திருச்சி, என்.ஐ.டி.,யில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த கருத்தரங்கை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: நிலவில் நீர் இருப்பதை நாம் தான் கண்டுபிடித்துள்ளோம். அது தான், மற்ற நாடுகள், நிலவில் ஆராய்ச்சி செய்ய ஆர்வத்தை ஏற்படுத்தியது. விண்வெளியில் அடுத்த கட்ட புரட்சிகளுக்கான செயற்கைக்கோள்கள் அனுப்பப் பட்டு வருகின்றன.
குலசேகரப்பட்டினத்தில் இருந்து குறைவான செலவில், குறைவான எரிபொருள் செலவில் செயற்கைக்கோள்கள் அனுப்ப முடியும். குலசேகரபட்டினம் சுற்றியுள்ள பகுதியில், 3,000 ஏக்கரில் ஏவுகலன்கள், எரிபொருள், உதிரி பாகங்கள் தயாரிப்பு, சிறிய செயற்கைக்கோள்கள் தயாரிப்புக்கான கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன.
மூன்றாண்டுகளில், மிகக் குறைந்த செலவில், விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் அனுப்புவதற்கான சிறந்த இடமாக குலசேகரப்பட்டினம் அமையும். அதன் அடையாளமாக, தேசிய அறிவியல் தினத்தில், குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஒரு ராக்கெட் ஏவப்படுகிறது. நாட்டின் தென் கோடியை உலகமே திரும்பி பார்க்கக் கூடிய இடமாக குலசேகரப்பட்டினம் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.