மோடி நேற்று புனேயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் வலிமையான மெஜாரிட்டியுடன் அரசு அமைந்த பிறகு, இந்தியாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. உலக அளவில் நான் சந்திக்கும் ஒவ்வொரு தொழிலதிபர்களும், இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடு 5 மடங்கு அதிகரித்து உள்ளது.
ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் வழிமுறைக்கு 370-வது (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து) சட்டப்பிரிவு பெரும் தடைக்கல்லாக இருந்தது. இதை நீக்குவது குறித்து ஏற்கனவே மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகள் பேசினாலும், அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இல்லை.
தற்போதுதான் முதல்முறையாக இந்தியாவில் முழு மெஜாரிட்டியுடன் கூடிய அரசு அமைந்துள்ளதா? இல்லை. ஆனால் ஏற்கனவே மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தவர்களும் அதை செய்யவில்லை. 370-வது சட்டப்பிரிவை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் 21-ம் நூற்றாண்டு இந்தியா எந்த மாற்றத்துக்கும் அஞ்சாது.
நாட்டை கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதன்படி புதிய அரசு அமைந்தபிறகு அது நடந்திருக்கிறதா? இல்லையா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் யாருக்கும் இருந்ததில்லை. ஆனால் இன்று டெல்லி முதல் புனே வரை, நாட்டை கொள்ளையிட்டவர்கள் சிறைக்கு சென்றிருப்பதை நீங்கள் காணலாம்.
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறைதான். அதற்கான பணிகள் தொடங்கி விட்டன. ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசையும், திரும்ப அவர்களிடம் சேர்க்கும்வரை ஓயமாட்டேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்