கூடி வாழ்ந்தால் ஆரோக்கியம் செம்மையுறும்

தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றா நோய்களின் உக்கிரம் மேலோங்கி வருகிறது. உதாரணமாக நீரிழிவு தொற்றா நோய் என்றபோதிலும் இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு வாழ்வியல் முறைசார்ந்த விரும்பத்தகாத மாற்றங்களே முக்கிய காரணம் என்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.

உலகம் முழுவதும் நீரிழிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாரதத்தில் நீரிழிவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உலகிலேயே நீரிழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதல் நாடு பாரதம் தான் என்ற அவச்சொல் நிலைத்துவிடும். இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

நீரிழிவு நோய் அதிகரிப்புக்கு உடல் உழைப்பு குறைந்ததே பிரதான காரணம். சிறுசிறு வேலைகளைச் செய்வதற்குக் கூட நவீன கருவிகள் அணிவகுத்து வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்துவதால் சுலபமாக வேலையை முடித்துவிடலாம் என்பது உண்மை
தான். ஆனால் அதேநேரத்தில் உடல் உழைப்பு வீழ்ச்சி அடைந்துவிட்டதால் பல்வேறு உபாதைகளும் தலைதூக்குகின்றன.

குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வருதல், உலக்கையால் நெல் குத்துதல், மாவாட்டுதல் போன்றவை இயல்பான உடல் பயிற்சிகளாக அமைந்திருந்தன. ஆனால் இப்போது இவையெல்லாம் பெருமளவு அருகிவிட்டன. நகரங்களில் வாழ்வோருக்கு மட்டுமே முன்பெல்லாம் நீரிழிவு வந்தது. ஆனால் இப்போது கிராமவாசிகளுக்கும் நீரிழிவு வரத்தொடங்கிவிட்டது என்பது இயற்கை அடிக்கின்ற எச்சரிக்கை மணி.

சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்தாலும் தனித்தன்மையை காத்துக்கொள்ளவேண்டும். அதிக விலக்கம் எவ்வளவு தீங்கானதோ அதற்கு சமமானதுதான் அதிக இறுக்கம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

அண்மையில் ‘டயபெட்டாலஜியா’ என்ற மருத்துவ அறிவியல் ஆய்விதழில், ஒருநபர் சமூகத்திலிருந்து நெடுங்காலம் விலகியிருந்தால் அவருக்கு நீரிழிவு ஏற்பட வலுவான சாத்தியம் உள்ளது என்ற கருத்தை உள்ளடக்கிய கட்டுரை வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானோரிடம் ஆய்வு நடத்தப் பட்டதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப் பட்டுள்ளது.

லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை ரூத் ஹேக்கட் நடத்திய ஆய்வில் திணிக்கப்பட்ட தனிமை அல்லது சுயமாக ஏற்படுத்திக்கொண்ட ஏகாந்தம், உடல்நலத்தை படிப்படியாக சிதைக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத்தகைய சமூக விலக்கத்தால் மனஅழுத்தம் அதிகரிக்கிறது. வெறுப்பும் வெறுமையும், மேலோங்குகின்றன. வாழ்க்கையின் மீதே அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் அவர்களது நோய் எதிர்ப்பு திறன் படிப்படியாக குன்றத்தொடங்கிவிடுகிறது.

அகலா தணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

என்ற திருக்குறளை அகவயப் படுத்திக் கொண்டு, சமூகத்திலிருந்து ஒரேயடியாக விலகிவிடாமலும் தனித்துவத்தை இழந்து விடாமலும் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இயங்கினால் ஆரோக்கியம் செம்மையுறும் என்பது திண்ணம்.