கோடை காலத்தை பாதுகாப்பாக சமாளிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் முதல் ஜூன் வரை கடுமையாக காணப்படுகிறது. இந்த காலத்தில் சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே வெப்பத்தை குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் மற்றும் அவசர முதலுதவி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
போதுமான தண்ணீர் மற்றும் இயற்கை பானங்கள் அருந்துவது அவசியம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், எலுமிச்சை சாறு போன்ற இயற்கை பானங்கள் அருந்தலாம். இது உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கிறது. சோர்வு, மயக்கம், தலைவலி போன்ற பிரச்சினைகள் குறைகின்றன. உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவுகிறது.
கோடை காலத்தில் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றை அறிந்து முன்னெச்சரிக்கை எடுப்பது அவசியம். நீரிழப்பு, சூரிய வெப்பக்கதிர் பாதிப்பு போன்றவை பொதுவானவை. இவற்றின் அறிகுறிகள் மற்றும் முதலுதவி முறைகளை அறிந்து கொள்வது அவசியம்.
சரியான உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகமான தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, ஆரஞ்சு, எலுமிச்சை, கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். அதிக எண்ணெய் மற்றும் கார உணவுகளை குறைப்பது நல்லது. இது உடலில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து சமநிலையை பராமரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
வெப்பமான நேரங்களை தவிர்ப்பது நல்லது. மதியம் 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது தொப்பி, குடை, பயன்படுத்த வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். தினமும் 2 முறை குளிக்கலாம். வீட்டை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். பருத்தி ஆடைகள் அணிவது நல்லது. இது உடல் வெப்பநிலையை குறைப்பதில் உதவுகிறது. அதிக வியர்வை காரணமாக ஏற்படும் தோல் தொற்றுகளை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிகளை பின்பற்ற வேண்டும். உணவில் தயிர் மற்றும் மோர் சேர்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் வெளியில் விளையாடும் நேரம் காலை அல்லது மாலை ஆக இருக்க வேண்டும். வீட்டில் குளிர்ச்சியான சூழல் ஏற்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பு உடல்நலத்தை பாதுகாக்கும்.
கோடையில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் அவசர முதலுதவி குறித்து அறிதல் மிகவும் அவசியம். அவற்றைப் பற்றிக் காண்போம்…
வெப்ப அதிர்ச்சி (Heat Stroke)
அறிகுறிகள்: உடல் வெப்பம் அதிகரித்தல், தலைசுற்றல், மயக்கம், தோல் சூடாக இருப்பது, சில நேரங்களில் வியர்வை குறைதல்.
முதலுதவி: உடனடியாக குளிர்ச்சியான இடத்துக்கு மாற்ற வேண்டும். இறுக்கமான ஆடைகளை தளர்த்த வேண்டும். கழுத்து, கைமுட்டி, கைகுழி, நெற்றி போன்ற பகுதிகளில் குளிர்ந்த ஈரத் துணி வைக்க வேண்டும். விசிறி அல்லது காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். நபர் விழித்திருந்தால், சிறிது சிறிதாக தண்ணீர் அல்லது ORS கொடுக்கலாம். மயக்கம் இருந்தால் தண்ணீர் கொடுக்காமல் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
நீரிழப்பு (Dehydration)
அறிகுறிகள்:அதிக தாகம், தலைவலி, சிறுநீர் குறைவாக வருதல், மயக்கம்.
முதலுதவி: உடனே ஓய்வெடுக்கச் செய்ய வேண்டும். தண்ணீர், மோர், எலுமிச்சை, உப்பு, சர்க்கரை கலந்த பானம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். வெயிலிலிருந்து விலகி குளிர்ச்சியான இடத்தில் அமர வைக்க வேண்டும். சிறிது சிறிதாக திரவங்கள் குடிக்க வேண்டும். நிலைமை மோசமாயிருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
சூரியக்கதிர் பாதிப்பு (Sunburn)
அறிகுறிகள்: தோல் சிவத்தல், எரிச்சல், வலி.
முதலுதவி: வெயிலிலிருந்து உடனே விலக வேண்டும். பாதிக்கப்பட்ட தோலில் குளிர்ந்த நீர் தடவி அல்லது குளிர்ந்த ஈரத் துணி வைத்து தணிக்க வேண்டும். மென்மையான கற்றாழை ஜெல் அல்லது மருத்துவர் பரிந்துரைத்த கிரீம் பயன்படுத்தலாம். தோலை உரசக்கூடாது. கடுமையான வலி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
உணவு விஷத்தன்மை (Food Poisoning)
அறிகுறிகள்: வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, பலவீனம், காய்ச்சல்.
முதலுதவி: தண்ணீர், இளநீர் போன்ற திரவங்கள் கொடுத்து நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் கார உணவுகளை தவிர்க்க வேண்டும். லேசான, எளிதில் செரிக்கக்கூடிய உணவு கொடுக்கலாம். தொடர்ந்து வாந்தி, ரத்தத்துடன் வயிற்றுப்போக்கு, அதிக காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வெப்பச் சோர்வு (Heat Exhaustion)
அறிகுறிகள்: அதிக வியர்வை, பலவீனம், குளிர்ச்சியான ஈரமான தோல், தலைவலி, வாந்தி உணர்வு, தசைபிடிப்பு.
முதலுதவி: குளிர்ச்சியான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். கால்களை சற்று உயர்த்தி வைக்கலாம். தண்ணீர் கொடுக்க வேண்டும். ஈரத் துணியால் உடலைத் துடைக்க வேண்டும். ஓய்வு அவசியம். அறிகுறிகள் நீடித்தால் மருத்துவ உதவித் தேவை.
வெப்பக் கட்டிகள் (Heat Rash)
அறிகுறிகள்: சிறிய சிவப்பு புள்ளிகள், அரிப்பு, எரிச்சல், குறிப்பாக கழுத்து, முதுகு, கைகுழி பகுதிகளில் தோன்றுதல்.
முதலுதவி: உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். அதிக வியர்வை வராமல் கவனிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
வயிற்றுப்போக்கு (Diarrhoea)
அறிகுறிகள்: வயிற்றுக் கோளாறு, சோர்வு, நீரிழப்பு.
முதலுதவி: ORS கரைசல் குடிக்க வேண்டும். காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் குடிக்க வேண்டும். லேசான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது ஆபத்தானதால் அதிக கவனம் தேவை.
மயக்கம் / தலைச்சுற்றல்
(Dizziness due to heat)
அறிகுறிகள்:தலைசுற்றல், கண் இருட்டுதல், பலவீனம், நிற்க முடியாமை.
முதலுதவி: நபரை ஓய்வெடுக்கச் செய்ய வேண்டும். குளிர்ச்சியான இடத்துக்கு மாற்ற வேண்டும். தண்ணீர் அல்லது இனிப்பு-−உப்பு கலந்த பானம் கொடுக்கலாம். திடீரென எழுந்து நிற்க விடக்கூடாது. மயக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
கட்டுரையாளர்: மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்