ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாளே, பி.டி.ஐ முதன்மை ஆசிரியர் விஜய் ஜோஷிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் எடுத்துரைத்துள்ளார். முக்கிய அம்சங்கள் வருமாறு:
நாம் எதையும் கண்மூடித்தனமாக நகல் எடுக்கக்கூடாது. மேற்கத்திய தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பது விரும்பத்தக்கது அல்ல. நமது குடும்ப விழுமியங்களுக்கு ஊறு ஏற்படக்கூடாது. இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நமது குடும்ப மரபு, இயற்கையையும் உள்ளடக்கியது தான். உடை மாறுபடலாம். உணவு பழக்கம் மாறுபடலாம். ஆனால், மூத்தோரை மதித்தல், சமூகத்துக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வது குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது போன்றவை காலம் காலமாக தொடர்ந்து வருகின்றன.
பொது இடங்களில் தூய்மை நிலைநாட்டப்பட வேண்டும். இதை உலகளாவிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால், பல வெளிநாடுகளில் கூட, இந்தப் பிரச்சினை அண்மை காலமாக உக்கிரமடைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் 100 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது, இப்போதும் கச்சிதமாகப் பொருந்துகிறது. 1000 ஆண்டு நோய்க்கு, 10 ஆண்டுகளில் தீர்வு கண்டு விட முடியாது. அகலமான வாகனம் வைத்திருப்பவர்களுக்கே சாலை சொந்தம் என்ற மனோபாவம் முற்றிலும் தவறானது. அனைவருக்கும் சாலை பொதுவானது. குடும்பத்தில் இத்தகைய பண்புகளை பயிற்றுவிக்க வேண்டும். பள்ளிக் கூடங்களிலும் இவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்ச்சியை மேம்படுத்த வேண்டும்.
அறிவியல் மேம்பாட்டுக்கு ஆன்மிகம் ஒருபோதும் தடைக்கல்லாக இருக்காது. மாறாக, அறிவியல் மேம்பாட்டுக்கு அனுசரணையாகவே ஆன்மிகம் இயங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதத்தின் பெருமையும், புகழும் சர்வதேச அளவில் உயர்ந்தோங்கியுள்ளது. பாரதம் மதிக்கப்படுகிறது. பாரதத்தை பல்வேறு தரப்பினரும் வழிகாட்டியாக கருதுகிறார்கள். பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக பாரதம் விளங்குகிறது.
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டைக் கடந்த பிறகும் வீறுநடை போடுகிறது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும்
ஆர்.எஸ்.எஸ் அரவணைத்துச் செல்கிறது. பல்வேறு இடங்களுக்கு நான் சென்றுள்ளேன். பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை எடுத்துரைத்துள்ளேன். பாரதத்தின் தொன்மையான கலாச்சாரத்தைத் தான் ஆர்.எஸ்.எஸ் முதன்மைப்படுத்த விரும்புகிறது.
வெளிநாடுகளில் ஹிந்து ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில், எந்த ஆலயமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டதில்லை. ஹிந்துக்களால் எந்த நாட்டிலும் பிரச்சினை ஏற்பட்டதில்லை. யாருக்கும் நாம் தலைவலியாக இருக்கவில்லை. அனுமன் சிலையை முறைப்படி அனுமதி பெற்றுதான் நிறுவினோம். இதில் சட்டவிரோத செயல்பாடு எதுவும் இல்லை. நமக்கு சட்டவிரோத செயல்பாட்டில் நாட்டம் கிடையாது. அதை ஒருபோதும் ஊக்குவிப்பதும் இல்லை. வளைகுடா நாடுகளில் கூட ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுவாமி நாராயணர் கோயில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது. அந்த நாட்டின் அரசே இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது. வாழும் நாட்டுக்கு அனுசரணையாக, விசுவாசமாக பாரதியர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், அதே நேரத்தில் பாரதத்துடனான அவர்களது தொடர்பு இயல்பானது. இதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி