சாண்டோ சின்னப்ப தேவர்

மருதூர் மருதாச்சலமூர்த்தி அய்யாவூ சின்னப்ப தேவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு முக்கிய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். விலங்குகளைக் கதாபாத்திரங்களாக கொண்ட திரைப்படங்களை தயாரித்தவர். கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரத்தில் 1915ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி அய்யாவு தேவர் −- ராமக்காள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து இராமநாதபுரம் பகுதியில் ‘வீர மாருதி தேகப் பயிற்சி சாலை’யைத் தொடங்கினார். திரையுலகில் சேருவதற்காக, அவர் பல்வேறு தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்று, தனது உடல்வாகை மேம்படுத்திக் கொண்டார்.
அவரும், அவரது சகோதரரும் 1940ம் ஆண்டு வெளியான `திலோத்தமா’ திரைப்படத்தில் நடித்தனர். கோயம்புத்தூரில் உள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கியவர், 1947ம் ஆண்டு வெளியான `ராஜகுமாரி’ திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தார். இதன்மூலம் எம்.ஜி.ஆருடன் ஆழமான நட்பை வளர்த்துக் கொண்டார். 1956-ல் தேவர் பிலிம்ஸைத் தொடங்கி, எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக கொண்டு, `தாய்க்குப் பின் தாரம்’ தொடங்கி 16 திரைப்படங்களை இயக்கினார். அந்தத் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்று, தேவரை ஒரு திரைப்பட இயக்குநராக நிலை நிறுத்தியது. அவரது சகோதரர் எம்.ஏ. திருமுகத்துடன் இணைந்து ஹிந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவின் ‘ஹாத்தி மேரே சாத்தி’ திரைப்படத்தை இயக்கினார்.
தீவிர முருக பக்தராக இருந்ததால், விலங்குகள் மற்றும் பக்தி சார்ந்த திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்கி வந்தார். எம்.ஜி.ஆர் தனது பிற்காலங்களில் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கியபோது, தேவர் சமூக -புராண திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார். `தேவர் பிலிம்ஸ்’, `தண்டாயுதபாணி பிலிம்ஸ்’ ஆகிய இரு திரைப்பட நிறுவனங்கள் தொடங்கி, தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்களில் பொதுவாக எம்.ஜி.ஆரும், பிற நடிகர்கள் நடித்த படங்கள் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூலமாகவும் தயாரிக்கப்பட்டது.
சின்னப்பா தேவர், மாரி முத்தம்மாள் என்பவரை 1936-ல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு தண்டாயுதபாணி என்ற ஒரு மகனும், சுப்புலட்சுமி மற்றும் ஜெகதீஸ்வரி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருவாயை நான்கு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியை பழனி, திருச்செந்தூர், மருதமலை ஆகிய முருகன் கோயில்களுக்கு கொடுத்தார். இரண்டாவது பகுதியை அவர் தனக்காகவும், மூன்றாவது பகுதியை தனது நண்பர்களுக்காகவும், 4வது பகுதியை தானமாகவும் கொடுத்தார்.
1978ம் ஆண்டு, செப்டம்பர் 6ம் தேதி தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த ‘தாய் மீது சத்தியம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. அப்போது தேவர் நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 8ம் தேதி தனது 63ம் வயதில் காலமானார்.