ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டங்களை ஊழல் சீரழிப்பதோடு, அந்நாட்டின் நிலையான ஆட்சிக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்ற நிலையை நம்மால் காணமுடிகிறது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கவும், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் முக்கிய நோக்கம்.
மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரித்துவிட்டு, மற்ற நாட்களில் ‘மாமூல்’ வாழ்க்கையை தொடர்வதால் ஊழல் ஒழிப்பில் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது. சட்ட விதிமுறைக்கு உட்பட்ட காரியத்திற்குகூட லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் விடவேண்டும். லஞ்சம் கேட்பவரிடம், ‘லஞ்சம் ஏன் கொடுக்கணும்’ என கேட்க வேண்டும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். லஞ்சப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமே உரியது என எண்ணி, நமது பங்களிப்பை புறக்கணிக்கக்கூடாது. ஊழலுக்கு எதிரான உணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பில் பெரும்பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே. படிப்பை மட்டும் கற்றுக்கொடுக்காமல், ஊழலின் கறைபடியாமல் களங்கமற்ற மனிதர்களாக வாழ்வில் திகழும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஊழலுக்கு அடிபணியாமல் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
ஊழல் எதிர்ப்பு உணர்வை வளர்ப்பதில் வெளியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தமக்குத்தாமே விதித்துக்கொண்டவையாக இருப்பின், அது நிச்சயமாக நல்ல பலனை தருகின்றன.
மகாத்மா காந்தி