ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து எதிரி கட்சிகளாக செயல்படாமல் பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளாக செயல்பட வேண்டும். ஆளும் கட்சியின் நல்ல திட்டங்களை வரவேற்கவும் தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும் வேண்டும்.
நாடு முழுவதும் பாஜகவிற்கு அடுத்த நிலையில் இருப்பது காங்கிரஸ்தான். காங்கிரஸ் பலமான எதிர்க்கட்சியாக இருப்பது அவசியமானதும் கூட. ஒருவேளை காங்கிரஸ் பலவீனமானால் தேச விரோத, பிரிவினைவாத, ஜாதிய கட்சிகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும். அது ஆபத்தானது.
அடுத்த மாதம் நடக்க உள்ள அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலுக்கு முடிசூட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுலின் நடவடிக்கைகளும் பேச்சுக்களும் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதிகள் அவருக்கு இருப்பதாகக் காட்டவில்லை. திடீர் திடீரென்று வெளிநாடு புறப்பட்டுவிடுவார். எந்த நாட்டிற்குச் செல்கிறார்? எதற்காகச் செல்கிறார்? எப்போது திரும்பி வருவார் என்பது அவர் ஒருவருக்கே தெரிந்த ரகசியமாக உள்ளது. ஒரு தலைவரின் அரசியல் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாக இருப்பது அவசியம்.
அது மட்டுமல்ல… அவருக்கு சரியாகப் பேசக்கூடத் தெரியவில்லை. சில கூட்டங்களில் உளறி விடுகிறார். சமீபத்தில் டெல்லியில் ஒரு கூட்டத்தில் பேசும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மொத்தம் எத்தனை பெண்கள் உள்ளனர்? அந்த அமைப்பின் தினசரி கூட்டங்களில் அரைகால் சட்டை அணிந்து பெண்கள் யாராவது பங்கேற்று பார்த்திருக்கிறீர்களா என்றெல்லாம் பிதற்றியுள்ளார். பெண்களை அரைக்கால் டவுசரில் பார்க்க வேண்டும் என்று ராகுல் விரும்புகிறாரா என்று சமூக வலைதளங்களில் சிலர் விரசமாகக் கிண்டலடிக்க வழி வகுத்தது.
ஆண்களுக்கு மட்டுமே உள்ள ஒரு பள்ளியில் பெண்களை ஏன் சேர்க்க மறுக்கிறீர்கள் என்று கேட்பது பைத்தியக்காரத்தனம். அதுபோல ஆர்.எஸ்.எஸ். ஆண்களுக்கான அமைப்பு. அதில் பெண்களை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்பது அறிவீனம். பெண்களுக்காக ராஷ்ட்ர சேவிகா சமிதி எனும் அமைப்பே உள்ளது என்பதைக் கூட ராகுல் தெரிந்துவைத்துக் கொள்ளவில்லை என்பது பரிதாபம்.
ராகுல் பொறுப்பேற்க உள்ள பொறுப்புக்குத் தக தனது தகுதியையும், அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.