சனாதன தர்ம பாரதமே விஸ்வகுரு: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி

கேரளாவில் உள்ள கொச்சியில் ஜூலை மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஞான சபா நடைபெற்றது. 27ம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் எழுச்சியுரையாற்றினார். கல்வியில் பாரதப் பண்பு என்ற அடிப்படையில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: பாரதம் என்ற வார்த்தைக்கு நிகராக வேறு எந்த சொல்லையும் பயன்படுத்த முடியாது. பாரதம் என்ற வார்த்தையை மொழி பெயர்ப்பது சாத்தியமல்ல. பாரதம் என்று சொல்லும் போது பெருமிதம் பொங்குகிறது.

வயிற்றை நிரப்ப சில திறமைகள் இருந்தால் போதும். ஆனால் கல்வி என்பது ஒருவரின் ஒட்டுமொத்த ஆளுமையை மேம்படுத்துவது ஆகும். இதுதான் நமது ஞானிகள் வகுத்தளித்துள்ள உன்னத வழியாகும். சனாதன தர்ம பாரதமே விஸ்வகுரு. ஏனெனில் நாம் யாருடனும் வலிய சண்டைக்குப் போனதில்லை. யாரையும் சுரண்டியதும் இல்லை. மெக்சிகோ முதல் சைபீரியா வரை பாரதியர்கள் பயணித்துள்ளனர். நடந்தே சென்றுள்ளனர். சில வேளைகளில் சிறு படகுகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

நாம் எந்த பிராந்தியத்தையும் ஆக்கிரமிக்கவும் இல்லை, அழிக்கவும் இல்லை, யாருடைய அரசையும் நாம் பறிக்கவும் இல்லை, நமது ஞான மரபு உலகத்துக்கே வழிகாட்டக்கூடியது. இந்த சத்திய தீபத்தை உலகெங்கும் பரப்புவோம்.

சனாதன தர்மம் குறித்து மகரிஷி அரவிந்தர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ‘இறைவனின் சித்தம் சனாதன தர்மம் தான். ஹிந்து தேசம் எழுச்சியுற்றால்தான் இது நனவாகும்’ என்ற மகரிஷி அரவிந்தரின் வார்த்தைகளை நெஞ்சில் ஆழப்பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில், `பாரதியம்’ என்றால் உண்மையில் என்ன என்பதை துல்லியமாக உணர்ந்து கொள்ள வேண்டும். வளர்ந்த பாரதம் நம் கண் முன்னே காட்சியளிக்கிறது. இது எதிர்காலத்தில் வசப்படும். கல்வி, பொருளியல் சார்ந்ததாக மட்டும் இருக்கக் கூடாது. ஆன்மிகம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மனம் தூய்மையானதாக இருந்தால்தான் செயலும் தூய்மையாக இருக்கும். ஆற்றல்மிக்க மனமே செயலாற்றலை பெருக்குகிறது.

மெக்காலேயின் கல்வித் திட்டம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இதனால்தான் இதை கழித்துக் கட்டியுள்ளோம். பாரதியமும், நவீனத்துவமும் முரணானவை என்று கருத வேண்டியதில்லை. சனாதன தர்மம் தொன்மையானதுதான். ஆனால்இ அதே நேரத்தில் நவீனத்தையும் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது. ஆங்கில அடிமை மனோபாவத்திலிருந்து நாம் விடுபட்டால்தான் மெய்யான பாரதியம் மேலோங்கும். மகாபாரதத்தில் எது நல்லது. எது கெட்டது என்று வெளிப்படையாக எதுவும் சொல்லப்படவில்லை. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான தரவுகளும், நிகழ்வுகளும் மட்டுமே மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளனர்.

நாம் வலிமையாக இருந்தால் தான் சனாதன தர்மத்தை உயர்ந்தோங்க வைக்க முடியும். உலகின் குருவாக அன்னை பாரதம் உச்சமுறும் தருணம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. உலகுக்குத் தேவை சனாதன தர்மம். இதை பாரதத்தால் மட்டுமே வழங்க முடியும். எனவே சனாதன தர்மம் உலகளாவிய சிகரத்துவம் ஏறுவது உறுதி.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி