எத்தனாலை கொள்முதல் செய்வதற்கான கூட்டு ஒப்பந்த ஏலத்தில், மோசடியில் ஈடுபட்டதாக கூறி, சர்க்கரை ஆலைகளுக்கு இந்திய போட்டிகள் ஆணையம் விதித்த 38 கோடி ரூபாய் அபராதத்தை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க, பெட்ரோலுடன் ஐந்து சதவீதம் எத்தனாலை கலப்பது தொடர்பாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது.
இதையடுத்து எத்தனாலை கொள்முதல் செய்வதற்கான கூட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஓ.எம்.சி., எனப்படும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் சார்பாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், மது உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகளை கோரியிருந்தது. இக்கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஏலத்தில், மோசடியில் ஈடுபட்டதாக கூறி, 18 சர்க்கரை ஆலைகள் மற்றும் அவற்றின் இரண்டு வர்த்தக சங்கங்களுக்கு, சி.சி.ஐ., எனப்படும் இந்திய போட்டி ஆணையம், கடந்த 2018ம் ஆண்டில் 38 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து, சர்க்கரை ஆலைகள் என்.சி.எல்.ஏ.டி., எனப்படும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்பாயத்தில் மேல்முறையீடு செய்தன. இதுகுறித்து விசாரித்த மேல்முறையீட்டு தீர்பாயம், இந்திய போட்டி ஆணையத்தின் அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில், போட்டி ஆணையத்தின் ஆறு உறுப்பினர்களால் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில், இறுதி தீர்ப்பில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே கையெழுத்திட்டுஉள்ளனர். எந்த ஒரு புகாரின் இறுதி விசாரணையின் தொடக்கத்திலும், கமிஷனின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறக்கூடாது. ‘கேட்பவர் தீர்மானிக்க வேண்டும்’ என்ற கொள்கை கடைப்பிடிக்கவில்லை. ஆகவே, போட்டி ஆணையம் விதித்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.