சங்கப் பணியுடன் கல்விப்ப பணியும் செய்த பி. கோவிந்தராஜ் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, பி. கோவிந்தராஜ் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, பி. கோவிந்தராஜ் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

நாகப்பட்டினத்தில் பாலகிருஷ்ணன்−- ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக, 1930 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி பிறந்தார், கோவிந்தராஜ் ஜி. சிறு வயது முதலே சமுதாயப் பணியிலும், தேசப் பணியிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர். தனது 15வது வயதிலேயே சங்கத்துக்கு அறிமுகமாகி, சிவராம் ஜியின் அன்பால் ஈர்க்கப்பட்டார்.

பேராசிரியர் தத்தாஜியின் வழிகாட்டுதலில், மூன்று வருடம் சேலத்தில் சங்கப் பிரச்சாரக்காக இருந்தார். அங்குள்ள பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து அவர்களை சங்கப் பணிக்கு ஈடுபடுத்தினார். அந்த நேரத்தில் “சேலம் கோவிந்தராஜ்” என்றே அறியப்பட்டார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை கல்வியை முடித்த பிறகு, மேல்படிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, பட்டம் பெற்றார். “இந்தியா பிஸ்டன்ஸ்” என்ற பிரபல நிறுவனத்தில், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக (லேப் டெக்னீசியன்) 125 ரூபாய் மாத சம்பளத்திற்கு சேர்ந்து, அந்நிறுவனத்தின் பொது மேலாளர் பொறுப்பு வரை உயர்ந்து, ஓய்வு பெற்றார். அவர் பணிபுரிந்த காலத்தில், 300க்கும் மேற்பட்ட சங்க ஸ்வயம்சேவகர்களை அந்த நிறுவனத்தில் பணியில் சேர்த்துள்ளார்.

சென்னை மஹாநகர் கார்யவாஹ் பொறுப்பில் இருந்து, சங்கப்பணி செய்தார். அந்த நேரத்தில் தான், சென்னை சேத்துபட்டில் உள்ள “சக்தி” காரியாலயம் இடம் விலைக்கு வாங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம் என ஐந்து மொழிகளில் புலமை பெற்றவர்.

“இந்தியன் பௌண்டரி”யில், தென் பாரத சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர், கோவிந்தராஜ் ஜி. தமிழகத்தில் பாரதிய ஜன சங்கத்தின் முதல் நிறுவனச் செயலாளராக இருந்து, தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை, நாக்பூரில் முடித்தார். அப்போது முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் ஜி, அத்வானி ஜி, கோவிந்தராஜ் ஜியும் நன்றாக கபடி விளையாடுவார்கள், அவர்களின் ஆட்டத்தைப் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள்.

சென்னை பெரம்பூரில் உள்ள கோவிந்தராஜ் ஜியின் இல்லத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது அகில பாரத தலைவரான பரமபூஜனிய ஸ்ரீகுருஜி மூன்று நாட்கள் தங்கி உள்ளார். அவரை சந்திக்க வாஜ்பாய் ஜி, தெங்கடி ஜி என பல மூத்த சங்க அதிகாரிகள் வருகை புரிந்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபத்தை, கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட குழுவில், நிறுவன உறுப்பினராக இருந்து, மண்டபம் சிறப்பாக அமைய அரும்பாடுபட்டார்.

மாணவ- − மாணவியர்கள் தங்களது இளம் வயதிலேயே, கிறிஸ்தவ நிறுவனத்தில் பயில்வதால், அவர்களுக்கு ஹிந்து மத சிந்தனை குறைந்து மாற்று மத சிந்தனைகள் மேலோங்கி வந்தது. அதனை போக்கும் விதமாக, சென்னையில் முக்கிய இடங்களில், விவேகானந்தா பள்ளியை நிறுவ தீர்மானித்து, “விவேகானந்தா எஜூகேஷனல் சொசைட்டி” என்ற அமைப்பை 1972 ஆம் ஆண்டு நிறுவி, அதன் நிறுவன தலைவராக செயல்பட்டார். சொசைட்டி மூலம், வடசென்னையில் மிகப்பெரிய கல்வி புரட்சி ஏற்பட்டது என்றால், அது மிகையல்ல.

சேவை மனப்பான்மையோடு ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டும் என்பதை ஊக்குவித்து வருவார். பல திறமை வாய்ந்த ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும், பள்ளி முதல்வர்களையும் உருவாக்கியவர். 25 வருடங்களுக்கும் மேலாக கோவிந்தராஜ் ஜி செய்த கல்விப் பணியை பாராட்டும் விதமாக, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் நாள், அன்றைய தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் அவர்கள் கேடயம் வழங்கி சிறப்பித்தார். 1999 ஆம் ஆண்டு, “சேவா ரத்னா” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கல்விக் குழுமத்தின் அங்கமாக திகழும் “வித்யா பாரதி”யின் தமிழக நிறுவனத் தலைவராக இருந்தார். பல பள்ளிகளுக்கு ஆலோசகராக இருந்து, அந்தப் பள்ளி சிறப்பாக செயல்பட, வழி காட்டியாக விளங்கினார்.

பலரும் அறியாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆன்மீக குருமார்கள், சமூக சீர்திருத்தவாதிகள், நமது நாட்டின் விஞ்ஞானிகள் என 120 பேரின் வரலாற்றை மூன்று தொகுப்புகளாக தொகுத்து, அதனை புத்தகமாக வெளியிட்டார்.

“ரிசோர்ஸ் புக் ஃபார் வேல்யூ எடுகேஷன் அண்ட் டெவலப்மெண்ட்” என்ற புத்தகத்தை நான்கு தொகுப்பாக இயற்றினார். அதன் முதல் பிரதியை, 2017 ஆம் ஆண்டு வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன் வெளியிட்டார். கல்வி போதிப்பவர்களுக்கு, அது பொக்கிஷமாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் நதிகளை ஒருங்கிணைக்க, மாணவ – மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மினி மாரத்தான் போட்டியை சென்னை மெரினா கடற்கரையில் நடத்தினார். அந்தப் போட்டியில் 1,200 மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த, குழு ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு ஆலோசகராக இருந்தார். அதன் மூலம் பயணிகள் பலரின் குறைகள் தீர்க்கப்பட்டன.

பெரம்பூரில் “அருந்ததி நகர்” என்ற சேவா பஸ்தியில் வசிக்கும் மாணவ -மாணவியர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டி, “நிதர்சனம் அறக்கட்டளை” என்ற அமைப்பை ஏற்படுத்தி, அனைவருக்கும் கணினி வகுப்பு, தையல் வகுப்பு போன்றவற்றை இலவசமாக கற்றுக் கொடுத்து, அவர்களின் திறமையை வளர்த்தார். பள்ளி மாணவ – மாணவியர்கள் மூலம் அவர்களின் குடும்பத்திலும் நல்லதொரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

75 வருடங்களுக்கும் மேலாக கல்விப் பணி, சங்கப் பணி என பல வேலைகள் புரிந்து, பலரின் வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றிய கோவிந்தராஜ் ஜி, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் நாளில் இறைவனடி சேர்ந்தார். கோவிந்தராஜ் ஜியின் மனைவி பெயர் தேவலதா அம்மாள். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சங்கப் பணியுடன் கல்விப் பணியும் செய்த பி. கோவிந்தராஜ் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.