கோதாவரி – காவிரி ஆறு இணைப்பு திட்டம், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்

 ”கோதாவரி – காவிரி ஆறு இணைப்பு திட்டம், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்; அதன் மூலம், தண்ணீர் பிரச்னை இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும்,” என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 25 ஏக்கரில், 338.76 கோடி ரூபாய் மதிப்பில் அமையும், அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அடிக்கல் நாட்டு விழா, புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தமிழகத்தில் தான், அதிக மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. தற்போது, ஒரே ஆண்டில், 11 மருத்துவக் கல்லுாரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கடந்த, 2011ம் ஆண்டு வரை, 1,945 பேர் தான், மருத்துவம் படித்து வந்தனர். ஜெ., முதல்வராக இருந்தபோது, 855 பேர், கூடுதலாக படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார். கடந்தாண்டு, மத்திய அரசிடம், 350 இடங்கள் கூடுதலாக பெறப்பட்டது. இன்றைக்கு, பிரதமர் மோடி, 11 கல்லுாரிகளை கொடுத்துள்ளார். அதன் மூலம், 1,650 இடங்கள் புதிதாக பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். மொத்தம், 2,000 பேர், கூடுதலாக சேர்ந்து படிக்கும் நிலையை, இந்த அரசு ஏற்படுத்தி இருக்கிறது.அரசு மருத்துவக் கல்லுாரியில், 85 சதவீதம், தமிழக மாணவர்கள் தான் படிக்கின்றனர். பிற, 15 சதவீத, ‘ஆல் இந்திய கோட்டா’வில், நம் மாணவர்களும் தேர்ச்சி பெற்று, படிக்கலாம்.கோதாவரி – காவிரி ஆறு இணைப்பு திட்டம், 100 சதவீதம் நிறைவேற்றப்படும். அதன் மூலம், தமிழகம் தண்ணீர் பிரச்னை இல்லாத மாநிலமாக உருவாகும்.

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம், 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். தேர்வு நிலை நகராட்சியாக உள்ள நாமக்கல், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். கொல்லி மலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், மரபியல் பூங்கா உருவாக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.தமிழகத்திற்கு சபாஷ்!மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வின் குமார் சவுபே பேசியதாவது:தமிழகம் அனைத்திற்கும், முன்னோடியாக திகழ்கிறது. முதற்கட்டமாகவே, 11 மருத்துவக் கல்லுாரிகள் துவங்கப்படுகின்றன. இந்த வகையில், தமிழகம் தான் அதிக நிதியை பெற்றுள்ளது. நாடு முழுவதும், 533 மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. அதில், 272 அரசு கல்லுாரி, 261 தனியார் கல்லுாரிகள் அடங்கும். மருத்துவ கவுன்சிலை சீரமைத்து, அனைவருக்கும் உரிய பிரதிநித்துவம் அளிக்கப்படும். நாடு முழுவதும், 2014ல், 52 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் இருந்தனர். தற்போது, 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வரும், காலத்தில், ஒரு லட்சமாக உயரும்.

தமிழக மக்கள் நல்வாழ்த்துறை தான், இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முன்னிலையில் உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டடம் திறப்புகரூர் சணப்பிரட்டியில், 155.80 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழா, நேற்று நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டங்களை திறந்து வைத்தார்.

மேலும், குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில், 5 கோடி ரூபாய் மதிப்பிலும்; வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 1.20 கோடி ரூபாய் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களையும், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து திறந்து வைத்தார்.முதல்வரின் குட்டிக் கதை!நாமக்கலில் நடந்த விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., கூறிய குட்டிக் கதை:தன் இரு பிள்ளைகளுக்கு, இரை தேடி, தாய் கிளி சென்றது. அங்கு வந்த வேடன், அந்த இரு கிளிகளையும் கூடையில் எடுத்துச் சென்றான். வழியில், வெவ்வேறு இடங்களில், கூடையில் இருந்த கிளிகள், நழுவி விழுந்தன. அவ்வழியாக வந்த நல்லவன், ஒரு கிளியையும்; கெட்ட குணம் கொண்டவன், மற்றொரு கிளியையும் எடுத்துச் சென்றான்.சில மாதங்களுக்குப் பின், குதிரையில் வந்த அரசனை பார்த்து, கெட்டவன் வளர்த்த கிளி, ‘அய்யோ… யாரோ ஒருவன், குதிரை மீது வருகிறான். அவனைப் பிடித்து வெட்டுங்கள்’ என, பெருங்குரல் எடுத்து கத்தியது. அரசன் பயந்துபோய், தன் குதிரையை, வேறு பக்கம் ஓட்டினான். அது, நல்லவன் வாழும் வீட்டை அடைந்தது. அங்கிருந்த கிளிப்பிள்ளை, அரசன் வருவதைப் பார்த்து, ‘வாருங்கள்… தங்கள் வரவு நல்வரவாகுக. தயவு செய்து இங்கு தங்கி இளைப்பாறுங்கள்’ என்றது.அதைக் கண்ட அரசன், இரு கிளிகளுக்கு எவ்வளவு வேறுபாடு என, யோசித்தான். இரண்டு கிளிகளும், ஒன்றாக பிறந்திருந்தாலும், வெவ்வேறான சூழ்நிலையில் வளர்ந்ததே, இந்த வேறுபாட்டுக்கு காரணம் என, புரிந்தது.அ.தி.மு.க., என்பது, நல்லவன் வளர்ந்த கிளிப்பிள்ளை போன்றது. இவ்வாறு, அவர் கூறினார்.