குறும் படம் வழி வகுத்த நீண்ட பயணம்

பத்திரிக்கையாளர் – திரைத் துறை – குறும்பட இயக்குனர் என்று தன் பாதையைத் தனக்குத் தானே செதுக்கிக் கொண்டு முன்னேறி வரும் வித்தகன் எஸ் சேகர் விஜயபாரதம் வாசகர்களுக்காக எம் ஆர் ஜம்புநாதனிடம்  இன்று இரண்டாவது நாளாக உரையாடுகிறார். இந்த நெடிய உரையாடலில்  சுவாரசியமான துறை தொடர்பான பல விஷயங்களை துணிச்சலாக மனம் திறந்து பேசுகிறார் வித்தகன். வாருங்கள், படித்து வீட்டை உங்கள் கருத்தைப் பகிருங்கள். (நிறைவுப் பகுதி )

குறும் படம் இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

முன்பு பணியாற்றிய துறைகளில் பெற்ற வெற்றி தந்த தன்னம்பிக்கையினாலும் துணிச்சலாலும் குறும் பட இயக்கும் ஆர்வத்தைச் செயல்படுத்தினேன். நிறைய படங்களை அவற்றின் கலைநுட்பம் சார்ந்து ரசித்த அனுபவத்தில் தொழில் நுட்பம் தெரியாமலே இயக்குநரும் ஆனேன்! அதன் கதை, திரைக்கதை, வசனமும் என்னுடையதே. முறை தவறிய வாழ்க்கை நடத்திய ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்க்கையை நியாயப்படுத்திய ஒரு குறும்படம், அது போதிக்கும் சமூக சீர்கேட்டிற்காகவே அதிகம் கொண்டாடப்பட்ட 2018 காலகட்டத்தில், அறம் சார்ந்த மனித விழுமியத்தைப் போதிக்கும் விதமாக “ஆம்பள புத்தி” குறும்படம் உருவாக்கினேன். “அதில் வரும் விலைமாது கேரக்டரை சாக்கிட்டு செக்ஸியான காட்சி வெச்சீங்க ன்னா நிறைய பார்வையாளர்கள் கிடைப்பாங்க ” என்று என் மீது நல்லெண்ணத்தில் நண்பர் ஒருவர் கூறினார். “நான் கதையை நம்பி படம் எடுக்கிறேன். சதையை நம்பி அல்ல ” என்று சொல்லி விட்டேன்.

அது புகழ்பெற்ற Behindwoods சேனலில் பதிவேற்றப்பட்டு இப்போது வரை நான்கரை லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது!

குறும்படம் தந்த வாய்ப்புகள், மாற்றங்கள் ..

அந்த குறும்படம் பார்த்த நந்தா எனும் சினிமா டைரக்டர் என்னை அழைத்து அவரது அடுத்த படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு வழங்கினார். ஒரு சேனலின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் வெப்சீரிஸுக்கு என்னிடம் கதை வாங்கி அதைத் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இப்படியாக டைரக்டர் ஆகும் கனவுடன் நான் பயணிக்கும் நிலையில் கனவுக்கும் வயிற்றுக்குமான பொருளாதாரப் போராட்டம் தலையெடுத்தது. அப்போது வேறொரு வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. என் படத்தில் நாயகியாக நடித்த காயத்ரி (ஏற்கெனவே திரைப்படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்) என்னிடம், “நீங்கள் என் மேனேஜராக இருக்கிறீர்களா? சினிமாவில் நாம் சேர்ந்து வளரலாம் ” என்றார். நானும் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். என் மூலமாக அவருக்கு மேலும் சில நடிப்பு வாய்ப்புகள் கிடைத்தன.  அதைப் பார்த்து இன்னும் சில வளரும் நடிகைகளும் என்னைத் தங்களின் freelance manager ஆக்கினார்கள். அது ஓரளவு என் பொருளாதாரத் தேவைகளுக்கு உதவுவதாக உள்ளது.

பத்திரிகை,  திரைத்  துறைகளில் உங்களுக்கு மன நிறைவளிக்கும் விஷயங்கள்

இரண்டு துறைகளில் இருப்பவர்களும் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறவர்கள். தங்களை விட இரண்டு அங்குலம் உயரத்தில் நடப்பவர்களாக பத்திரிகையாளர்களையும், நான்கு அங்குலம் உயரத்தில் நடப்பவர்களாக திரைத் துறையினரையும் பொதுமக்கள் வியந்து பார்க்கிறார்கள். சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு – மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய மிக முக்கியமான கடமை ஊடகவியலாளர்களுக்கு உள்ளது. பலர் அதைச் சரியாக நிறைவேற்றுகிறார்கள். என் கொள்ளுத் தாத்தா திரைத் துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர். மரபணு அறிவியலின்படி (Genetic science) அவரது ரத்தம்தான் திரைத் துறை நோக்கி என்னை உந்தித் தள்ளிற்று எனப் பலர் சொல்கிறார்கள். ‘நாடகத் தந்தை’ என வரலாற்றில் இடம் பெற்ற பம்மல் சம்பந்தனார்தான் என் கொள்ளுத் தாத்தா. (முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம் எழுதிய) புகழ்பெற்ற ‘மனோகரா ‘ படத்தின் கதை பம்மல் சம்பந்தனார் எழுதியதே!  நான் பம்மல் சம்பந்தனாரின் வாரிசு என்பதைப் பொதுவாக யாரிடமும் சொல்லிக் கொள்கிற வழக்கம் இல்லை. அது தெரியாமலேயே திரைப்பட இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் என்னை மதிப்புடன் நடத்துகிறார்கள்.

 

குறும்படம் இயக்கத்தில் வித்தகன்

 

இந்த துறையில் திறமை கூட இரண்டாம் பட்சம்தான். நம்பிக்கையானவன் என்ற நற்பெயரைச் சம்பாதிப்பதே அதி முக்கியம்! அந்த நம்பிக்கையை யாரிடம் ஈட்டுகிறோமோ அவர் நம்மை ஒரு போதும் கைவிட மாட்டார். இவை எனக்கு மன நிறைவளிக்கும் விஷயங்கள்.

ஆனால், இரண்டு துறைகளிலும் தமிழ்நாட்டில் எதிர் மறைக் கருத்துக்கள், ஹிந்து – தேச விரோதக் கருத்துக்கள் தான் முதன்மைப் படுத்தப் படுகின்றனவே..

நான் வலதுசாரியும் அல்ல. இடதுசாரியும் அல்ல. சாதாரண பாதசாரி. அரசியலில் மதத்தைக் கலப்பதும் எனக்குப் பிடிக்காது. ஏதேனும் லாபம் கருதி ஒரு மத நம்பிக்கையைக் காயப்படுத்துவதும் எனக்குப் பிடிக்காது.

ஊடகத்தில் ஓர் உதாரணம். ஒரு பிரபல தொலைக்காட்சியில் “பெண்கள் தாலி அணிவது அவசியமா?  என்ற தலைப்பில் விவாதம் நடத்தி ஒளி பரப்பினார்கள். இந் நிகழ்ச்சி இந்துக்கள் பலர் மனதை நோகச் செய்தது. இது கண்டனத்திற்கு உரியது. அதே தொலைக்காட்சி பின்னர் “பெண்கள் பர்தா அணிவது அவசியமா? ” என்றொரு விவாதம் நடத்தினார்கள். அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் முன்பே கடும் எதிர்ப்புகள் உருவானதால் அந்த தொலைக்காட்சி எடுத்து முடித்த அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முடிவையே கைவிட்டு விட்டது!

இந்து மதத்தினர் அதீத பொறுமைசாலிகளாக இருப்பதைப் பயன்படுத்தி அவர்களைச் சீண்டிப் பார்க்கும் இதுபோன்ற போக்கினை ஊடகங்கள் கைவிட வேண்டும்.

பத்திரிகை,  திரைத் துறை களில் நியாயமாக, நெறிப்படி , மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் வாழ்வது அவ்வளவு எளிதில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறதே, உங்கள் அனுபவம் எப்படி?

உண்மைதான். ஆனால், இந்தக் குறைபாடு எல்லா துறைகளிலும் இருக்கிறதே? அவ்வளவு ஏன்… ஒட்டுமொத்தமாக சமுதாயத்திலே கூட இருக்கிறது. ஒருவரிடம் அன்பு காட்ட வேண்டும் என்றால், ஒருவருக்கு உதவ வேண்டும் என்றால் அந்த நபர் தன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும் அல்லது தன் ஜாதிக்காரனாக இருக்க வேண்டும் என்பது போன்ற அடையாளப்படுத்தல் சமூகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதுகூட பரவாயில்லை, அப்படி ‘தன் ஆள்’ என்கிற அடையாள சட்டகத்துள் இருக்கிற மனிதன் தவறு செய்தால் அந்த தவறுக்குக் கூட முட்டுக் கொடுக்கும் போக்கு நிலவுகிறது! சமூகத்தின் ஓர் அங்கம்தான் என்ற வகையில்

குறுக்கு வழியைக் கடைபிடிப்பவர்கள், காக்கை பிடிப்பவர்கள் விரைவாக முன்னேறி மேலே வந்து விடுகிறார்கள். நீதி நெறியைக் கடைபிடிப்பவர்கள், நேர்மையுடன் மட்டும் தொழில் செய்பவர்கள் வெற்றி பெறுவது போராட்டமான ஒன்றுதான்!

“வலிமையுள்ளதே எஞ்சும்” என்னும் டார்வினின் ‘சர்வைவல் தியரி’யில் ‘வலிமை’ என்ற பதம் உடல் வலிமையை மட்டுமோ அல்லது பொதுவான அறிவுக் கூர்மையையோ மட்டும் குறிப்பதல்ல. வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளுக்கு ஈடுகொடுக்கும் திறமையும், சூழ்ச்சிகளில் அகப்படாமல் தற்காத்துக் கொள்ளும் மதி நுட்பமும் கூட அடங்கும்!

உங்கள் துறையில் நிகழ்ந்து வரும் நல்ல மாற்றங்கள்,  நம்பிக்கை யளிக்கும் விதமாய் செயல்பட்டு வரும் நபர்கள், செயல்பாடுகள்..

நம்பிக்கை அளிக்கும் திரை மனிதர்களில் என் உடனடி நினைவுக்கு வரும் ஒரு சிலரைச் சொல்கிறேன். டைரக்டர்கள் ராம், சசி, காளி ரங்கசாமி, பிரேம் போன்றவர்கள் சினிமாவின் வணிகச் சமரசங்களை நம்பாமல் நல்ல கதையையும், தம் திறமையையும் நம்பி புதிய இயக்குநர்களின் நம்பிக்கை நங்கூரமாக விளங்குகிறார்கள்.

நடிகையின் மேனேஜராக நான் அறிமுகம் ஆனாலும், என் குறும்படம் பார்த்த தாக்கத்தில் என்னை நண்பராக்கிக் கொண்ட (“தாதா 87”) டைரக்டர் விஜய் ஸ்ரீ ஜி , ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதே வெற்றியின் சூத்திரம் என்று உணர்ந்தவர்.

ஆர்டிஸ்ட் மேனேஜராகச் செயலாற்ற எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் தமிழ் சினிமாவின் முதன்மை PRO வான நிகில் முருகன். ரஜினிகாந்த் தொடங்கி எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு மேனேஜராக இருந்தவர் / இருப்பவர்… பல படங்களின் பிஆர்ஓ வாக எப்போதும் பிசியாக இருக்கும் நிகில் முருகன் எங்கள் தோளில் கைபோட்டு தோழமையுடன் பேசும் வியப்பு மனிதர்!

தயாரிப்பாளர் தனஞ்செயன் தமிழ் சினிமாவின் தரம் உயர வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் உள்ளவர்.  அவரது BOFTA  திரைப்படப் பயிற்சி கல்லூரியில் பயின்ற பலர் திறமையான இயக்குநர் களாக உருவாகி வருகிறார்கள். இயக்குநர் ஆகும் என் லட்சியத்தில் வலிமை சேர்த்தவர்களில் என் நண்பர் (‘வலைப் பேச்சு ‘) அந்தணனும் முக்கியமானவர்.கொரோனா லாக்டவுன் எல்லாரையும் போன்றே சினிமா துறையினரையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. ஆயினும், தீமையிலும் ஒரு நன்மையாக பெரிய ஹீரோக்கள் இனி தங்கள் ஊதியத்தைக் குறைத்துக் கொள்ளும் கட்டாயம் நேர்ந்திருக்கிறது என்று நம்புகிறோம்.

இணைய தளம் வாயிலாக (OTT) படங்கள் வெளியிடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

இது (லாக்டவுன் போன்ற)  காலத்தின் கட்டாயம். புதியவர்களுக்கு, குறைந்த படஜெட் படங்களுக்கு வாய்ப்பு கிட்டுகிறதே!

டைரக்டர் விஜய் ஸ்ரீஜியுடன் வித்தகன்

இந்த நேரத்தில் என் தன்னலம் துளியும் கலவாத, நாட்டு நலன் சார்ந்த ஒரு வேண்டுகோளை மத்திய அரசின் முன்வைக்கிறேன்.OTT தளங்களில் வெளியாகும் வெப்சீரிஸ் மற்றும் படங்களுக்கு சென்சார் முறை இல்லை என்பதால் அதில் வரைமுறை அற்ற ஆபாசக் காட்சிகளும். அதீத வன்முறையும், ஒரு மதத்தையோ / சாதியையோ இழிவுபடுத்தும் விதமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெறுகின்றன. எனவே திரைப்படங்களைப் போன்று இந்த டிஜிட்டல் படங்களுக்கும் தணிக்கை முறை கட்டாயமாக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.  தொன்மையான இந்திய கலாச்சாரத்தில் நம்பிக்கை உள்ள பிஜேபி அரசு இதை நிறைவேற்றும் என நான் நம்புகிறேன்.