ஆண்டு 2023ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகியுள்ள அஹசானுதீன் அமானுல்லா அண்மையில் தெரிவித்துள்ள தகவல் இது: “30 ஆண்டுகளுக்கு முன் நான் பாட்னாவில் (பிகார்) வழக்கறிஞர்; ஒரு பெரிய விபத்து நடந்தது; ஏராளமானவர்கள் உயிரிழந்தார்கள். தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தேன். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் முஸ்லிம்கள். அங்கே மீட்பு / நிவாரணப் பணி விறுவிறுப்பாக தொடங்கியிருந்தது. நான் சந்தித்த முதல் நபர் ஒரு ஆர். எஸ். எஸ்.காரர்தான். எல்லா சடலங்களையும் மீட்டு, கண்ணியமான முறையில் வைத்திருந்து, கதறும் உறவினர்களுக்கு அடையாளம் காட்டி ஆர். எஸ். எஸ் அன்பர்கள் உதவியதையும், மத பேதம் பார்க்காமல் பரிவோடு சேவை செய்ததையும் பார்த்தேன். அண்மையில் பாட்னா சென்றிருந்தேன். 30 ஆண்டுகளுக்கு முன் அங்கே நான் பார்த்த அந்த ஆர் எஸ் எஸ் அன்பர்களை சந்தித்துப் பேசி நன்றி சொன்னேன்.”
நூற்றாண்டு காணும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் உருவான அன்பர்கள் பற்றி விஷயம் அறிந்தவர்கள் மனதில் பதிந்துள்ள கருத்து நாடு நெடுக இதுபோலத்தான் உள்ளது என்பது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற கே.டி தாமஸ் பதிவு செய்துள்ள இந்த விவரத்திலிருந்து தெளிவாகிறது. “தேசத்தை காப்பது முதலில் நமது அரசியல் சாசனம், அதை அடுத்து ராணுவம்; தொடர்ந்து ஜனநாயகம்; அடுத்து நமது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு முக்கிய பங்கு உண்டு. நான் கேரள நீதிமன்றத்தில் பணிபுரியும் போது நேர்மையாக செயல்படும் ஒரு மாஜிஸ்ட்ரேட், தன்னை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ் ஷாகா என்பார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன்.”
சங்கம் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்பதாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு, கற்றறிந்த இந்த இரண்டு பெரியவர்கள் சங்கத்தைப் பற்றி கொண்டுள்ள கருத்து ஆணித்தரமான பதில் என்பது ஒரு புறம். முக்கியமாக, ஆர். எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், “முழு சமுதாயத்திற்கும் நாம் சேவை செய்து சமுதாயத்தை நம்முடன் இணைத்துக் கொண்டு அனைவருமாக நம் தாய்நாட்டை மகோன்னத நிலைக்கு உயர்த்துவோம். இதுவே சங்க அன்பர்களின் உள்ளம்” என்று சுட்டிக்காட்டி வருவதை நம் நினைவில் கொள்வோம்.