சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் பாரதியர் மண் சிறந்திட விண் ஏற்றம்!

 

காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் என்று பாரதி பாடியதை எழுத்துப் பிசகாமல் செய்து காட்டிவிட்டார் 39 வயதாகும் பாரதியர் சுபான்ஷு சுக்லா.  பாரத விண்வெளித் துறையில்  ஒரு முக்கிய மைல்கல்லாக இவரது  விண்வெளிப் பயணம் அமைந்தது.  சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் பாரதியர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுக்லா. விண்வெளிக்கு சென்ற சுக்லா உள்ளிட்ட நால்வரை ஏற்றிச் சென்ற ஆக்ஸியம்-–4 விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் (ஐஎஸ்எஸ்) சேர்ந்து இணைந்த போது எழுதப்பட்டது இந்த சாதனை வரலாறு.

பாரதத்தின்   விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் பாரதிய ‘ககன்யான்’ திட்டத்தை 2027ல் செயல்படுத்த திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது.  அமெரிக்காவின் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது.

ஆக்சியம் – 4′ திட்டத்தின் கீழ், பாரத விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பயண கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப முடிவானது.

பாரதத்தின் முதல் செயற்கைக்கோளான ‘ஆரியபட்டா’ 1975 ஏப்ரல் 19 அன்று சோவியத் யூனியனால் விண்ணில் ஏவப்பட்டது. அதன் பொன்விழா ஆண்டான 2025ல் பாரதத்தின் முதல் நபராக விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்றுள்ள சுக்லா, நம் விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.  1984ல் ராகேஷ் சர்மாவின் முன்னோடி விண்வெளிப் பயணம். 41 ஆண்டுகள் கழிந்து, சுக்லாவின் இந்த பயணம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்தில் பாரதத்தின் வெற்றிகர பிரவேசத்தைக் காட்டுகிறது.

2025 ஜூன் 26 அன்று,  டிராகன் விண்கலம் வாயிலாக சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றது. சுபான்ஷு சுக்லா அங்கே சென்றதில் நம் நாட்டுக்குப் பெருமிதம். இவர்கள் நால்வரையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் உற்சாகமாக வரவேற்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் முன், சுக்லா ‘விண்வெளியில் இருந்து நம் மக்களுக்கு நமஸ்காரம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, எலான் மஸ்கின், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் – 9’ ராக்கெட் வாயிலாக, இந்நால்வரையும் சுமந்து, ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் புறப்பட்டது. இவர்கள், விண்வெளியில் 28 மணி நேரம் பயணித்து, பூமியில் இருந்து 418 கி.மீ., தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைந்தனர். இவர்கள் அங்கே 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர். மொத்தம் 60 ஆராய்ச்சிகளை  மேற்கொள்வராம். இவற்றில் ஏழு ஆய்வுகள் நம் நாட்டுக்கானவை. விண்வெளியில் பிராண வாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள் வளர்ச்சி உள்ளிட்ட ஆய்வுகளில் சுக்லா ஈடுபடுகிறார்.

தனது முதல்முறை விண்வெளிப் பயணம் குறித்து சுக்லா பேசிய போது, “இது அற்புதம்! விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகாகத் தோற்றமளிக்கும் பூமியைக் காணும்  பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது. சர்வதேச விண்வெளியில் இருந்த குழுவினர் சிறப்பான வரவேற்பளித்தனர்” என்றார்.

இஸ்ரோ சார்பில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுக்லா குழுவினர், நுண் ஈர்ப்பு விசையின்கீழ் தசை இழப்பு, விண்வெளியில் செரிமானம் மற்றும் விண்வெளி வீரர்களின் மன நல்வாழ்வு போன்ற தொடர்ச்சியான சோதனைகளை நடத்திவருகிறார்கள்.

முன்னதாக, விண்வெளி பயணத்தின்போது சுக்லா தன்னுடன் ‘ஜாய்’ என்ற மெல்லிய எடை கொண்ட சிறிய வாத்து பொம்மையை உடன் கொண்டு சென்றார். இதனை சுக்லாவின் மகன் தேர்வு செய்தாராம்.

பொதுவாக ராக்கெட்டில் செல்லும் விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசை எல்லையைக் கடந்து, எல்லையற்று பரந்து கிடக்கும் விண்வெளிக்குள் நுழைந்துவிட்டதை முதலில் உணர்த்துவது இந்த மென்மையான பொம்மைதான். விண்வெளியை அடைந்ததும் இந்த பொம்மைதான் முதலில் மிதக்கத் தொடங்கும். முதல் முதலாக விண்வெளி சென்ற சோவியத் வீரர் யூரி கேகரின், தன்னுடன் ஒரு சிறிய பொம்மையைக் கொண்டு சென்றாராம். அதனைப் பின்பற்றி, வீரர்கள் தங்களுடன் இதுபோன்ற பொம்மைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

விண்வெளி அனுபவத்தைக் குறிப்பிட்ட போது, ஒரு குழந்தையைப் போல நுண் ஈர்ப்பு விசை நிலைகளில் பழகிக் கொண்டதாகவும், வெற்றிடத்தில் மிதப்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருப்பதாகவும் கூறினார்.

இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் முன் பல வித தடைகள், தடங்கல்கள் எல்லாம் இருந்தன. ஆசை ஆசையாக விண்வெளிப் பயணத்தைத் திட்டமிட்டு விட்டு, அது ஒவ்வொரு முறையும் வானிலை சரியில்லை, தொழில்நுட்பக் கோளாறு என்றெல்லாம் ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போடப்பட்டது. இதனால் எப்போது இந்தப் பயணத்தை மேற்கொள்வோமோ என்ற காத்திருப்பும் குறுகுறுப்பும் சுக்லாவை ஆட்டிப் படைத்தன. 30 நாட்கள் தனிமைப் படுத்தலுக்குப் பின், “என் மனதில் இருந்த ஒரே எண்ணம் எங்களை அங்கே போக விடுவதுதான்” என்றார் சுக்லா.

விண்வெளி நிலையத்தின் 634வது எண் விண்வெளி வீரராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட சுக்லா, “உங்கள் அன்பாலும் ஆசியாலும் நான் விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டேன். இது முதல் கட்டம், இப்போது நாம் நிறைய அறிவியல் ஆய்வுகள் செய்வோம். இந்தப் பயணத்தை உற்சாகமாக்குவோம், நான் திரங்காவை (மூவர்ணக் கொடி) சுமந்து செல்கிறேன், உங்கள் அனைவரையும் என்னுடன் சுமந்து செல்கிறேன்,” என்றார்.

ஏவுதலின் போது ஈர்ப்பு விசையை எதிர்கொண்ட சுக்லா, தனது இருக்கையில் பின் தள்ளப்பட்டதைப் போல உணர்ந்தாராம். “நான் நன்றாகப் பழகி வருகிறேன். காட்சிகளை ரசிக்கிறேன், அனுபவத்தை ரசிக்கிறேன், ஒரு குழந்தையைப் போல கற்றுக்கொள்கிறேன். எப்படி நடக்க வேண்டும், எப்படி நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அனுபவத்துடன் கற்கிறேன்” என்றார்.

சுபான்ஷு சுக்லாவின் வாழ்க்கை

1985 அக்டோபர் 10 அன்று உத்தர
பிரதேசத்தின் லக்னோவில் பிறந்த சுக்லா, 2,000 மணி நேரத்திற்கும் மேலான விமான பறத்தல் அனுபவமுள்ள திறமையான போர் விமானி. 2006ல் விமானப்படையில் சேர்ந்து சோதனை விமானியாக, Su-30 MKI, MiG-21, ஜாகுவார் போன்ற பல்வேறு விமானங்களில் தேர்ச்சி பெற்றார். 2019ல் விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் கடும் பயிற்சி மேற்கொண்டார்.

லக்னோவில்  பள்ளிப் படிப்பு;  தொழில்
நுட்பத்திலும் விமானப் போக்குவரத்து துறையிலும்  மிகுந்த ஆர்வம் காட்டினார். புனே தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பட்டம் பெற்றார். தொழில்நுட்பத்தில் இளங்கலை (B.Tech.) பட்டமும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டமும் பெற்றார்.

ககன்யான் தவிர, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்சியம் மிஷன் 4ஐ இயக்க 2024ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட முதல் பாரதிய விண்வெளி வீரர் ஆனார்.

ககன்யான் மிஷன்

பாரதத்தின் உத்தேச முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின்படி, நான்கு விண்வெளி வீரர்கள் பயணிப்பார்கள். இவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த பாரத விமானப்படை (IAF) விமானிகள். இந்த வரலாற்றுப் பயணத்திற்காக பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா.

ககன்யான் மிஷன் என்பது பாரத  லட்சிய மனித விண்வெளிப் பயணத் திட்டம். இது மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்ட குழுவை பூமி சுற்றுப்பாதைக்கு (LEO) குறுகிய காலத்திற்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது. இந்த மிஷனின் முதன்மை நோக்கம், LEOக்கு மனித விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள பாரதத்தின் உள்நாட்டுத் திறனை நிரூபிப்பது. மேலும், நீண்ட கால நோக்கில், சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் எதிர்கால பயணங்கள் உட்பட, நீடித்த பாரதிய மனித விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு அடித்தளம் அமைப்பது இதன் நோக்கம்.

ககன்யான் விண்கலம் இரண்டு முக்கியத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. குழு தொகுதி (CM) மற்றும் சேவை தொகுதி (SM). CM மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, SM உந்துவிசை மற்றும் சக்தியை வழங்குகிறது. பாரதத்தின் மார்க் III (LVM3)ன் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பான ஏவுவாகனத்தை (HRLV) பயன்படுத்தி சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்படும்.

இதன் மூலம் அமையும் ஆய்வு, நுண் ஈர்ப்பு விசையில் அறிவியல் பரிசோதனைகளை எளிதாக்கும். மருத்துவம், பொருள் அறிவியல், உயிரியல் முன்னேற்றங்களுக்கு இது முக்கியப் பங்களிக்கும். இது, விண்வெளி தொடர்பான தொழில்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.

பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகியோர் இந்த திட்டத்துக்காக, விரிவான பயிற்சி பெற்றுள்ளனர்.

கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர்