இனிப்பும், பலகாரமும், புத்தாடையும், பட்டாசும் சேர்ந்த பரவச தீபாவளியை திகட்டத் திகட்டக் கொண்டாடி முடித்துவிட்டோம். அடுத்து? சனாதன தர்மத்தில் பண்டிகைக்கும் கொண்டாட்டத்துக்கும் பஞ்சமா என்ன! திரும்பிப் பார்ப்பதற்குள் வந்துவிடுமே தீபத் திருவிழா? சங்க இலக்கியங்கள் போற்றும் பெருவிழா. அது தான் திருக்கார்த்திகை தீபத் திருநாள். சைவ, வைணவத் திருத்தலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் கார்த்திகைத் திருநாள் நமது நடைமுறையில் திடீரென வந்ததில்லை.
தீப வழிபாடு பண்டையத் தமிழர்களின் கலாச்சாரத்தில் இன்றியமையாதது என்பது பல்வேறு இலக்கியக் குறிப்புகளிலிருந்து விளங்கும். தீபமேற்றி வழிபட தீமை எனும் இருள், அறியாமையெனும் இருள், வறுமை எனும் இருள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பழந்தமிழர் நம்பிக்கை. வீடுகளில் நாம் ஏற்றும் விளக்கு, இருளகற்றும் என்பதைத்தான் திருநாவுக்கரசர் ‘இல்லக விளக்கது இருள் கெடுப்பது; சொல்லக விளக்கது சோதியுள்ளது’ என்று துதிக்கிறார்.
அதுவும் எப்படி?
சமணராக இருந்து சைவத்துக்கு திரும்பி ‘கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே’ என்று நமசிவாயத்தின் பெருமையைக் கூறிவிட்டல்லவா ஜோதியைப் போற்றுகிறார், ஈசன் – ஆதியும் அந்தமுமில்லா ‘அருட்பெரும் ஜோதியாய்’ திருமாலுக்கும், பிரம்மனுக்கும் கார்த்திகை பௌர்ணமியில் காட்சியளித்ததை, நினைவு கூர்ந்து வீடெங்கும் வீதியெங்கும் விளக்கேற்றி வழிபடுவது, நம் மரபு. திருவண்ணாமலையில் விசேஷமாகக் கொண்டாடப்படும் விழா இது. திருமயிலையில் பெண்கள் கொண்டாடும் கார்த்திகை விளக்கிடுதலைக் காணாமல் போய்விட்டாயோ பூம்பாவாய் என ஞானசம்பந்தர் பாடுவதிலிருந்து, தீபத் திருவிழா தொன்றுதொட்டு நடந்து வருகிறது என்பது விளங்குகிறது.
அது மட்டுமா?
பழந்தமிழர் சனாதனத்தைத்தான் பின்பற்றினர் என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்படுகிறதே! தீபமேற்றுதல் என்பது சனாதன தர்மத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படும் பழக்கமென்பதால், உறுதியாகக் கூறலாம் சங்கத்தமிழர்கள் சனாதனிகளே என்று.
சங்க இலக்கியம் பேசும் தீபம்
ஆமாம், இது என்ன கவிதை?
“உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளற, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்;
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர…”
இது அகநானூறு; நக்கீரர் இயற்றிய கவிதை (பாடல் 141). “மதி நிறைந்து,அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்” என்பது கார்த்திகை பௌர்ணமி. இந்த நன்னாளில்தான் வட தமிழகத்தில் ‘தீபம்’ என்றும் தென் தமிழகத்தில் ‘திருக்கார்த்திகை’ என்றும் அறியப்படும் பண்டிகை இன்றும் கொண்டாடப்படுகிறது. அகநானூறு என்னும் சங்க இலக்கியம் பொது யுகம் முன் 300 முதல் பொது யுகம் முன் 330 வரையிலான தொன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.