியாபாரிகளின் ரசீதுகளைப் படம்பிடித்து அரசுக்கு புகார் தெரிவியுங்கள். அவர்கள் பொருட்களை புறக்கணியுங்கள். எவ்வளவு நாள் ஆட்டம் போடுவார்கள்? கவலை கொள்ளாதீர்கள், விரைவில் சட்டத்தின் பிடியில் அவர்கள் சிக்குவார்கள்.
PLEASE COLLECT MORE DETAILS . THIS WILL HELP THE ORDINARY PERSON.